வேலைக்காரி - வாசிப்பு அனுபவம் 110

வாசிப்பு அனுபவம் - 110

நூல் : வேலைக்காரி
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
வெளியீடு : முல்லை நிலையம்
பக்கங்கள் : 96
விலை : ₹ 25
வகை : நாடகம்



          பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நாடகம் *"வேலைக்காரி."* இது 1949 இல் ஏ.எஸ்.சாமி இயக்கத்தில், அறிஞர் அண்ணா திரைக்கதை, உரையாடலை எழுத திரைப்படமாகவும் வெளிவந்தது. 

          பெரும் பணக்காரனும், ஊரிலுள்ளோருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வஞ்சகமாய் அவர்களின் சொத்தை அபகரிப்பவனுமான வேதாச்சல முதலியாரின் மகள் சரசா, மகன் மூர்த்தி.  வேதாச்சல முதலியாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் அவரின் தண்டனைக்குப் பயந்து தூக்கு மாட்டி இறக்கிறார் சுந்தரம் பிள்ளை. 

          நீண்ட வருடங்களுக்குப் பிறகு  தந்தையைக் காண வரும் ஆனந்தன் தன் தந்தை தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். தன் தந்தையின் மரணத்திற்கு வேதாச்சலம் தான் காரணம் என்பதையறிந்து அவனை கொன்று பழிதீர்க்கக் கிளம்புகையில் அவனுடைய நண்பன் மணியால் தடுத்து நிறுத்தப்பட்டு வேதாச்சலத்தை  கத்தியின்றி, ரத்தமின்றி வேறுவகையில் பழிவாங்க இருவரும் முடிவுசெய்கின்றனர். 

          இதற்கிடையில் வேதாச்சலத்தின் மகன் மூர்த்திக்கும், அவர்கள் வீட்டு வேலைக்காரியான அமிர்தத்திற்கும் காதல் அரும்புகிறது. சாதியையும், வறுமையையும் காரணம் காட்டி வேதாச்சலம் அதனை எதிர்க்கிறார். 

          ஆனந்தன் வேதாச்சலத்தைப் பழிவாங்கினானா? இல்லையா? மூர்த்தி - அமிர்தம் காதல் நிறைவேறியதா? பணக்காரத் திமிரில் ஏழையரை துரும்பென மதிக்கும் வேதாச்சலத்தின் மகள் சரசா என்னவானாள்? என்பதையெல்லாம் ஒரு திரைப்படத்திற்கே உரித்தான சுவாரசியமான திருப்பங்களுடன் நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிஞர் அண்ணா. 

          நூல் முழுக்க அண்ணாவின் பகுத்தறிவு வசனங்களுக்கு குறைவில்லை. 

          ஊருக்குள் வரும் ஆனந்தன் அங்குள்ள காளி கோயிலில் அம்மனை வணங்கிக் கொண்டிருக்கும் போது அங்கிருக்கும் சிலர் காளியின் மகிமைகளை எடுத்து கூறுவர். அப்போது அவனது நண்பன் மணி, "இந்தப் பைத்தியக்காரர்கள் பேச்சைக் கேட்டு அப்படியே நின்று விட்டாயே. வா போகலாம்" என்பான். இல்லாததை, ஏழைக்கு உதவாததை உயர்த்திப் பேசுபவன் பைத்தியக்காரன் தானே? ஒரே வார்த்தையில் அவ்வளவு நேரப் பிரசங்கத்தை நொறுக்கியிருப்பார் அண்ணா. 

          ஊரை ஏமாற்றும் கயவனான வேதாச்சலம் முதலியார் அம்மனுக்கு அபிசேகம் செய்து சொகுசாய் வாழ்வதையும், தெய்வமே துணையென அம்மனை சரணடைந்த தான் தந்தையை இழந்து யாருமற்று, ஏதுமற்று கதறுவதை காணாமல் இருக்கும் கடவுள் சிலையை நோக்கி ஆனந்தன் பேசும் வலிமையான வசனங்கள் அண்ணாவின் எழுத்துகளுக்கே உரியவை.

          மக்களைச் சுரண்டி, கொழுத்து சாமியார் என்ற போர்வையில் கபட வேசமிடும் காமுகர்களையும் அண்ணா தோலுரித்துள்ளார். 

          காதலுக்கு சாதியோ, பணமோ தடையாயிருக்கலாகாது என்பதை இந்நாடகத்தில் அண்ணா நிரூபித்திருக்கிறார். 

          வேதாச்சலம் முதலியார் போன்ற சாதிவெறி இரத்தத்தில் ஊறிய மனித மிருகங்கள் இன்றைக்கும் நம்மிடையே உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் சரியான பதிலடியைக் காலம் என்றைக்கும் கற்பித்துக் கொண்டுதான் இருக்கின்றது. பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருந்த சாதியை ஓரளவுக்கு ஒழித்து விட்டோமே தவிர தமிழனின் மனதின் மையத்தின் சுழல் கொண்டுள்ள சாதித்திமிரை வேரறுக்க இன்னும் சில காலம் ஆகலாம். அதற்கு நிச்சயம் என்றைக்கும் அண்ணாவின் இதுபோன்ற நூல்கள் துணைநிற்கும் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. 

          இறுதியாக, நூலிலிருந்து சில மேற்கோள்கள்:
          *"பைத்தியக்காரன். உழைக்கிறான் மாடு போல; சம்பாதிக்கிற காசையெல்லாம் கற்பூரமாக வாங்கி கொளுத்துகிறான்"*

          *"பணக்கார உலகம் மிகவும் விசித்திரமானது. அங்கே முட்டாள் புத்திசாலியாக போற்றப்படுவான். வீரன் கோழைப் பட்டம் பெறுவான்.  கோழை வீரன் பட்டம் பெறுவான். அவலட்சணமாக இருந்தாலும் அழகனாகக் கருதப்படுவான்."*

          *சட்டம் ஓர் இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஒரு விளக்கு."*

வாசிப்போம்... வளம் பெறுவோம்...

வாசிப்பும், பகிர்வும்

*~ திவாகர். ஜெ ~*
12/07/20

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்