114 - இந்தியாவில் சாதிகள்
வாசிப்பு அனுபவம் - 114
நூல்: இந்தியாவில் சாதிகள்
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 32
விலை : ₹ 25
1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான அம்பேத்கர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை தான் "இந்தியாவில் சாதிகள்" என்ற இந்நூல்.
இக்கட்டுரையினை அவர் மூன்று பாகமாக பிரிக்கிறார். 1. சாதி முறையின் தோற்றம், 2. அமைப்பியக்கம், 3. அதன் வளர்ச்சி. ஆய்வு மாணவராக இருக்கையில் அம்பேத்கர் எழுதிய கட்டுரை என்பதால் இதில் அவரது பிந்தைய கால அரசியல் சிந்தனைகள் ஏதுமற்று முழுக்க முழுக்க ஆய்வு அடிப்படையிலான ஒரு கட்டுரையாகவே இது அமைந்துள்ளது.
சாதி குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல விதமான ஆய்வுகள் நடத்தி இருந்தாலும் அம்பேத்கர் அவர்களின் பார்வை அவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.
ஆம். சாதி முறையின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்வைப்பது திருமண உறவு. என்னளவில் இதுவரை நான் வாசித்த எந்த ஒரு நூலிலும் சாதி முறையின் தோற்றத்திற்கு திருமணம் எப்படி அடிப்படைக் காரணமாக இருந்தது என்பதை இத்தனை விலாவாரியாக எந்த நூலிலும் விளக்கியதாக படிக்கவில்லை. இதனை ஏதோ எடுத்த எடுப்பில் தம்போக்கில் அம்பேத்கர் அவர்கள் கூறவில்லை. பல்வேறு அறிஞர்களின் பலதரப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவற்றில் இருந்து எல்லாம் ஒரு பொதுக்கருத்தை வருவிக்கையில் சாதியின் உருவாக்கத்திற்கு காரணமாக அனைத்திற்கும் தலைமையில் நிற்பது திருமண முறையே என்பதை அறுதியிடுகிறார்.
உண்மையில், இந்நூலை வாசிக்கையில் தான் எங்கள் ஊரிலும் நான் சார்ந்திருப்பதாக கருதப்படும் சாதியிலும் இதுபோன்ற ஒரு வழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது நிழலாடுகிறது. அதாவது எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. "ஊர் ஒப்பு" அதாவது திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இன்னார் இன்னாருக்கு தனது மகளையோ அல்லது மகனையோ கொடுக்கப் போகிறார் என்று அவர்கள் முன்னால் தாம்பூலத்தோடு சம்மதம் வாங்க வேண்டும். அப்போது தான் அந்த திருமணம் சாதி ரீதியாக செல்லும். மணப்பெண்ணோ, பையனோ வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இந்த ஊர் ஒப்பு கிடைக்காது. இன்றைக்கும் இது நடைமுறையில் உள்ளது. ஆனால் என்ன ஒன்று ஊரைவிட்டு விலக்கி வைப்பதில்லை அது ஒன்று தான் இவர்களிடமுள்ள முன்னேற்றம். யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை சில காலங்களுக்கு முன்பு வரை இவ்வாறு வேறு சாதியில் திருமணம் செய்யும் ஆணையோ பெண்ணையோ அவர்கள் விலக்கி கூட வைத்திருந்திருக்கலாம். அவ்வளவு ஏன், எனது திருமணத்திற்கு கூட இவர்கள் தங்கள் சம்மதத்தை வழங்கவில்லை தான். இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாதவர்கள் கோவிலின் திருப்பணிக்கோ அல்லது இதர பொதுக்காரிய செலவுகளுக்கோ இதுபோல் சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் மட்டும் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை. அம்பேத்கர் அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வரியையும் இதனுடன் என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது.
*"கோட்பாட்டு அளவிலும், நடைமுறையிலும் சாதி பிரச்சனை மிகப் பெரியதொன்றாகும். இந்தியாவில் சாதி முறை உள்ளவரை இந்துக்கள் கலப்பு மணம் செய்ய மாட்டார்கள். அந்நியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்."* - என்கிறார் அம்பேத்கர்.
ஒவ்வொரு சாதியிலும் ஆண்-பெண் சமநிலையைப் பேண திருமணமுறை எப்படி பயன்படுத்தப்படுகிறது, இந்த ஆண்-பெண் சமநிலை குலையும் போதுதான் சதி/உடன்கட்டை ஏறுதல் போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன, ஒழுக்கம் தொடர்பான கோட்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும் தனது ஆய்வுக் கட்டுரையில் தெளிவாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
சாதி முறையின் அவலங்களை நீக்க பல்வேறு நபர்கள் இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், சாதியை வளர்க்கும் விதமாக மேட்ரிமோனி என்ற பெயரில் முளைத்திருக்கும் சாக்கடைகளை அகற்ற வேண்டியது அவசியமாகிறது.அந்த அவசியத் தேவையை நிரப்ப அம்பேத்கர் இன்றைக்கும் தேவைப்படுகிறார்.
சாதியின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது அவரவர் செய்யும் தொழில்களே என்பதே இன்று வரையிலும் பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றிலிருந்து அம்பேத்கர் அவர்களின் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக - வேறொரு கோணத்தில் இதனை அலசுகிறது. சாதி முறையின் தோற்றம் குறித்தும் அது சமூக, பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் அம்பேத்கர் அவர்களின் *"இந்தியாவில் சாதிகள்."*
இறுதியாக, நூலிலிருந்து சில மேற்கோள்கள்:
--> இந்தியாவில் சாதி என்பது மக்களைச் செயற்கையாக கூறுபடுத்தி பிரித்து அகமணம் புரியும் வழக்கத்தால் ஒன்று, மற்றொன்றோடு இணைதலிலிருந்து தடுத்து வரையறுக்கப்பட்ட பிரிவுகளாக ஆக்கியுள்ளது.
--> பழமையை ஆய்ந்து தெளிவாக்க முயல்பவர்களின் பாதை கரடுமுரடானது; படுகுழிகள் நிறைந்தது.
--> தொழில், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சாதிகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், அதுவே சாதியின் தோற்றத்திற்கு காரணம் என்று சாதிப்பது சரியான விளக்கமாகி விடாது. தொழில் அடிப்படையில் அமைந்த குழுக்கள் சாதிகள் ஆனது ஏன் என்பதை இன்னும் கண்டறியவில்லை.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ
03/09/2020

Comments
Post a Comment