என்னுயிரும் நீயல்லவோ - 124


வாசிப்பு அனுபவம் - 124

நூல் : என்னுயிரும் நீயல்லவோ
ஆசிரியர் : பாலகுமாரன்
வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 384
விலை : ரூ. 250

*இந்த 2020 ஆம் ஆண்டில் நான் வாசித்து பதிவெழுதும் ஐம்பதாவது புத்தகம் இது.* மேலும், என் மனைவி எனக்கு அன்பளிப்பாய் வழங்கிய நூலுமாகையால் இந்நூலை வாசிக்கத் தொடங்கையிலேயே உள்ளுக்குள் ஒரு இனம்தெரியா ஒரு புத்துணர்ச்சி.😊 நூலின் தலைப்பும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் இருந்தது. நாவலும் அத்தகைய தன்மை வாய்ந்ததே. நூலானது, என்னுயிரும் நீயல்லவோ, அடுக்கு மல்லி, நீ பௌர்ணமி ஆகிய மூன்று நாவல்களைக் கொண்டது.

நாற்பது வயதான நாச்சியப்ப செட்டியார் பதினெட்டு வயதேயான பகவதியை இரண்டாந்தாரமாய் திருமணம் செய்து கொண்டு கேரள எல்லையில் இருக்கும் போடிமேட்டில் தனது ஏலக்காய் தோட்டத்திற்கு அழைத்து வருவது முதல் தொடங்குகிறது நாவல். நாச்சியப்பனின் முதல் மனைவியான ஆச்சிக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையாகினும், கணவனுக்காக ஒப்புக்கொண்டாள். பகவதிக்கும், ஆச்சிக்கும் அதிகமாய் தொடர்பில்லையெனினும் ஆச்சியின் உயர்குணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மனிதர்களில் அனைவரையும் அனுசரித்து நடக்கும் இதுபோன்ற நல்லவர்களும் உண்டென்பதை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார். இரண்டாந்தாரமாய் செட்டியாரின் ஆசைநாயகியாய் வந்தவர்தான் என்றாலும் முதல் மனைவிக்குரிய அத்தனை மரியாதையோடும் அவளை நடத்துகிறார். அதேநேரம், பகவதியும் கிராமத்துப் பெண் தான் எனினும் தனது திறமையால் இருபது ஏக்கர் ஏலக்காய் தோட்டத்தை நாற்பது ஏக்கராக மாற்றுகிறார்.

எதிர்பாராமல் திடீரென நாச்சியப்பன் இறந்துவிட, அதுவரையில் அமைதியாய் இருந்த சொந்தங்கள் ஒவ்வொருவரும் அவரது சொத்துக்களை அபகரிக்க எண்ணுகின்றனர். ஆச்சி, அனைவரையும் சமாளித்து தனது மகன் கதிரேசனுக்கும் தேவையான உதவிகளை செய்து போடிமேட்டில் உள்ள சொத்துகளை கவனித்து கொள்ள அனுப்புகிறார். இடையில் பகவதியைப் பார்க்க வரும் பகவதியின் ஊர்க்கார பெண்ணான சொர்ணலட்சுமிக்கும், கதிரேசனுக்கும் பழக்கமேற்பட, அதனால் பகவதி தனது பெயருக்கு இழுக்கு வருமே என அஞ்சுவதும், பகவதியை சரியாய் புரிந்து கொண்ட ஆச்சி மகனுக்கு அனுசரணையாகவும், அதே நேரம் உறவினர்களை சமாளிக்க தான் கையாளும் உத்திகளும் நாமெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடம். கதிரேசனும் பகவதியிடம் சின்னம்மா என்ற பாசத்துடன் நடந்து கொள்வதும், மரியாதை செய்வதும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

தொழிலாளர் நலனுக்காக போராடுவதாய் தம்மைக் காட்டிக் கொண்டு தம் நலன் ஒன்றினையே குறிக்கோளாய் கொண்டு அதே தொழிலாளர்களை ஏமாற்றி சுரண்டும் சங்கத் தலைவர்களையும் நாவலில் ஆங்காங்கே தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

