குருதி ஆட்டம் - வாசிப்பு அனுபவம் 100
வாசிப்பு அனுபவம் - 100
நூல் : குருதி ஆட்டம்
ஆசிரியர் : வேல ராமமூர்த்தி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் : 88
*"உச்சி ராத்திரி. உள்ளங்கை தெரியாத இருட்டு. தவசியாண்டி கோடாங்கி அடிக்கிற அடியில் காடு கிழியுது....."*
*'டுண்... டுண்ண்.... டுண்....*
*டுண்... டுண்ண்.... டுண்......'*
என்று தொடங்கும் போது நாவலின் வரிகளில் பதியும் நம் கண்களை
*"வைக்கோல் பிரி சுற்றிய ஒருவன் சுழற்றி எறிந்த வளரி, ஊரைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்த பெருநாழி முதலாளியின் கழுத்தைக் குறிவைத்துப் போனது"*
என்று இறுதி வரிகள் முடியும் வரை நாவலிலிருந்து அகற்றுவது கடினமே....
நூலாசிரியர் திரு. வேல ராமமூர்த்தியின் எழுத்துகள் நாவலோடு நம்மை அந்தளவுக்கு இறுக்கி கட்டிப் போட்டு விடுகின்றன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் பல பதிப்பகங்கள் தங்கள் பதிப்பக நூல் விற்பனையில் தள்ளுபடிகளை அறிவிக்க டிஸ்கவரி புக் பேலஸும் அது மாதிரி அறிவித்த ஒரு தள்ளுபடியில் வாங்கியவை தான் வேல ராமமூர்த்தியின் அத்தனை புத்தகங்களும்.
பொதுவாகவே நான் புதிதாக ஒரு எழுத்தாளரின் நூல்களை வாசிக்க நினைத்தால் முதலில் அவரின் ஏதேனும் ஒரு நூலை மட்டும் வாங்கி வாசித்து அவரின் எழுத்துகள் எனக்கு பரிச்சயமான பிறகுதான் அவரின் பிற நூல்களை வாங்கிப் படிப்பது வழக்கம். ஆனால், தள்ளுபடி என்பதால் யோசிக்காமல் இவரின் எல்லா நூல்களையும் ஆர்டர் செய்து விட்டோமோ என்று பணமனுப்பி பதிவு செய்த நாள் முதல் எனக்குள் இருந்த மனக்குறையை வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே *"குருதி ஆட்டம்"* போக்கிவிட்டது.
அத்தோடு அவரின் மற்றொரு நூலை கையிலெடுத்து வாசித்துக் கொண்டிருந்த என் மனைவியும் அதிலிருந்த ஒரு சிறுகதையை என்னிடம் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்ட போது அந்த மனக்குறை போயேபோய் விட்டது.
பொதுவாக, நாவல்களில் முதல் அத்தியாயம் ஒருவரின் கதையைப் பற்றி பேசினால், அடுத்த அத்தியாயம் வேறு ஒருவரின் கதையை பற்றி பேசும். இந்த இருவரின் அல்லது இரண்டு மூன்று நபர்களின் கதைகளே ஒவ்வொரு அத்தியாயத்திலும் மாறி மாறி வரும். ஆனால் இந்த நாவலில் ஒரே அத்தியாயத்திலேயே இரண்டு மூன்று நிகழ்ச்சிகள்/நபர்கள் பற்றிய கதைகள் தொடர்ச்சியாக வருகின்றன. நாவலில் நாம் மூழ்கி விட்டபடியால் அந்த பல்வேறு தளங்களில் நடக்கும் கதைகளையும் நம்மால் ஒன்று கோர்த்து நினைவில் வைத்துக் கொள்வது எளிதாகிறது.
வெள்ளையன் ஸ்காட் துரையால் கொல்லப்பட்ட ரணசிங்கத்தின் மகன் ஊமையாக்கப்பட்டு ரணசிங்கத்தின் தங்கை அரியநாச்சியுடன் மலேசியா காடுகளுக்கு நாடு கடத்தப்படுகிறான். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க அத்தையுடன் சேர்ந்து ஒரு வீரனாக திரும்பி வருகிறான் ரணசிங்கத்தின் மகன் துரைசிங்கம்.
"அரண்மனை" என அழைக்கப்படும் உடையப்பனின் தகாத உறவுகளாலும் அவனது கூடா நட்பினாலும் வெறுத்துப்போன வெள்ளையம்மாள் தன் மகள் பொம்மியின் மகன் கஜேந்திரனை கைக்குழந்தையாக தூக்கிக்கொண்டு பட்டணத்திற்கு சென்றவள் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகப் பிள்ளையின் வற்புறுத்தலினால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவை காண திரும்பி வருகிறார்.
20 ஆண்டுகளாய் ஊரைவிட்டு விலகி வாழும் பூசாரி தவசியாண்டி ஊர் திருவிழாவில் தன்பழி முடிக்க மீண்டும் ஊருக்குள் வருகிறார்.
தன் துரோகக் கொலையின் ஒரே சாட்சியாக இருக்கும் தவசியாண்டியின் கதை முடிக்கவே ஊர்த்திருவிழாவை 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்பாடு செய்கிறான் அரண்மனை என்னும் உடையப்பன்.
இவை எதுவும் தெரியாமல் ஊரின் சாபம் நீங்கி மீண்டும் பழையபடி ஊர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலிலும் கொண்டாட்டங்களிலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் ஊர்மக்கள்.
இப்படி பல்வேறு தரப்பட்ட கதை மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரே கோட்டில் சந்திக்க வைக்கும் புள்ளி தான் இருளப்பசாமி கோயில் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா.
யார் யார் தங்கள் பழி முடித்தார்கள் என்பதுதான் கதையின் கடைசி அத்தியாயம். ஆனால் நாவலின் முதல் வரி முதல் விறுவிறுப்பாய் கொண்டு சென்ற நூலாசிரியர் ஏனோ கடைசி அத்தியாயத்தை சுருக்கமாக, மிகச் சுருக்கமாக முடித்துவிட்டதைப் போல் தோன்றுகிறது.
பாட்டியின் அனுமதியின்றி முதன் முதலாய் தன் ஊருக்கு வந்த கஜேந்திரன் என்னவானான்? அவனை யாரென்றே அறியாமல் பழிவாங்கக் காத்திருக்கும் அரியநாச்சி அவனை கொன்றாளா? தவசியாண்டியின் மகள் செவ்வந்தியின் நிலையென்ன? போன்ற பல கேள்விகளுக்கான விடைகளில்லாமலே நாவலின் முடிவு தொக்கி நிற்கிறது.
எனினும், ஒரு சிறப்பான விறுவிறுப்பான நாவலை வாசித்த திருப்தியைத் தர தவறவில்லை வேல ராமமூர்த்தியின் குருதி ஆட்டம்....
நூலாசிரியரின் மற்ற நூல்களையும் வாசிக்க தூண்டி விட்டது இந்நாவல். வாசியுங்கள் உங்களையும் கதிகலங்கி ரசிக்க வைக்கும் குருதி ஆட்டம்.
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
04/06/2020

Comments
Post a Comment