நெடுங்குருதி - 123

 வாசிப்பு அனுபவம் - 123


நூல் : நெடுங்குருதி

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

பக்கங்கள் : 472

விலை : ரூ. 500




பசுபதி மே.பா. ராசாக்காப்பாளையம் என்றொரு தமிழ் திரைப்படம். அதிலொரு காட்சியில், பசுபதியின் அம்மா விவேக்கின் கையில் ஒரு பெரிய களி உருண்டையைக் கொடுத்ததும் ”இதை எங்கேயிருந்து சாப்பிட ஆரம்பிப்பது?” என்று கேட்பார். அண்ணே, இப்படி சாப்பிடணுமாக்கும் என்று பசுபதி சொல்லிக் காட்டிய பின் விவேக் சாப்பிட்டதும் அதன் ருசியின் அவரையறியாமல் கண்கலங்கிப் போவார். அதுபோல் தான் ஆறாண்டுகளுக்கு முன்  திரு. எஸ்.ரா. அவர்களின் நெடுங்குருதி என்ற இந்நூலை மேல் அட்டை இல்லாமல் சென்னையின் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய போது எஸ்.ரா. அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. இவ்வளவு தடிமனான புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்று வாங்கியது தான். வாசிப்பின் ஆரம்ப வாயிலில் இருந்த நாட்கள் அவை. எவை சலிப்பேற்படுத்தாமல் வாசிக்க ஏற்றவை? சிறுகதைகளா? நாவலா? கவிதைகளா? முதலில் இவ்வாறெல்லாம் வகைகள் இருக்கின்றன என்றும் கூட சரியாய் தெரியாத ஆரம்ப நிலையது. 


ஆனால், முதன் முதலாக எஸ்.ரா. அவர்களின் இந்நூலை வாசிக்கையில் நாவலின் போக்கில், எழுத்துகளின் வசீகரிப்பில் எஸ்.ரா. அவர்களின் அனைத்து நூல்களையும் வாசித்துவிட வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. தற்போது மறுவாசிப்பில் இந்நூலை வாசிக்கையில் முதன் முதலாய்  வாசிக்கையில் எழுந்த அந்த ஆச்சரியம் இன்றும் அடங்கவில்லை. எப்படி ஒரு எழுத்தாளனால் தன் எழுத்துக்களை வாசிக்கும் வாசகனை உணவிற்கும், இயற்கை உபாதைகளுக்கும் கூட எழுந்து செல்லும் உணர்வற்றவனாய் வாசிப்பதிலேயே மூழ்கி விடச் செய்ய முடியுமென்ற பிரமிப்பு இன்றுவரை எஸ்.ரா. அவர்களின் நூல்களை வாசிக்கையில் எழுவது அகலவேயில்லை. 


இந்நாவலைப் பற்றி உங்களிடம் பகிர முதலில் கூறியது போல, தாயின் கையால் வாங்கி உண்ணும் உருண்டை சோற்றினைப் போல,  நாவலின் எப்பகுதியிலிருந்தும் நான் தொடங்கலாம். அனைத்துப் பக்கங்களுமே நம்மை வசீகரிக்கக் கூடியவையே.  நாவல் முழுமையுமே எளிய மனிதர்களின் வாழ்வியலையே பதிவு செய்கிறது. நாவல் கோடைக்காலம், காற்றடிக் காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் நம்மை நம் பால்யத்திற்குள்ளும், தற்கால வாழ்விற்குள்ளும் இழுத்துச் சென்று நாவலோடே சேர்ந்து நடைபோட வைக்கும். 


”வேம்பலை” - நாவலின் மையப்புள்ளி இந்த ஊர் தான். நாமே விலக நினைத்தாலும் நாம் பிறந்த ஊர் நம்மை விலக்க நினைப்பதில்லை. வேம்பலையும் அப்படித்தான். வேம்பலையின் வறண்ட கோடைக்காலத்தின் செம்புழுதி பறக்கும் தெருக்களில் தொடங்கும் நாவல், பனிக்காலத்தின் அதே வேம்பலையின் செழுமை நோக்கிய நாளின் மதியப்பொழுதில் முடிகிறது. இடையில் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை நாம் வாழ்ந்து முடித்திருப்போம். 


