வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

வாசிப்பு அனுபவம் - 82
நூல் : பொன்னியின் செல்வன்
ஆசிரியர் : கல்கி
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்
பக்கங்கள் : 2351 (5 பாகங்களும் சேர்த்து)
விலை : ₹ 700

பல கோடி கரங்களில் பட்ட பின்னும் ஒரு ரூபாய்த்தாள் எவ்வித அழுக்குமின்றி அச்சிட்ட அந்நாளிலிருந்த அதே பளபளப்புடன் இருக்க இயலுமா?

நாடு, நகரம் நடுநடுவே பல நச்சுக் கழிவுகள் வெளியேற்றும் ஆலைகள் பலவற்றைக் கடந்தபின்னும் ஒரு நதி வானிலிருந்து வெளிவந்த அதே கோளத்துளியின் ஒழுங்கோடு மாசு மருவின்றி தூய நீராய் கடல் அடைய இயலுமா?

ஆம். இயலும். இதோ லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்தப் பின்னும் மாய்ந்து மாய்ந்து அதைப் பற்றி பேசிய பின்னும், பலவாறு எழுதிய பின்னும் இன்றும் ஒரு நூல் நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் புத்தக கண்காட்சிகளில் விற்பனையாகிக் கொண்டும் பலரால் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுக் கொண்டும் தன்னொளியில் குன்றாமல் இருக்கின்றதென்றால் அது நிச்சயம் கல்கியின் *"பொன்னியின் செல்வன்"* மட்டுமே.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்தபின் இந்து தமிழ்திசை நாளிதழ் அதிகம் விற்பனையான முதல் 10 நூல்களின் பட்டியலை வெளியிட்டு அதில் கீழே குறிப்பில் *"இதில் பொன்னியின் செல்வன் போன்ற வழக்கமாய் அதிகமாய் விற்பனையாகும் நாவல்கள் சேர்க்கப்படவில்லை*" என்ற குறிப்போடு வெளியிட்டதிலேயே நமக்கு விளங்குகிறது இந்நூலை என்றைக்கும் தேடி வாசிக்கும் வாசகர்கள் பெருகிறார்களென்று.

முதலில் நண்பர்கள் என்னை மன்னீப்பீர்களாக..... ஏனெனில், உங்களில் பலர் இந்நூலை வாசித்து அதன் அழகினில் மயங்கி உங்களையே இழந்திருப்பீர்கள். அதை பொன்னியின் செல்வன் வாசிக்கத் தொடங்கியதிலிருந்து என் புலனம் நிலைத்தகவலில் (Whatsapp Status) நான் பதிவிடும் போது நீங்கள் அளித்த மறுமொழிகளிலிருந்தே அறிந்து கொண்டேன். முதலில் இந்நூல் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதலாமா வேண்டாமா என்ற நீண்ட தயக்கத்திற்கு பிறகே தற்போது இதனை எழுதத் தொடங்கினேன். எனவே, நீங்கள் ரசித்த பகுதிகளில் பல எனது இந்த வாசிப்பு அனுபவக் கட்டுரையில் இடம் பெறாமல் போனால் தயைகூர்ந்து  பொருத்தருள்வீர்களாக....😌🙏

*வந்தியத்தேவன் வல்லவரையன்* - ஒருவேளை கல்கி இந்நாவலை எழுதிய காலகட்டத்தில் நான் வாழ்ந்திருந்தால் அவரிடம் இந்நூலுக்கு பொன்னியின் செல்வன் என்பதை விட *"வந்தியத்தேவன் வல்லவரையன்"* என்ற இப்பெயரே பொருத்தமாய் இருக்குமென முறையிட்டிருப்பேன். அவ்வளவு அதிமுக்கிய பாத்திரம் இந்த வந்தியத்தேவன். இன்னும் வெளிப்படையாய் கூறுவதாயின் குழந்தை பிறந்தால் வந்தியத்தேவன் என்ற பெயரைத் தான் வைக்க வேண்டுமென்ற அளவிற்கு பித்தாகிப் போனேன் என்பது தான் உண்மை.

*"குந்தவை*" - முன்பே வாசித்த வேறுசில நாவல்களில் இவரை வாசித்திருந்தாலும் இந்நாவலில் குந்தவை பிராட்டியின் அறிவுத்திறனை அறிந்தது மிக்க வியப்பு. ஆயினும் அக்காலத்தில் ராஜாங்க விசயத்தில் பெண்களின் பேச்சுக்கு அத்தனை மதிப்பில்லை என்பதனை அவரின் வாய்மொழியாகவே அறிகையில் நாமெல்லாம் இன்றைக்கு உள்ளத்தளவில் எத்தனை காத தூரம் முன்னேறி வந்திருக்கிறோம் என்று எண்ணி பூரிப்படைகிறேன்.

