117 - கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள்

 வாசிப்பு அனுபவம் - 117

நூல் : கலீல் ஜிப்ரான்

ஆசிரியர் : கலீல் ஜிப்ரான்

தமிழில் : மு.ந. புகழேந்தி


வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பக்கங்கள் : 80

விலை : 40

கடிதம் எழுதுதல் என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதில்லை. எனது சிறு வயதில், எங்கள் வீட்டில் உறவினர்களிடமிருந்து வரும் கடிதங்களை வாசற்படிக்கருகில் ஒரு வளைந்த இரும்புக் கம்பியில் குத்தி தொங்கவிட்டிருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்த இரும்புக் கம்பி முழுவதுமாக நிரம்பி விட்டபின் பழைய கடிதங்களை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். அப்படி தூக்கிப்போடும் போது முந்தைய கடிதங்களை வாசிக்கையில் அதில் எழுதியவர்களின் சுக துக்கங்கள், அழுகை, மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் வாசித்து, கடந்து வந்த பாதையை நினைத்து கலங்கியதுண்டு. இப்பொழுது நினைக்கையில் அப்பொக்கிஷங்களை சேகரித்து வைக்காமல் விட்டு விட்டோமே என்று மனம் ஏங்குகிறது. 


சாதாரணமாக நலம் விசாரித்து எழுதும் கடிதங்களுக்கே மனம் இப்படி ஏங்குகிறதெனில் உலகின் கண்களை அகலத்  திறக்கச் செய்த கடிதங்கள் வரலாற்றின் கைகளில் கிடைக்காமல் போயிருந்தால்…? நிறைய உண்மைகள் வெளிவராமலே புதைந்திருக்குமல்லவா? உலகப் புகழ்பெற்ற கடிதங்கள் பலவற்றை நாம் அறிந்திருப்போம். பேரறிஞர் அண்ணா தன் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்கள், நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் வகுப்பாசிரியைக்கு எழுதிய கடிதம், ந. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் என வரலாற்றின் பக்கங்களில் சாகாவரம் பெற்ற கடிதங்கள் பல. 


இவற்றிலிருந்து என்றென்றைக்கும் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் பாடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கடித இலக்கியம் தான் *"கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள்"*


காதல் கடிதங்களில் என்ன பெரிதாய் இருந்து விடப் போகின்றது? அதே மானே, தேனே, பொன்மானே தானே? என்று நாம் நினைப்போமாயின் நம் நினைப்பு, நூலை வாசிக்கையில் சற்றே பொய்த்துதான் போகும்.


தீர்க்கதரிசி, பைத்தியக்காரன், முறிந்த சிறகுகள் உள்ளிட்ட பல்வேறு ஆகச்சிறந்த நூல்களின் ஆசிரியர் கலீல் ஜிப்ரான் தன்  உயிர்த் தோழியான  மேரி ஹாஸ்கலுக்கு தனது இருபத்தொன்றாம் வயது முதல் தன் நாற்பத்தெட்டாம் வயதில் தான் மரணம் அடையும் வரை தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இருவருக்கும் பத்து வருடங்கள் வயது வித்தியாசம். 


கரைதெரியாத கடலில் கலங்கடிக்கும் அலைகளுக்கிடையில் தனியாளாய் சிக்கிக் கொண்ட ஒருவனுக்கு கிடைக்கும் துடுப்பினைப் போல, துயரங்களின் பிடியில் வாழ்க்கை எனும் பெருங்கடலில் சிக்கிய கலீலுக்கு துடுப்பாய் மேரி இருந்திருக்கிறாள் என்பதை அவரது கடிதங்களை வாசிக்கையில் உணர இயல்கிறது. 


ஓரிடத்தில் ஜிப்ரான் இவ்வாறு கூறுகிறார்  *”நீ தந்த உற்சாகத்தில் பத்து ஆண்டுகளில், நான் முப்பது ஆண்டுகள் செய்யும் வேலையைச் செய்து முடித்திருக்கிறேன்”*

உண்மைதான். ஜிப்ரானின் கடிதங்களை வாசிக்கையில் அவர் எத்தனை தூரம் உழைத்திருக்கிறார் என அறிய முடிகிறது. 


நாட்குறிப்பினை எழுதுவதைப் போல தனது ஒவ்வொரு செய்கைகளையும் அவர் தனது தோழி - ஆம்.  அவரின் தோழி தான். அவரது கடிதங்களை வாசித்தபின் மேரியை என்னால் அவரின் காதலி என்ற எளிய ஒரு வார்த்தைக்குள் அடைக்க விருப்பமில்லை. அவருக்கு அவள் எல்லாமுமாய் இருந்திருக்கிறாள். தோழி என்பதே பொருத்தமாய் இருக்குமென கருதுகிறேன். எங்கே விட்டேன்? ஆங்… நாட்குறிப்பினை எழுதுவதைப் போல தனது ஒவ்வொரு செய்கைகளையும் அவர் தனது தோழி மேரிக்கு வரிவிடாமல் ஒப்பிக்கிறார்.  இப்படியெல்லாம் கூட ஒரு மனிதன் தன் தோழிக்கு கடிதம் எழுதியிருப்பாரா என வியந்து கொண்டே தான் நூலினை வாசித்தேன்.


