113 - நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்

 வாசிப்பு அனுபவம் - 113

நூல் : நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்

ஆசிரியர் : குன்றில் குமார்

வெளியீடு : நக்கீரன் வெளியீடு

பக்கங்கள் : 104

விலை : ரூ. 65



நான் எனது கல்லூரிக் காலங்களில் முதன்முறையாக புத்தகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் தொடங்கிய காலகட்டங்களில் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தும், காசு கொடுத்து வாங்கியும் அதிகம் வாசித்தவை தன்னம்பிக்கை சார்ந்த நூல்களே. ஏனோ அச்சமயத்தில் இருந்த குடும்ப சூழ்நிலையா அல்லது இயல்பாகவே அந்த பருவத்தினருக்கு இத்தகைய தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற பாதையின் மீதுதான் ஈர்ப்பு ஏற்படுமோ என்னவோ அதிகம் தேடித் தேடி என்னை வாசிக்க வைத்தவை மனதிற்கு ஒரு வகையான தெம்பினை அளிக்கக் கூடிய சுயமுன்னேற்ற நூல்களே. 


ஆனால், வாசிப்பு கூட கூட இத்தகைய தன்னம்பிக்கை சார்ந்த நூல்களின் பக்கமிருந்த மனம் விலகத் தொடங்கிவிட்டது. ஒருவேளை ஏறக்குறைய எல்லா நூல்களும் ஒரே மாதிரியான குரலில் சில அறிஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு எழுந்து வந்தது என அதே பழைய கள்ளையே புதிய மொந்தையில் ஊற்றிக் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.


மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வாசித்த சுயமுன்னேற்றத்தைப் பற்றி பேசும் நூல் இது தான். இந்நூலை வாசிக்கத் தேர்ந்தெடுக்க இரு காரணங்கள். 1. வாசிப்பை நேசிப்போம் குழுவினரின் போட்டி குறித்த அறிவிப்பு. இரண்டாவது மிக முக்கியமானது, இந்த கொரோனா பெருநோய் தொற்று விடுப்பு காலத்தில் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பகிர்ந்து கொண்ட வலி நிறைந்த வார்த்தைகள். வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் திடீரென போட்டி இரத்து என அறிவித்தால் அவனின் மனநிலை எப்படியிருக்கும்? அப்படித்தான் இப்போது இருக்கிறது போட்டித் தேர்வுகளுக்கு முழுமூச்சாய் தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களின் நிலை. நிச்சயம் இது போன்ற ஒரு வித விரக்தி நிலையிலிருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் - *”நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.”*


நூலின் முதல் அத்தியாயமான ”வெற்றிப் பயணம்” இப்படி ஆரம்பிக்கிறது : *”வெற்றி கிடைக்காத போது துவண்டு சுருங்கி மடங்கி படுத்துவிடக் கூடாது. தைரியமாக மீண்டும் மீண்டும் உங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.”* - தெரிந்த நண்பன் ஒருவனின் எதிர்பாரா துயரச் செய்தியைக் கேட்ட பின் வாசித்த வரிகள் இவை. ஒருவேளை அந்த நண்பனிடம் முன் நாள் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இவ்வரிகளைக் கூறி அவனது துயர முடிவிற்கு முடிவுகட்டி  இருப்பேனோ என்னவோ. உண்மையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் தாங்கள் தினம் பார்க்கும் விதத்தில் எழுதி வைத்து தினமும் பார்க்க வேண்டிய வரிகள் இவை என்பது என் எண்ணம்.


”ஆபிரகாம் லிங்கன், ஐன்ஸ்டீன், காந்தியடிகள், டாக்டர். இராதாகிருஷ்ணன், ஜார்ஜ் வாஷிங்டன், தெனாலிராமன், … … …” என நம் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய ஏராளமான நபர்களின் வாழ்க்கைக் கதைகளோடு நமக்கான படிப்பினைகளையும் நூல் முழுக்க ஆசிரியர் படர விட்டிருக்கிறார்.

நூலை வாசிக்க வாசிக்க நமக்குள்ளும் தூங்கிக் கொண்டிருந்த புத்துணர்ச்சி சுடர் விடுவதை உணர முடிகிறது. 


"நேரம் தவறாமை" என்ற அத்தியாயத்தில் காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு நிமிடம் தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டார் என்ற செய்தியை வாசிக்கையில் அதனால் தான் அவர் மகாத்மா என்று எண்ண தோன்றுகிறது. நம் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஏன் நாமும் கூட இப்படி மன்னிப்பு கேட்பதானால் ஒரு நாளைக்கு எத்தனை முறை கால தாமதத்திற்காக எவ்வளவு பேரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதிருக்குமோ?


நூலினை வாசிக்கையில் நமக்குள்ளும், *”ஜெயிக்கப் பிறந்தவர்கள் நாம்”* என்ற எண்ணம் பீறிடுகிறது. 


இறுதியாக, நூலிலிருந்து தன்னம்பிக்கை வளர்க்கும் சில வரிகள்:


--> வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதிபாட்டைத் தீவிரமாகவும், அழுத்தமாகவும் உங்கள் உள்ளத்திற்குள் பதித்துக் கொள்ளுங்கள்.


--> இந்த உலகில் பிரச்சனை என்பது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. எனவே, எந்த நேரத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது.


-->  முதலில் உங்கள் மனம் தளராமல், சிதையாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு திடுக்கிடும் நிகழ்வைக் கண்டும், கேட்டும் நொறுங்கிப் போய்விடாதவாறு உள்ளத்தைப் பக்குவப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.


--> காலத்தை சமயோசிதமாகப் புரிந்து கொண்டு, அடக்கமாகவும், அதே நேரம் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட்டால் உங்களாலும் வாழ்ந்து காட்ட முடியும்.


--> நிதானமாக யோசித்து வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் பிரச்சனைகளைத் தேடிப்பிடித்து அதனைத் தீர்க்க முயலுங்கள். அப்போதுதான் நீங்கள், ”நான் ஜெயிக்கப் பிறந்தவன்“ என்று உற்சாகத்துடன் சொல்ல முடியும்.


வாசிப்பும், பகிர்வும்


~ *திவாகர். ஜெ* ~

28/08/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்