வாசிப்பு அனுபவம் 112 - நம் நதிகள்
நூல் : நம் நதிகள்
ஆசிரியர் : லீலா மஜும்தார்
தமிழாக்கம் : எஸ். கந்தசாமி
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
பக்கங்கள் : 64
விலை : ₹ 14
பொதுவாக நதிகளை எதனுடனேனும் ஒப்பிட வேண்டுமாயின் நிச்சயமாய் அவற்றினை நம் தாயுடன் ஒப்பிடலாம். நமக்கு பிறப்பினைத் தந்து இப்பூவுலகைக் காட்டி நம்மை மகிழ்வித்து வளர்ப்பவள் நம் தாய். இப்பண்புகள் அத்தனையையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டவை நதிகள். உலகம் போற்றும் பல நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றி வளர்ந்து செழித்தவை தானே? இயற்கையின் அருட்கொடையான நதிகள் சூழலியல் சமநிலையினை பேணிக்காப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட நதிகளை - அவை உருவாகும் விதம், அவற்றால் செம்மையுறும் நிலப்பகுதிகள், நதிக்கரையோர மக்களின் வாழ்க்கை நிலையென இந்திய நதிகளின் புராதனப் பெருமைகளைப் பேசும் நூல் - நம் நதிகள்.
நாமெல்லாம் அறிவோம் கங்கை நதி இமயமலையில் உற்பத்தியாகிறது என. ஆனால், அங்கு உற்பத்தியாகும் கங்கை நதி வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்ததைப் பற்றிய சுவையான கதை தெரியுமா உங்களுக்கு? புராணக் கதை தான் என்றாலும் பகுத்தறிவைச் சற்றே ஓரம்கட்டி வைத்துவிட்டு வாசித்தோமாயின் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகள் ரசிக்கத்தக்கனவாகவே உள்ளன. கங்கை நதியினைப் பற்றி நாம் அறியாத பல சுவாரசியங்களை நூலாசிரியர் நதியின் சில்லென்ற ஓட்டத்தோடு அருமையாய் விவரிக்கிறார். ஆயினும் இயற்கையின் எழில் கொஞ்சும் இமயத்தில் உருவாகி, மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் கங்கைக்கு அது புனித நதியென்ற மக்களின் நம்பிக்கையே எதிரியாய் அமைந்து இன்றைக்கு சீரழிந்து கொண்டிருப்பதனை ஏனோ நூல் பேசாதது சற்று வருத்தமே. வியாசர் காசி பற்றிய கதை நம்மைக் கவர்கிறது.
'த்ஸாங்-போ' நதி. இப்படி பெயர் கொண்ட ஒரு நதியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? த்ஸாங்-போ என்றால் "பரிசுத்தப்படுத்தக்கூடியது" என்பது பொருள். இதுவே பிரம்மபுத்திராவின் துவக்கம். நதிகள் நீர்த்தேவையினை மட்டுமல்ல, போக்குவரத்திற்கும், வர்த்தகத்திற்கும் கூட மிகப்பெரும் பங்காற்றுகின்றன. பிரம்மபுத்திராவும் இதற்கு விதிவிலக்கல்ல. "பிரம்மபுத்திராவில் ஒரு பிரயாணம்" என்ற அத்தியாயத்தில் நதியினூடே நூலாசிரியர் பயணம் செய்து வழித்தடங்களை விவரித்து நாமும் உடன் பயணிக்கும் அனுபவத்தினை வழங்குகிறார்.
நதிகளில் அவ்வபோது ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் வெள்ளம் கொண்டு வரும் புது மணலாலும், மட்கிய தாவரப் பொருட்களாலும் நிலத்துக்கு செழுமை அதிகரிப்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பஞ்சாப் நதி, மகாநதி போன்ற இன்னும் சில ஆறுகளையும் அவற்றால் மனிதயினம் அடையும் நன்மைகளையும் நூல் சிறப்பாக விவரிக்கிறது.
நதிகளோடு மனிதர்களுக்கு உள்ள உறவினை பேசுவதோடு நூல் முடிகிறது.
நதிகளை இணைப்போம் என்ற அறிவியல் தன்மைக்கு முரண்பாடான பொய்ப் பிரச்சாரங்களிலிருந்து விலகி நதிகளின் இயல்பின் உண்மைத்தன்மையறிந்து நதிகளைக் காக்க உறுதியேற்போம். அதுவே அடுத்து வரும் நம் தலைமுறையினருக்கு நாம் சேகரித்து வைக்கும் ஆகப்பெரும் சொத்தாக அமையும். நதிகளைக் காப்போம். நீர்வளம் பெருக்குவோம்.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ
20/08/2020

Comments
Post a Comment