மரணம் பற்றிய பாலகுமாரன் அவர்களின் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை. *”எந்த மரணமும் மரணமடைந்தவர் வாழ்க்கையை நினைவுபடுத்துவதோடு முடிந்து விடுவதில்லை. எல்லா மரணச் செய்தியும் கேட்பவரின் மரணத்தையும் ஞாபகப்படுத்துகிறது.”* நம்முடைய மரணத்துக்கு பிறகும் நம்மை யாரேனும் போற்றுவார்களோ அல்லது தூற்றுவார்களோ என்ற எண்ணம் பல தருணங்களில் நமக்கும் ஏற்படுவது இயற்கை தானே. ஆறுமுகம், நாராயணன் என நாச்சியப்பனால் பலனடைந்தோர் ஏராளம் பேர் அவரின் மரணத்திற்கு பிறகும் அவரை நினைவில் கொண்டிருப்பதே அவர் வாழ்ந்ததற்கான அடையாளமன்றோ.

*”மனிதர்கள் கண்ணாடியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்ணாடி கண் வழியே செல்லும் ஒரு போதை விஷயம் ரத்தத்தில் கலக்காமல் நேரே புத்திக்குப் போய்விடும் சுகமான மயக்கம். கண்ணாடியை அலட்சியப்படுத்த தெரியவில்லையெனில் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க நேரம் வீணாகும். கண்ணாடி அகம்பாவம் வளர்க்கும். தோல் ஆழமே அழகு என்பது புரியாமல் போகும்.”* - எந்நேமும் கண்ணாடி முன்னே நின்று தன்னை அழகுபடுத்திக் கொண்டிருப்பதாய் நினைத்துக் கொள்வோர் சிந்திக்க வேண்டிய வரிகள்.

தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோமோ அதேபோல் தானும் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டுமென்பதை பலரும் உணராமலே உள்ளனர். ஆனால், இக்கதை மாந்தர்கள் அவ்வகையினர் அல்லர். சிறப்பான ஓர் குடும்ப நாவலை வாசிக்க ஆர்வமுடையோர் நிச்சயம் இந்நாவலைத் தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாவது நாவலான அடுக்குமல்லி, சாவின் விளிம்பில் இருக்கும் இருபத்து நான்கு வயது இளைஞனின் பார்வையில் இவ்வுலகினை விவரிப்பது. அருமையான நடை. வாசிக்க திகட்டவில்லை.

முற்போக்கு எண்ணம் கொண்ட காதலனும், காதலியும் முன்னின்று ஒரு பாரம்பரிய திருமணத்தை நடத்தி முடிக்கும் பழமையும், புதுமையும் இணைந்து இழையோடும் கதை தான் - நீ பௌர்ணமி.

மொத்தத்தில் மூன்று நாவல்களுமே வாசிக்க சிறந்தவை தான். நூலிலிருந்து எனைக் கவர்ந்த சில வரிகள்:

*சொற்களை விரயமாக்காமலிருக்க சிந்தனையில் தெளிவு வேண்டும். சிந்தனை தெளிவாக இருக்க சூழ்நிலையைக் கிரகிக்கிற ஞானம் வேண்டும். அந்த அமைதிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அந்த பயிற்சி செய்ய சிலருக்கு கேவலப்பட்டால்தான் முனைப்பு ஏற்படும்.*

*பெண்ணை நேசிக்கத் தொடங்கி விட்ட பிறகு  அந்த நேசிப்புக்கு, மிக மெல்லியதாய் அவள் அங்கீகாரம் தந்து விட்ட பிறகு, ஆணுக்கு ஏற்படும் பரபரப்பு அசாத்தியமானது. மனம் நீர்ப்பறவையிடம் சிக்கிய மீனாய் துடிக்கத் தொடங்கி விடுகிறது.*

*தன்னை நேசிக்கத் தொடங்குவதன் முதல்படி, ஆண் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது. தன்னைக் கண்ணாடியில் பார்க்கப் பார்க்க ஆண், பெண் தன்மை கொள்கிறான். பார்க்க விருப்பமில்லாதவன் மூர்க்கர்களாக இருப்பர்.*

*முரடனை விட ஏமாற்றுபவன் கேவலமானவன்.*

வாசியுங்கள். மனிதர்களை நேசிப்போம். புத்தகங்களை சுவாசிப்போம்.  அடுத்த வாசிப்பனுபவத்தில் சந்திப்போம்.

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
15.12.2020

Comments

Post a Comment

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்