உண்மையில் கல்கி வாசகர்களின் மனத்தினை எவ்வளவு தூரம் நன்கு படித்தறிந்திருக்கிறார் என்பதை நாவலின் பல இடங்களில் கண்டு பிரமித்தேன். அதில் முதலிடம், பொன்னியின் செல்வரை அறிமுகப்படுத்தும் பகுதி. ஒரு சாதாரண யானைப் பாகன் தோற்றத்தில் மிக எளிமையாய் தான் நாவலில் அவரின் தொடக்கம் (Entry) இருக்கும். என்னடா இது ஒரு கதாநாயகனை இத்தனை எளிமையாகவா அறிமுகப்படுத்துவது என்று நான் கல்கியின் மீது கோபம் கொண்ட அடுத்த கணமே அவரின் இந்த வரிகள் கண்ணில் படுகிறது. *"இந்தக் கதைக்கு பெயரளித்த அரசிளங்குமாரரை, தமிழகத்தின் சரித்திரத்திலேயே இணை யாரும் சொல்ல முடியாத வீராதி வீரரை இவ்விதம் சமயமில்லாத சமயத்தில் அசந்தர்ப்பமான நிலைமையில் நேயர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும்படி நேர்ந்துவிட்டது. இது நேயர்களுக்கு சிறிது மனக்குறை அளிக்கக்கூடியது இயற்கைதான்"* பாருங்களேன். இவரை என்னவென்று சொல்வது. இன்னும் இதுபோல பல இடங்களை உதாரணம் கூற இயலும் என்னால். ஆனால் வேண்டாம். போதும். அதான் நீங்களே வாங்கி வாசிக்க போகிறீர்களே. பிறகென்ன...

உள்ளபடியே, இன்னும் இன்னும் நிறைய கொட்டித் தீர்த்து விடத்தான் உள்ளம் ஏங்குகிறது. ஆனால், உள்ளத்து உணர்ச்சிகளை வாக்கியங்களுக்குள் அடக்க வார்த்தைகள் தான் ஏது?

*இரவில் உறங்குகையில் கனவில் புரவிகள் ஓடியதையும், மனைவி தூங்கியபின் திருட்டுத்தனமாய் வாசித்ததையும், அமர இடங்கிடைக்காத பேருந்தில் நின்று கொண்டே வாசித்ததையும், பீன்சுக்கும், பச்சை மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாது கடித்தபிறகும் காரம் உரைக்காது படித்துக் கொண்டே உண்டதையும் எந்த வார்த்தைகளில் அடக்க முடியும்?? நிச்சயம் என்னால் இயலாது.*

ராஜராஜனைப் பற்றி பல்வேறு முரண்கள் இன்றைக்கும் என்னுள் இருந்தாலும் இந்நாவலில் ஒரு வரியையும் குறைகூற இயலவில்லை. எனினும் சுந்தர சோழரையும், ஆதித்த கரிகாலனையும், உண்மையான மதுராந்தகனையும் இன்னும் நிறைய பேசி இருக்கலாமோ என்ற ஆதங்கம் மட்டும் மேலெழுகிறது நூலை முடிக்கையில். அத்தோடு நேரடி போர்க்கள நிகழ்வுகள் இல்லாமையும் சினிமா பாணி வாசிப்பில் ஊறிவிட்ட நமக்கு சற்று ஏமாற்றமாய் தான் இருக்கும். ஆயினும் நூலின் பல பகுதிகளை வாசிக்கையில் ஹே..... இதைத்தானே அந்த படத்தில் வச்சி இருப்பாங்க. என்று தோன்றுகிறது. அதாவது பல தமிழ் சினிமா பட இயக்குனர்கள் பொன்னியின் செல்வனிலிருந்து பல பகுதிகளை நகலெடுத்து இருக்கிறார்கள் போலும். (அதாங்க சுட்டு இருக்காங்க போல)

சரி.... போதும்.... இதோட நிறுத்திப்போம்....  ஒரே ஒரு சின்ன அறிவுரை மட்டும். *புதிதாய் வாசிக்க தொடங்குபவர்கள் பொன்னியின் செல்வனிலிருந்து தொடங்குவதை விட வேறு சிறு நாவல்களை வாசித்து விட்டு அதன்பின் பொன்னியின் செல்வனோடு பயணிப்பது நலம்.....*

புத்தகங்களை பரிசளித்த அன்பு மனைவி கற்பகத்திற்கும், ஆசை அக்கா சிவசங்கரிக்கும் நன்றியென்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இராதென்பதால் அவர்களுக்கு நன்றி கூறாமல் இதனை முடிக்கிறேன்....😊

வாசிப்பே வாசல் திறக்கும் சாவி....
வாசிப்போம் வானவெளியில் சிறகின்றி பறப்போம்....

வாசிப்பும், பகிர்வும்

ஜெ. திவாகர்
14/03/2020

Comments

Popular posts from this blog

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்