119 - பள்ளம் - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் - 119
நூல் : பள்ளம்
ஆசிரியர் : சுந்தர ராமசாமி
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 79
விலை : ரூ. 100
சுந்தர ராமசாமி அவர்களின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் 1970-80 களில் வெளிவந்தவை. கதைகளுக்கு காலம் ஒரு எல்லைக்கோடா என்ன? இப்போதும் நம் சமகாலத்திற்கும் பொருந்துவனவாய் அமைந்துள்ள தொகுப்பினை கொண்ட நூலென்று இதனைக் கூறலாம்.
முதல் சிறுகதையான, *”ரத்னாபாயின் ஆங்கிலம்”* - தன் கௌரவத்தினை மேம்படுத்திக் காண்பிப்பதற்காக தன் தோழியிடம் தான் பகட்டாய் வாழ்வதாய் காட்டிக் கொள்ளும் ரத்னாபாய் அதனாலேயே பொருளாதார ரீதியாய் எவ்வளவு சிரமப்பட நேரிடுகிறது என்பதனை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைக்கும் நம்மில் பலரும் இப்படித்தான் - பகட்டான வாழ்வு வாழ்வதாய் அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்வதற்காக தேவையற்ற - அத்தியாவசியமற்ற பொருட்களையெல்லாம் வீட்டில் குவித்து வைத்து அதனால் படும் அவஸ்தைகளை அனுதினமும் நேரில் கண்டும் அனுபவித்தும் தான் வருகிறோம் அல்லவா?
இச்சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை என்றால் அது நிச்சயம் இரண்டாவது சிறுகதையான, *”குரங்குகள்”* சிறுகதைகள் தான். இதோ இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் தருணத்திலும் வெளியே எங்கள் வீட்டு வாழை மரங்களில் ஏறி குதித்து இப்பொழுதுதான் வெளிவந்திருக்கும் குருத்தினை குரங்குகள் நாசம் செய்யும் சத்தம் உங்களுக்கு கேட்கிறது தானே? இதனை அப்படியே படம் பிடித்தாற்போல் உள்ளது சு.ரா.வின் இந்த சிறுகதை. அத்தோடு இது வெறும் குரங்குகளைப் பற்றிய கதை மாத்திரமல்ல. தன் நிலையை உணராது - மற்றவர் தரும் சலுகைகளை தனக்கு அவர்கள் பயந்து விட்டதாய் - அடிபணிந்து விட்டதாய் கருதி எக்காளமிட்டு விரைவில் அழிவை சந்திக்க காத்திருக்கும் மனிதர்களுக்கான பாடமுமாகும். இதில் வரும் ஒரு வரி எனை மிகவும் கவர்நதது. *”சரிவுகள், சரியும் நேரத்தில் உணரத்தக்கவை அல்ல போலும்.”* உண்மைதான். நாம் சரியும் நிமிடங்களை உணராமலேயே பல நேரங்களில் நம் சரிவுக்கு நாமே காரணமாகி விடுகிறோம் இச்சிறுகதையில் வரும் குரங்குகளைப் போல. அதிலும் கையிலிருக்கும் பாம்பினை கீழே போட்டாலே போதும் தாம் பிழைத்து விடுவோம் என்பதனை அறியாமல், விடாப்பிடியாய் அதனைப் பற்றிக் கொண்டே இருந்து உயிர் துறக்கும் குரங்குகளைப் போல தான் நாமும் நம் வாழ்வின் இறுதிவரை கோபம், அகங்காரம், கயமைக் குணங்களை கைவிடாமல் இறுகப் பற்றி அதனாலேயே அழியவும் செய்கிறோம் என்பதனை இக்கதை வாயிலாய் நம்மால் உணர இயலும்.
புதிய சிந்தனைகள் ஏதுமற்று தந்தையின் சொற்படியே நடக்க வேண்டிய ஒரு மகனின் மனவேதனையை அழகாய் - ஆழமாய் - உணர்வுப் பூர்வமாய் பதிவு செய்திருக்கும் கதை - *”பள்ளம்”* சுயமாய் ஏதும் முடிவெடுக்க இயலாது தந்தையின் நிழலிலேயே முழுதுமாய் தஞ்சம் கொண்டிருக்கும் மகன், தங்களின் கடையை கவனித்து கொள்ள தந்தையின் கட்டளையின் பேரில் நடந்து செல்கையில் இவ்வாறு நினைக்கிறான். *”வெளிப் பிரக்ஞை ரொம்பவும் மங்கிப்போனதில், மற்றொரு அசையும் பொருளில் என் உடலேறி உட்கார்ந்து கொண்ட மாதிரி நடந்து கொண்டிருந்தேன். ஒரு கல்தூணை காலால் உதைத்து எலும்பை முறித்துக்கொண்டு விழுந்து கிடக்க வேண்டும் போலிருந்தது.”* அனுபவித்தவர்களுக்கே இவ்வார்த்தைகளின் வலி புரியும். நான் அனுபவித்திருக்கிறேன். இவ்வாக்கியத்தின் வலியினை உணர்கிறேன்.
ஓவியம், கொந்தளிப்பு, ஆத்மாராம் சோயித்ராம் உள்ளிட்ட நூலில் இடம்பெற்றுள்ள பிற சிறுகதைகளும் வாசிக்க திகட்டாதவை. வாசியுங்கள் இன்பம் நுகருங்கள்.
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
06.10.2020

Comments
Post a Comment