115 - சிலப்பதிகாரம் - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் - 115
நூல் : சிலப்பதிகாரம்
மூல வடிவம் : இளங்கோவடிகள்
நாவல் வடிவம் : கே.ஜி. ஜவர்லால்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 135
விலை : 150
ஒரு நாவலை வாசிப்பதென்பது ஒரு புது வகையான அனுபவத்தையும் அதில் வரும் மாந்தர்களோடு நம்மையும் பொருத்திப் பார்த்து வாசித்து முடிக்கும் கணம் வரை அவர்களோடே பயணிக்க வைப்பது. அதே நேரம் ஓர் இலக்கியம் வாசிப்பதென்பது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது, அம்மொழியின் - தமிழின் இலக்கண - இலக்கிய சுவையையும், மேன்மையையும், மொழியின் அழகியலையும் ரசித்துக் கொண்டே மக்களின் வாழ்வியலுக்கான வழிகாட்டுதலையும் வழங்க வல்லவை இலக்கியங்கள்.
இந்த இரு வரையறைகளும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு படைப்பு தான் கிழக்கு பதிப்பகத்தாரால் நாவல் வடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கிய படைப்புகள். நிச்சயம் இத்தகைய மாபெரும் முயற்சிக்கு பதிப்பகத்தாருக்கு நாம் நம் பாராட்டுகளைத் தெரிவித்து ஆக வேண்டும். ஏனெனில், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காவியங்களை பள்ளிப் பருவத்தில் ஒரு 4 மதிப்பெண் அடிமாறாமல் எழுதுக பகுதிக்காக அதன் அர்த்தம் புரியாமலே வாசித்துதான் கடந்து வந்திருப்போம்.(தமிழாசிரியர் என்னதான் அரும்பாடுபட்டு வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் கொடுத்திருந்தாலும் சரி…)
ஆனால், இலக்கியங்களை இதுபோல் நாவல் வடிவில் வாசிக்கையில் நமக்கு அவ்விலக்கியத்தின் மீதான மதிப்பு கூடுவதோடு அதனை அதே மூல வடிவிலும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்தை இந்நூலாசிரியர் கச்சிதமாக நம்மிடம் ஏற்படுத்திச் செல்கிறார். மூல நூலில் வரும் அத்தனை வருணனைகளையும் நாவலிலும் ஆங்காங்கே பொங்கலின் மீது தூவப்பட்ட முந்திரியாய் சிந்திச் செல்கிறார்.
இந்நாவலின் சிறப்பு என்று நான் கருதுவது மூல நூலினை அப்படியே பெயர்த்து தராமல் அம்மூல நூல் தோன்றியதற்கான காரணங்களையும் அதே மாந்தர்களைக் கொண்டு தொடங்கி அவர்களின் வாயிலாகவே நாவலை நகர்த்திச் செல்கிறார். அருமையான கதை சொல்லல் நடை.
சிலப்பதிகாரத்தினைப் பற்றி நான் சொல்ல என்னவிருக்கிறது. கதை வாயிலாகவும், கலைஞர் அவர்களின் மகத்தான வசனங்களைக் கொண்ட திரைப்படம் வாயிலாகவும் நம் மக்கள் மீண்டும் மீண்டும் கண்டும், கேட்டும் ரசித்த காவியமாயிற்றே இது. இந்நூலினை வாசிக்கையில் என்னைப்போன்றே உங்களுக்கும் வார்த்தைகளின் அர்த்தம் தேடியாகினும் மூல நூலினை வாசித்து அதன் இலக்கிய சுவையை அணுஅணுவாய் ரசிக்க வேண்டுமென்ற ஆர்வமெழும் என்பது உறுதி.
இதுவரை நாம் கேள்விப்படாத பல பாத்திரங்களும் சிலப்பதிகாரத்தில் உண்டு என்பதை நாவலை வாசிக்கையில் தான் உணர முடிந்தது. அத்தோடு, நாவலில் இடையிடையே ஆசிரியர் தனக்கான வரிகளையும் இட்டு நிரப்பி நாவலினை மேலும் மெருகேற்றியுள்ளார்.
*”பதவி என்பதே தொல்லை பிடித்தது. வேண்டாத பழிச்சொற்கள் வந்து சேரும். ஒருமுறை சுவைத்து விட்டால் மதுவைவிடக் கொடுமையாக நம்மைப் பற்றிக்கொள்ளும்.”*
*“காமம் கண்களின் வழியே உள்ளே செலுத்தப்படுவது. வார்த்தைகளாக வெளியே வருவது. தொடுதல்களால் தீட்டப்படுவது. அணைத்தாலும் அணையாதது. கொடுத்தால் குறையாதது. பரிமாறுபவரும் பசியாறும் வினோத விருந்து அது.”*
*”எப்போது உறவுகளையும், நட்பையும் அறிவுகொண்டு பார்க்க ஆரம்பிக்கிறோமோ அப்போது அன்பு வலுவிழக்க ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில் அன்பு ஒருபோதும் காரண காரியங்களைப் பார்ப்பது கிடையாது.”*
*“கஷ்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைக் கடக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியாது. எல்லாமே சுகங்களாக மட்டுமே இருந்தாலும் வாழ்க்கை அலுத்துதான் போகும் என்பது கஷ்டங்களைச் சந்திக்கிறவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.”*
*”பயப்படும்போது எதுவும் தவறாக நடக்காததும், துணிவாக இருக்கும்போது துன்பங்கள் நேர்வதுமாக வாழ்க்கை அனுமானிக்க முடியாத நிகழ்வுகளைக் கொண்டது.”*
இவையெல்லாம் நூலாசிரியரின் சொந்த வாக்கியங்களா அல்லது மூல நூலிலிருந்த இலக்கிய வடிவிலான வார்த்தைகளை மெருகேற்றி உருவாக்கிய சொற்றொடர்களா என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் மிகப்பெரும் அனுபவங்களை தரும் நூலாக இது அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இலக்கியத்தை அதன் சுய வடிவிலேயே வாசித்து பொருள் உணர சிரமப்படுபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
வாசிப்பும், பகிர்வும்
*~ திவாகர். ஜெ ~*
11.09.2020

Comments
Post a Comment