மேரியிடமிருந்து வரும் கடிதங்களே ஜிப்ரானையும் அவரின் எழுத்துகளையும் உயிர்ப்புடன் வைத்திருந்தன எனலாம். பொருளாதார ரீதியாகவும் மேரி பல விதங்களில் ஜிப்ரானுக்கு உதவியிருப்பதனை கடிதங்களின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. 


ஜிப்ரானின் நூல்களில் மிளிரும் தத்துவங்களைப் போன்றே அவரின் கடிதங்களிலும் ஏராளமாய் தத்துவ வரிகள் மிளிர்கின்றன. காமம் கலவாத காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளுக்கும் ஜிப்ரானின் கடிதங்களில் பஞ்சமில்லை.

ஜிப்ரானுக்கும், மேரிக்கும் இடையிலான உறவினை ஜிப்ரானின் இந்த வரிகள் நமக்கு உணர்த்தும்: *”மோசமான ஒரு காதலுக்காக பத்திரமான ஒரு நட்பை மாற்றிக் கொள்ள நான் தயாராயில்லை. நான் இறக்கும் வரை இந்த நட்பை நான் இழக்க தயாராயில்லை”*


*"சொர்க்கமே ஆனாலும் அங்கே ஒரு தோழி இல்லையென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது”* எத்தனை ஆத்மார்த்தமான நட்பு அவர்களுடையது. அதே நேரம் இந்த வரியை கவனியுங்களேன். *”எனக்கு பிடித்த அனைத்தையும் விட பிடித்தவளே!”* என்று மேரியை விளிக்கிறார் ஜிப்ரான் - இவை வெறும் ஒரு தோழிக்கான வரிகளா என்ன?


அதேபோல் இந்நூலினை வெறும் காதல் கடிதங்கள் என்ற ஒற்றை எல்லைக்குள் அடைப்பதையும் என்னால் ஏற்க இயலவில்லை. மனித வாழ்வியலுக்கான பல்வேறு தத்துவங்களையும் தனது கடிதங்களில் ஜிப்ரான் வெளிப்படுத்தியுள்ளார்.

*”வாழ்க்கை அளவிட முடியா பல அற்புதக் காட்சிகள் நிறைந்ததாகும். அதில் இனிமையான சந்தர்ப்பங்கள் நிறைந்துள்ளன. ஆனால், ஆட்கள் மிகவும் குறுகிய எண்ணங்களும், பேச்சுகளும் கொண்டவர்கள். வாழ்க்கை மிகவும் உயர்ந்தது. மனிதன் மிகவும் சிறியவன். மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே ஒரு பெருங்கடலே உள்ளது.”* - இன்னும் பல வரிகளை இதுபோல் உதாரணம் கூற இயலும்.


அத்தோடு, ஜிப்ரானின் பல வரிகள் என்னை, எனக்கும் எந்தன் இணையாளுக்கும் இடையில் காதல் மலர்ந்த தருணங்களுக்கு அழைத்துச் சென்றன.  இப்பொழுது அவளிடம் நான் கூற விரும்பும் வரிகளாக கலீல் ஜிப்ரானின் இவ்வரிகளையே அவளுக்கு சமர்ப்பிக்கலாமென்று இருக்கிறேன். *”நாம் இருவரும் சேர்ந்து கண்டு ரசித்த இடங்கள் அனைத்திற்கும் மறுபடியும் நான் போக விரும்புகிறேன். இருந்தாலும் இரண்டு இணை கண்களால் காணும்பொழுது காட்சிகள் வித்தியாசமாகத் தான் தெரியும். அதனால், நீயும் வர வேண்டும் - முன்பே நாம் பார்த்திருந்த இடங்கள்தான் என்றாலும் மீண்டும் நாம் நம் நான்கு கண்களால் காணலாம்.”*


*”என்னிலுள்ள சகல சத்தங்களையும் ஒன்றுதிரட்டி நான் ஒருமுறை குரல் எழுப்பபட்டுமா? உன்னை நான் நேசிக்கிறேன் என்று அறிவிக்கட்டுமா?”* எவ்வளவு மென்மையான காதல் பேசும் வரிகள்!


ஜிப்ரானின் கடிதங்களில் காதலோடு கலந்து அந்தக் கால அரசியல் சூழ்நிலைகளையும் தன் தோழிக்கு தன் கடிதங்களின் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கிறார். இந்நூல் காதலர்களுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றம் மட்டுமல்ல அதையும் தாண்டி நமக்கு பல விசயங்களையும் உணர்த்தி செல்லும் வரலாற்று ஆவணமுமாகும். 


இந்நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை முடிக்கவே மனம் இணங்க மறுக்கிறது. ஜிப்ரானின் ஒவ்வொரு வரியும் என்னை அந்தளவுக்கு கவர்ந்து விட்டன.

 இறுதியாக ஜிப்ரானின் இவ்வரிகளோடு மனமின்றி இதனை முடிக்கிறேன். *”உன் அருகில் இருக்கும் பொழுது, உலகத்தில் வேறு எங்கும் இருப்பதை விடவும், சுதந்திரமாக இருக்கிறது. அழகை ரசிக்க முடிகிறது.”*

வாசியுங்கள்..... புத்துணர்வும், புது தெம்பும் பெறுவீர்கள்....


வாசிப்பும், பகிர்வும்


~ *திவாகர். ஜெ* ~

21.09.2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்