அரியநாச்சி - வாசிப்பு அனுபவம் 111
வாசிப்பு அனுபவம் - 111 நூல் : அரியநாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 120 விலை : ₹ 150 வகை : நாவல் *"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்* *ஏமப் புணையைச் சுடும்"* என்பது வள்ளுவரின் வாக்கு. அதாவது, ஒருவனது கோபமானது அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் என்பது இதன் பொருள். இக்குறளின் மையப்பொருளை விளக்கும் வகையில் அமைந்த நாவலென்றே கூட இந்நாவலைக் கூறலாம். நூலாசிரியரின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், *"கோபம், குலத்தை அழித்தக் கதை - அரியநாச்சி"* கோபத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதியாய் இருக்கும் வெள்ளையத்தேவரை சந்திக்க நிறைசூலியான மகள் அரியநாச்சி வருவதில் தொடங்குகிறது கதை. வெள்ளையத்தேவரின் மூத்த மகள் அரியநாச்சி, அடுத்த மகன் பாண்டி, இளையவள் மாயழகி. மாயழகியைத் தன் கணவனின் தம்பிக்கு மணமுடிக்க நினைக்கிறாள் அரியநாச்சி. ஆனால் தன் தம்பிக்கு கட்டிவைக்க எண்ணுகிறாள் பாண்டியின் மனைவி குமராயி. மாயழகி யாரை விரும்புகிறாளோ அவருக்கு கட்டி வைக்க வேண்டியதுதானே என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைக்கும் பல இடங்கள...