திமிங்கல வேட்டை - வாசிப்பு அனுபவம் 106
வாசிப்பு அனுபவம் - 106
நூல் : திமிங்கில வேட்டை (MOBY DICK)
ஆசிரியர் : ஹெர்மன் மெல்வின்
(தமிழில்) : ஜெகாதா
வெளியீடு : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 96
"உலகின் தலைசிறந்த பத்து நாவல்களுள் ஒன்று" என இந்நூலின் அட்டைப்படம் குறிப்பிடுகிறது. நாவலை வாசிக்கையில் அது உண்மைதான் என்பதை நம்மால் உணர இயல்கிறது.
பெக்வோடு கப்பலின் கேப்டனான எனாப் தன் ஒரு காலை இழக்க காரணமான மொபிடிக் என்னும் வெள்ளைத் திமிங்கலத்தை வேட்டையாடிக் கொல்வதற்காக மேற்கொள்ளும் கடற்பயணமே "திமிங்கல வேட்டை (மொபிடிக்)" என்னும் இந்நாவல்.
எனாப் தான் இக்கதையின் நாயகன் என்றாலும் நாவல் எனாப்பின் வாயிலாக சொல்லப்படவில்லை. இஷ்மேல் எனும் மற்றொரு கப்பல் பயணம் விரும்பும் - அதுவும் திமிங்கல வேட்டைக்குச் செல்ல விரும்பும் ஒருவனின் வாயிலாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை எனாபே கதை சொல்வதாக இருந்தால் தனது வீர சாகச பிரதாபங்களையே முன்னிருத்தி பேசுவதாக நாவல் அமைந்து விடுமோவென்று ஹெர்மென் மெல்வின் எண்ணியிருப்பாரோ என்னவோ....
இஷ்மேல், திமிங்கல வேட்டைக்குச் செல்லும் கப்பலில் தன்னையும் ஒரு மாலுமியாக பதிவு செய்து கொள்ள நியூபட் போர்ட் என்ற இடத்திற்கு வரும்போது அங்கு ஒரு சத்திரத்தில் க்வீக்வக் என்பவனோடு அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வருகிறது. க்வீக்வக் ஒரு நரமாமிசம் உண்ணும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவன். அவனைப் பார்த்து அவனது கருத்த - பெருத்த திரேகத்தைப் பார்த்து இஷ்மேல் அவனிடம் நெருங்கவே பயப்படுகிறான். ஆனால் க்வீக்வக் பற்றிய உண்மையும் அவனது அசாத்தியமான ஈட்டி எறியும் திறனும் தெரிந்ததும் இருவரும் இணைபிரியா நண்பர்களாகின்றனர். உருவத்தையும், நிறத்தையும் வைத்து எவரின் குணநலனையும் முடிவு செய்யக்கூடாது இல்லையா? பின்னர் தான் இருவரும் எனாப் உடன் திமிங்கல வேட்டைக்குப் புறப்படுகின்றனர்.
பல்வேறு தடைகளையும், உயிர் போகும் நிலைகளையும் கடந்தும் எனாப் மொபிடிக் எனும் வெள்ளைத் திமிங்கலத்தைப் பிடித்துக் கொன்றே தீருவது என்ற கொலைவெறியுடன் கடலில் திரிகிறான். நாவல் முழுவதுமே நமக்கு, "எனாப்பிற்கு ஏன் இத்தனை ஆவேசம்? மொபிடிக்கால் எனாப் தன் காலினை இழந்தான் எனினும் அந்த ராட்சச, உயிரைக் கொல்லும் திமிங்கலம் மீது இத்தனை குரோதம் தேவையா?" என்ற எண்ணவோட்டமே நமக்குள் மேலெழுகிறது? இதையே கப்பலின் மற்றொரு கேப்டனான ஸ்டார்பெக் எனாப்பிடம் கேட்கவும் செய்கிறான். ஆனால் எனாப்பின் கோபத்தின்முன் அக்கேள்விகள் அர்த்தமற்று போய்விடுகின்றன. நாமும்கூட எனாப் போலத்தானோ என்று யோசிக்கிறேன். சகமனிதர்கள் மீதினில் தேவையின்றி விரோதத்தை வளர்த்துக் கொண்டு அவர்களை - அவர்களின் புகழினை அழிப்பதொன்றே முழுமுதல் கடமையாய் கொண்டு அலையும் பலரை நாம் தினமும் சந்தித்து கடந்துபோய் கொண்டுதானே இருக்கிறோம்.
ஆனால், இது எனாபிற்கும் மொபிடிக்கிற்கும் இடையில் நடக்கும் வேட்டை மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாய் நிலவாழ் மனிதர்களும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாகவே இந்நாவலை நோக்க வேண்டியுள்ளது.
நாவலை வாசிக்கையில் நாமும் அந்த மாலுமிகளில் ஒருவராகவே மாறிப் போகிறோம். திமிங்கலங்களை வேட்டையாடப் பழகியதுபோலவே ஒரு பிரமை. அதுவும் படகினை நோக்கி திமிங்கலங்கள் வருகையில் நம் கையில் ஈட்டி இல்லையே என்ற ஏக்கம். உயிரைக் கொல்லும் சுறாக்கள் படகுகளைத் துரத்தி வருகையில் உயிர் தப்பிக்கும் பயம் நமக்குள்ளும் பரவுகிறது. திமிங்கலத்தைக் கொல்ல வேண்டுமாவென முதலில் நமக்குள் எழும் கேள்வி, இறுதியில் எனாப்போடு சேர்ந்து மனரீதியாக நாமும் மொபிடிக்கை வேட்டையாட அவனுடன் சேர்ந்து கொள்கிறோம். எழுத்துகளில் அத்தனை வலிமை.
எனாப் மொபிடிக்கை கொன்றானா இல்லையா? எனாப் என்னவானான்? என்பதே நாவலின் முடிவு. நாவலை வாசிக்க, வாசிக்க - அலைகளை ரசிக்க கடற்கரையில் நிற்கும் நம்மை ஒரு பேரலை மேலெழுந்து கடலின் ஆழத்தை ரசிக்க கரம்பிடித்து உள்ளிழுத்துச் செல்வதைப் போல நாவலின் மைய நீரோட்டத்துடன் நாமும் கலந்து - கரைந்து போகிறோம்.
நாவலாசிரியர் ஹெர்மன் மெல்வின் 21 ஆண்டுகள் திமிங்கல வேட்டைக் களத்திலேயே இருந்தவர். அவரின் சொந்த அனுபவமே நாவலை இத்தனை தூரம் செழுமையாய் எழுத உதவியிருக்கிறது.
இறுதியாக, நாவலிலிருந்து சில வரிகள்:
--> திறந்த மனத்தோடு பேசுவதற்கு படுக்கையைப் போல் பொருத்தமான இடம் வேறு எதுவுமில்லை.
--> நமக்கு பிடித்தவற்றுக்கும் பிடிக்காதவற்றுக்கும் ஒருவரை நேசிக்கத் தொடங்கியபின் தான் வளைந்து கொடுக்கத் தொடங்குகிறோம்.
--> சிலர் தண்ணீர் பெருகி இறக்கிறார்கள். சிலர் சொட்டுத் தண்ணீர் கூட குடிப்பதற்கு இல்லாமல் சாகிறார்கள். மரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக வருகிறது.
ஒரு திகில் அனுபவத்துடன் விறுவிறுப்பான நாவலை வாசிக்க விரும்புவோருக்கான சிறந்த தேர்வு - திமிங்கல வேட்டை.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ
04/07/2020

Comments
Post a Comment