பட்டத்து யானை - வாசிப்பு அனுபவம் 101
வாசிப்பு அனுபவம் - 101
நூல் : பட்டத்து யானை
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் : 376
விலை : ₹ 380
வகை : நாவல்
சுதந்திரம் - இந்த ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால் காந்தி என்ற தனிநபரின் அகிம்சாவாதம் மட்டுமே பெரிதாய் பேசப்படும் நம் தேசத்தில் தன்னுயிரையும், உறவுகளையும் துச்சமென மதித்து ஆயுதமேந்திய போராட்டமே எதிரியை மிரட்டவும், விரட்டவும் செய்யும் விடுதலைக்கான ஒரே வழி என போர்க்களம் கண்டவர்களின் தியாகங்கள் அவ்வளவாய் பேசப்படுவதில்லை.
அகிம்சை தான் அடுத்தவரை இம்சிக்காத, நீண்ட கால பலன் தரும், என்றென்றைக்கும் அமைதியை மட்டுமே நிலவச் செய்யும் அறிவாயுதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் எதிரி தன்னை விட வலிமையானவனாய், ஆயுதமேந்தி அழித்தொழிப்பவனாய் இருக்கையில் அவன் முன் நிராயுதபாணியாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்பது அறிவீனமென்று எண்ணி ஆயுதமேந்துவது தவறல்ல என்று புரட்சி செய்த புரட்சியாளர்களும் அகிம்சாவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல.
அத்தகையதொரு புரட்சிக்காரன் தான் *"ரணசிங்கம்."* அழகான வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்து கொண்டிருக்கும் மதயானைக் கூட்டமான - மிருகத்தினும் கொடிய வெள்ளையர்களை ரணசிங்கம் சிறுநரியை வேட்டையாடும் சீறும் சிங்கமென வேட்டையாடுவதே *"பட்டத்து யானை"* எனும் இந்நாவல்.
வெள்ளையர்களை அழித்து ஒடுக்க ரணசிங்கம் தீட்டும் திட்டங்களைக் கேட்கையில் நமக்கே அவரின் கருஞ்சேனையில் சேர்ந்து ஆயுதமேந்தி அடிமைப்பட்ட இந்திய தேசத்தின் விடுதலைக்கு கிளர்ந்தெழ வேண்டுமென்ற வேட்கை உண்டாகிறது. எனினும் ரணசிங்கம் போன்ற வீராதி வீரர்களின் தியாகத்தால் இன்றைக்கு நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை நினைத்து அவர்களின் பாதம் பணிவதைத் தவிர வேறெதைச் செய்ய இயலும்?
ரணசிங்கம் தனது ஆப்பநாட்டைச் சேர்ந்த இளவட்டங்களை மூன்று அணியாய் பிரித்து மூன்று அணிகளுக்கும் புலிப் பாய்ச்சல், முனி பாய்ச்சல், புயல் பாய்ச்சல் எனப் பெயரிடுகிறார். நாவல் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து நம்மை பிரமிக்க வைக்கிறது.
இந்தியாவின் வரலாறு வட இந்தியாவிலிருந்து இல்லாமல் தென்னிந்தியாவில் இருந்து எழுதப்படுமாயின் அதன் தலைவாசலில் நிச்சயம் ரணசிங்கம் இருப்பார்.
(இந்த வரிகளை எழுதி முடித்தப்பின் வாசிக்கையில் எழாத ஒரு சந்தேகக்கீற்று மனதில் முளைத்தது. *"உண்மையில் ரணசிங்கம் என்ற நபர் வாழ்ந்தாரா?"* என்று. ஐயம் தீர நூலாசிரியரின் அலைபேசி எண்ணைத் தேடி தொடர்பு கொண்டதில், *"நாவலில் வரும் மயிலப்பன் பாத்திரம் உண்மை. ரணசிங்கம் பாத்திரம் புனைவு. ஆயினும் வெள்ளையனின் அடக்குமுறை அட்டகாச நிகழ்வுகள் நடந்தேறியவை"* என்றார். ஆயினும் என்னால் இன்னும் நம்ப இயலவில்லை. ஓர் எழுத்தாளனால் தானே அது புனைவு என்று கூறிய பின்னும் நம்ப முடியாமல் தயங்கி நிற்கும் அளவுக்கு வாசகனை தனது எழுத்தால் மயக்கி வைக்க இயலுமா? உங்களின் சரியான மறுமொழிக்கும், நீண்ட, தெளிவான விளக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா🙏)
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் கழுத்தில் தாலி ஏறாமலே கைம்பெண்ணான மாயழகி அந்நியரை அழிக்க உறுதியேற்று வீரப்பெண்ணாதல், தன் திருமணத்தை விட தேசத்தின் விடுதலையே முக்கியம் என போராடி உயிர்விடும் திருக்கண்ணன், அந்நிய ஆடவன் கை, தன் மெய் தீண்ட அனுமதியாது கண நேரத்தில் நால்வரை சுட்டுக் கொல்லும் அரியநாச்சி, கோவில் திருவிழாவை விட தேச நலனே பெரிதென இளவட்டங்களை வெள்ளையருக்கு எதிரான தாக்குதலுக்கு அனுப்பும் ஊர் முதியவர்கள், உயிர் போகும் நிலை வரினும் தங்களுக்காக முன் நிற்பவனை காட்டிக் கொடுக்காத ஊர் மக்கள்,...... நினைக்க நினைக்க ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் கண் முன் நீர்த்திரையிடச் செய்கின்றன.
ஆனால், எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் - போர்க்களத்தில் ஓராயிரம் எதிரிகளை வாள் முனையில் அனாவசியமாய் வெட்டி சாய்த்தவனுக்கும் இலட்சம் எதிரிகளை விட - ஒரே ஒரு துரோகியே போதும் மரணத்தைக் கொண்டு வர. அப்படிப்பட்ட துரோகி தான் உடையப்பன். ரணசிங்கமும் உடையப்பனின் சூழ்ச்சியினால் தான் மடிகிறான். துப்பாக்கிகளாலும், வெடிகுண்டுகளாலும் கொல்லவோ, வெல்லவோ முடியாத ஒரு மாவீரனை ஒரே ஒரு வஞ்சகனால் கொன்ற வெள்ளைக்கூட்டம் துள்ளி குதிக்கிறது. அதைத்தான் ஏற்க முடியவில்லை நம்மால்.....
தாளிலிருந்து கண் நீக்காமல், இமை கொட்டாமல் ஒரு நூலை ஆர்வமாய் வாசித்து முடிக்கும் எண்ணமிருப்போர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் - *"வேல ராமமூர்த்தியின் - பட்டத்து யானை"*
வாசிப்பும், பகிர்வும்
*~ திவாகர். ஜெ ~*
13/06/2020

Comments
Post a Comment