வேம்பலையின் தெருக்களில் சிறுவனாய் சுற்றித்திரியும் நாகுவைச் சுற்றியே நாவல் நகருகிறது. நாகுவின் வாயிலாக நமக்கு அறிமுகமாகும் நடக்கவியலாத ஆதிலட்சுமி, சின்னு கிழவன், அரைகுறை உயிருடன் வைத்து தாழிக்குள் புதைக்கப்படும் சென்னம்மா கிழவி என நாகு பயப்படும் விசயங்களுக்கு நாவலோடு சேர்ந்து நாமும் பயப்படுகிறோம். நாகு ரசிக்கும் விசயங்களை நாமும் ரசிக்கிறோம். நாகுவின் அய்யாவிற்கும், அம்மாவிற்கும் இடையிலான கணவன் - மனைவி உறவு கிராமங்களின் நாம் கண்ட - காணும் கணவன் - மனைவி உறவினை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. இன்னும் சொல்லப் போனால், எனது சிறு வயது முதல் நான் கண்ட என் அப்பா-அம்மாவினை அப்படியே கண் முன் நிறுத்துகின்றனர் நாகுவின் அய்யாவும்-அம்மாவும். கணவன், மனைவி இடையிலான பிணக்குகள், அடுத்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர்களுக்கிடையிலான இணக்கம் என என்னை ஆச்சரியப்படுத்தியவர் என் அம்மாவிற்கு அடுத்தபடியாய் நாவலில் வரும் நாகுவின் அம்மா தான். 


நாகுவின் அக்காக்கள் வேணி, நீலா இருவரில் நீலா எதிர்பாராமல் இறக்கும் போது ஒட்டுமொத்த கிராமத்தோடு சேர்ந்து நாமும் அழுகிறோம். கோடைக்காலம் பகுதி முழுவதும் நாகுவின் பால்யத்தோடு நகர்கிறது. அடுத்துவரும் காற்றடிக்காலம் தாய் இறந்துவிட ஒரு மாட்டுத் தரகனாய் தனது தாத்தாவுடன் இணைந்து வாழும் நாகு அவனது இளவயது நடவடிக்கைகள் என கழிகிறது. நாகுவின் இளமையில் அவனுடன் அறிமுகமாகும் ரத்னாவதி, நாகுவிற்கு மல்லிகாவுடனான திருமணம், ரத்னாவிற்கு பிறக்கும் ஆண் குழந்தை திருமால், மல்லிகாவிற்கு பிறக்கும் பெண் குழந்தை வசந்தா, இவர்கள் பிறக்கும் முன்னே இறந்து விடும் நாகு என நாவல் அடுத்தடுத்து நாம் எதிர்பார்க்காத களத்தில் பயணிக்கிறது. அடுத்தடுத்த பகுதிகள் இவர்களைச் சுற்றியே நகர்ந்தாலும் எல்லா இடத்திலும் நம்மையுமறியாமல் நமக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் குருதியினைப் போல் வேம்பலை அவர்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றியும் நாவல் பேசுகிறது. நாவலின் முக்கியமான பகுதி அது. தவறவிடக் கூடாத வரலாற்றுப் பதிவும் கூட. எளிய மனிதர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக - ஒரு வேளை உணவிற்காக படும் பாடுகளை வார்த்தைகளில் விளக்கி விட முடியுமா என்ன? ஆனாலும் நெடுங்குருதி அதனை சிறப்பாக செய்கிறது. மனிதர்கள் தாம் செய்யும் தொழிலால் மட்டும் இழிந்தவர்கள் ஆகி விட மாட்டார்கள், அவர்களுக்குள்ளும் மனிதத்தன்மை உள்ளது, உலகத்துக்கு சக உயிர்களை அவர்கள் அளவுக்கு நேசிப்பவர் எவருமில்லை என்பதையெல்லாம் ரத்னாவதி, ஜெயராணி முதலிய பாத்திரங்கள் வாயிலாக உணர முடிகிறது.


ஒரு நூல் நம்மிடம் என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று நினைக்கிறீர்கள். என்னளவில் சக மனிதர்கள் மீதினில் அன்பை பொழியச் செய்தலே - அதற்கான உந்துதலை ஏற்படுத்ததுதலே ஒரு நூலின் அதிகபட்ச வெற்றியாய் இருக்குமென்று கருதுகின்றேன். அவ்வகையில் மனிதர்கள்  அனைவருமே நேசிக்கத் தகுந்தவர்களே, அவர்களின் குற்றங்களும் சந்தர்ப்பவசத்தால் செய்ய நேர்ந்தவையே அவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளத் தகுந்தவர்களே என்பதை நெடுங்குருதி என்னுள் ஆழப்புதைத்து விட்டது என்றே கூற வேண்டும். 


இயலுமெனில் நூலை வாசியுங்கள். உங்களுக்குள்ளும் நிச்சயம் இத்தகையதொரு மாற்றம் உங்களை அறியாமலே உருக்கொண்டிருப்பதை உணருவீர்கள். வாசிப்போம். வாசிப்பே வாழ்வின் வாயிலை அகலத் திறந்து இன்பம் கொள்ள ஒரே வழி. வாசிப்பை நேசிப்போம். வாசிப்பே சுவாசிப்பாகட்டும்.


வாசிப்பும், பகிர்வும்


திவாகர். ஜெ

03.12.2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்