அரியநாச்சி - வாசிப்பு அனுபவம் 111
வாசிப்பு அனுபவம் - 111
நூல் : அரியநாச்சி
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் : 120
விலை : ₹ 150
வகை : நாவல்
*"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்*
*ஏமப் புணையைச் சுடும்"*
என்பது வள்ளுவரின் வாக்கு. அதாவது, ஒருவனது கோபமானது அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் என்பது இதன் பொருள்.
இக்குறளின் மையப்பொருளை விளக்கும் வகையில் அமைந்த நாவலென்றே கூட இந்நாவலைக் கூறலாம்.
நூலாசிரியரின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், *"கோபம், குலத்தை அழித்தக் கதை - அரியநாச்சி"*
கோபத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதியாய் இருக்கும் வெள்ளையத்தேவரை சந்திக்க நிறைசூலியான மகள் அரியநாச்சி வருவதில் தொடங்குகிறது கதை. வெள்ளையத்தேவரின் மூத்த மகள் அரியநாச்சி, அடுத்த மகன் பாண்டி, இளையவள் மாயழகி.
மாயழகியைத் தன் கணவனின் தம்பிக்கு மணமுடிக்க நினைக்கிறாள் அரியநாச்சி. ஆனால் தன் தம்பிக்கு கட்டிவைக்க எண்ணுகிறாள் பாண்டியின் மனைவி குமராயி. மாயழகி யாரை விரும்புகிறாளோ அவருக்கு கட்டி வைக்க வேண்டியதுதானே என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைக்கும் பல இடங்களில் பெண்ணைக் கேட்டு எந்த சம்பந்தமும் முடிவாவதில்லையே. பெருநாழி கிராமம் மட்டும் இதற்கு விதிவிலக்காகிவிடுமா என்ன?
கோபம் தனியே வந்தாலே குலத்தை அழித்துவிடும். இதில் கூடவே மதுவும் சேர்ந்து உள்ளே இறங்கினால்....?? கேட்கவும் வேண்டுமா? அதுதான் நடக்கிறது இந்நாவலிலும்.
எப்போதும் சாந்தம் குடிகொண்டிருக்கும் வெள்ளையத்தேவர் கொலை செய்தார் என்பதை நாவலில் வரும் நபர்களைப் போல்தான் நம்மாலும் நம்ப முடியவில்லை. ஆயினும் கோபம் தான் அறிவுக்கு விரோதியாயிற்றே. கோபம் வந்தால் அறிவு இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொள்ளத்தானே செய்கிறது. வெள்ளையத்தேவருக்கும் அந்நொடியில் அதுதான் நிகழ்ந்திருக்கும் போலும். ஏன் 'நிகழ்ந்திருக்கும் போலும்' என்று கூறுகிறேனென்றால் கதையில் வெள்ளையத்தேவர் கொலை செய்தார் என்று மட்டுமே வருகிறதே தவிர அதன் பின்னணி எதுவும் கூறப்படவில்லை. சொல்லப்போனால் கதையோட்டத்தில் அது நமக்குத் தேவைப்படவுமில்லை.
நாவலில், சிறைக் கண்காணிப்பாளராய் வரும் சுகந்தன் கூறும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.
*"கோபம், குலத்தை அழிக்கும் என்பது மனுச ஜென்மத்துக்கு ஒரு பால பாடம். பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க பாஷை இல்லாத மிருகங்களுக்கும் மனுச ஜென்மத்துக்கும் வித்தியாசம் வேணும். எதற்கெடுத்தாலும் ஆயுதத்தை தூக்குவதை பெருமையா நெனைக்கிற பல இனங்கள் அழிஞ்சு போச்சு. மனுசன் கோபத்தை அடக்குறது, ஒரு தவம்; பயிற்சி. சுற்றியிருக்கிற சூழலுக்கு நம்மை ஒப்புக் கொடுத்துட்டு அழியக்கூடாது. தப்பான தடத்தை திருப்பணும். அப்போதான் நம்ம தலைமுறைகள் நல்லா இருக்கும்"*
அரியநாச்சியின் கணவன் வெள்ளாங்குளம் சக்கரை உண்மையில் மிகச் சிறந்த ஒரு மனிதர். மனைவியின் சகோதரனால் அத்தனை அவமானமடைந்த பின்னும் சொந்தங்களை அனுசரித்து நடக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் நமக்கெல்லாம் ஒரு ஆகச் சிறந்த பாடம். ஆனால், அப்பேர்ப்பட்ட மனிதரும் ஒரு நொடி கோபத்தால் கொலைகாரனாகி, தன் உயிரையும் விடுகிறார் என்பது எத்தனை துயரமானது.
திரு. வேல ராமமூர்த்தி அவர்களின் மற்ற நாவல்களைப் போன்றே அரியநாச்சியும் வாசிப்பில் அயர்ச்சியை ஏற்படுத்தாத ஒரு சிறந்த நாவல் என்பதில் மிகையில்லை.
வாசிப்பும், பகிர்வும்
*~ திவாகர். ஜெ ~*
22/07/2020

Comments
Post a Comment