116 - தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

 வாசிப்பு அனுபவம் - 116


நூல் : தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு

பக்கங்கள் : 30

விலை : ₹ 3



          பெரியார் - இன்றைக்கு வரை இப்பெயரில் தொடங்கி இவரைப் பற்றி ஏதேனும் பேசினாலோ அல்லது பொதுத்தளத்தில் எழுதினாலோ அப்படி பேசுவோர் எழுதுவோர், உடனே மிகப்பெரிய அளவில் அதற்கான எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஒரு மனிதனால் மக்களினத்திற்கு எதிரானோருக்கு இத்தகைய அச்சுறுத்தலை தரவியலும் என்பதற்கு பெரியாரே சாட்சி.

          அத்தகைய ஒரு சமூகப் போராளியின் வரலாற்றினை - சமநீதி மறுக்கப்பட்ட மக்களுக்காகவே சிந்தித்து அவர்களுக்காகவே தன் இறுதி மூச்சு வரை சுற்றி சுழன்ற ஒரு மாமனிதனின் சுயசரிதையை 30 பக்கங்களுக்குள் அடக்கவியலுமா என்ன? ஆனாலும் அத்றகுள்ளாகவே தன் வாழ்வின் பக்கங்களை எழுதி நமக்கான வாழ்க்கையை உணர்த்துகிறார். ஏனெனில் அவர்தான் பெரியார். 

          "இறுதி மூச்சு வரை" என்ற இவ்வார்த்தை ஏதோ எதுகை, மோனை நயத்திற்காக சொற்றொடரை இட்டு நிரப்ப வந்த வார்த்தையல்ல. 90களைக் கடந்த வயதினிலும் மூத்திரப் பையுடனும், உயிர்போகும் வலியுடனும் வீழ்ந்து கிடக்கும் ஓர் இனத்தின் எழுச்சிக்காக பாடுபட்ட ஒரு கிழவனின் உண்மை தன்மையின் வெளிப்பாடு அது.  

          "எனக்கு, 'ஏதாவது எழுதலாமா' என்ற உணர்ச்சி வந்தது. உடனே 'என்ன எழுதலாம்?' என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்." என்று இந்நூலைத் தொடங்கும் பெரியார், தன் இளம்பிராயத்தில் தான் செய்த குறும்புகள், தன் குடும்பச் சூழல், தான் எவ்வாறு எதுவொன்றையும் கேள்வி கேட்டு தெளிவு பெறும் தன்மை பெற்றேன் என ஒவ்வொன்றையும் கூறுகையில் வருங்காலத்தில் நாடே கொண்டாடப்போகின்ற ஒரு தலைவனின் எவ்வித அறிகுறியும் அவற்றில் தெரியக் காணோம். ஆயினும் நினைத்ததை செய்த - எதிர்த்து கேள்வி கேட்ட அத்தன்மை தான் அவரை இத்தகைய ஒரு மாபெரும் தலைவனாக்கியிருக்கிறது என்பதை உணர இயல்கிறது. 

          "நான், சிறிது சுறுசுறுப்பான சுபாவமுள்ள சிறுவன். அதோடு வேடிக்கையாக மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம்.  ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசய கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம். மற்றொன்று மான, அவமானம் இல்லாமல் சங்கதிகளை கீழ்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம். நான் அதிகமாக வேடிக்கைக் குறும்புத்தனமாக பேசுவது வழக்கம்.  ஆதலால் அது இரண்டாம் தரத்தை சேர்ந்தது. வெகு தாராளமாக கொச்சையாக சங்கதிகளை பச்சையாக பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு" 

          தன் சுய வரலாற்றினை எழுதும் ஒருவர் தன்னைப் பற்றிய பெருமிதங்களையே நூல் முழுக்க பேசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், பெரியார் அப்படியல்ல. நடந்த உண்மையினை தான் யார் என்பதனை எவ்வித ஒளிவு மறைவுமின்றி எழுதிச் செல்கிறார். 

          பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்ற சிறிய கூண்டுக்குள் அடைப்பது சரியல்ல என்பதை நூலை வாசிக்கையில் நம்மால் உணர்ந்து கொள்ள இயலும். 

          தான் காங்கிரசில் சேர்ந்ததும், விலகியதும் ஏன்? என்பதை எழுதப் போவதாக முதலிலேயே பெரியார் கூறியதால் இந்நூலின் பிற்பகுதி அதைப் பற்றியே நகர்கிறது. இது அக்கால அரசியலை நாம் உணரவும் வழிவகுக்கிறது. இறுதியாக, "நான் தீவிர தேசியவாதியாகிவிட்டேன்" என்பதோடு இந்நூலை முடிக்கிறார் பெரியார். 

          பெரியாரை வாசித்தல் என்பது ஒருவித இன்பம் தரும் - அறிவினைத் தெளிவு பெறச் செய்யும் போதை. அதனை அனுபவித்தவர்கள் அதிலிருந்து மீண்டுவர அவசியமேற்படுவதில்லை. வீழ்ந்தோர் மீண்டு எழ பாடுபட்டு, மூட நம்பிக்கை வேரறுத்து சக மனிதரை மனிதராய் மதிக்கும் மாண்புமிக்க ஒவ்வொருவரிடத்திலும் பெரியார் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார். 


#HBD_கிழவா


வாசிப்பும், பகிர்வும்


~ *திவாகர். ஜெ* ~

17/09/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்