மடவளி - வாசிப்பு அனுபவம் 98

வாசிப்பு அனுபவம் - 98

நூல் : மடவளி
ஆசிரியர் : கவிப்பித்தன்
வெளியீடு : நூல் வனம்
பக்கங்கள் : 335
விலை : ரூ. 320
வகை : நாவல்

1. நண்பர்களையும் விரோதியாக்கும் வல்லமை படைத்தது எது?
2. தாயாய், பிள்ளையாய் பழகிய பங்
காளிகளையும் பகையாளிகளாய் மாற்றும் சக்தி படைத்தது எது?
3. நேற்று வரை தோள் மீது கைப்போட்டு பேசி பழகியோரையும், எதிரில் முகம் பார்த்தும் சிரிக்காமல் விலகிச் செல்ல வைப்பது எது?
4. குடிசை வீட்டு குடிமக்களையும் கோபுர உச்சிக்குச் சென்றதாய் மயக்கி - மிதப்பில் இருக்க வைத்து மறுநொடியே குப்பைமேட்டில் விழச் செய்யும் வியூகம் வகுக்கத் தெரிந்தது எது?
5. கூழுக்கில்லாதோரையும் வளையோசை கொஞ்சும் குமரிப்பெண்ணின் களிப்போடு சட்டைப் பை நிறைய காசோடு திரியச் செய்யும் சூத்திரம் எது?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்று தான்..... என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்....???

ஆம்...... இவையெல்லாவற்றிற்கும் ஒரே பதில்....... *"தேர்தல்"* அதுவும் குறிப்பாய் *"உள்ளாட்சித் தேர்தல்"* மீண்டுமொரு முறை கேள்விகளை வாசித்துப் பாருங்கள். உண்மை தானே?

           கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாமே நேரடியாய் கண்ட காட்சிகள் தானே இவையெல்லாம்? இந்த கேள்விகளுக்கும்,  *"மடவளி"* என்ற இந்நாவலுக்கும் என்ன தொடர்பென்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.... நாவல் முழுக்கவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரைப் பற்றிய கதை தான்.

           *"மடவளி"* - இந்த வார்த்தையை இதற்குமுன் கேள்விப்பட்டுள்ளீர்களா? நானும் இந்நூலை வாங்கியபோது தான் இவ்வார்த்தையை முதன்முதலாய் பார்த்தேன். அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு நான் இவ்வாசிப்பு அனுபவத்தின் இறுதியில் கூறுகிறேன். சரியா?

           வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆந்திர எல்லையில் உள்ள ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து தான் மடவளியின் கதைக்களம். அவற்றில் ஒரு ஊரான ஏரியூரில் வசிப்பவன் மனோகரன். அவன் மனைவி கீதா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு சிப்காட்டில் வேலை செய்கிறான். சிறிய அளவான எளிய வருமானமுடைய குடும்பம்.  கடந்த இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் ஊர்த் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றவர் கீதா மனோகரன். மூன்றாவது முறையாக ரவி என்பவனின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் தலைவர் பதவிக்கு மனைவியைப் போட்டியிடச் செய்கிறான் மனோகரன்.  இந்த தேர்தலில் மனோகரன் வென்றானா? இல்லையா? என்பதே நாவலின் கதை. 

        பின்னிரவு இரண்டரை மணிக்கு மனோகரன், அவன் மனைவி கீதா, அவர்களுடைய உறவினன் திருமலை, சுதாகர் நால்வரும் இந்த முறை தேர்தலில் மனோகரன் நின்றால் வெற்றி பெறுவானா மாட்டானா? என்று கேட்பதற்காக ஒரு சாமியாரிடம் குறி கேட்க கிளம்புவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. 

        நிகழ்காலமும், கடந்த இரண்டு தேர்தல்களின் போதும் நடந்த சம்பவங்களுமாக நாவலின் கதை மனோகரின் எண்ண ஓட்டத்தில் நகர்கிறது. தற்போதைய சூழல், கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் நடந்த தேர்தல் வேலைகளின் போது மனோகரன் அனுபவித்தவை, அப்போதும் இப்போதும் ஊர் மக்களின் மனநிலை என கதை  நிகழ்காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் மாறி மாறி பயணித்தாலும் நம்மால் அந்தந்த காலகட்டங்களுக்குள் மிக எளிதாய் பொருந்துமாறு தனது எழுத்துக்களை நகர்த்திச் சென்றுள்ளார் நூலாசிரியர். 

        இரண்டு முறை போட்டியிட்டு தோற்ற பிறகு தனக்கு இந்த அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விடும் மனோகரனை அதே பஞ்சாயத்து, அடுத்த ஊரைச் சேர்ந்த ரவி என்பவன் வற்புறுத்தி "உனக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் உசுப்பேத்தி, நீ எந்த செலவும் பண்ண வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்றெல்லாம் கூறி அவனை நிற்க வைக்கிறான்.  ஆனால் அவனுக்கு எதிராக தானே போட்டியிடுகிறான்.  அதற்கான காரணத்தையும் பின்னர் அவன் தன் நண்பர்களிடம் கூறுகிறான்.  இவையெல்லாம் *"அவன் சொன்னான் இவன் சொன்னானென்று எவ்வித அடிப்படையும் - அனுபவமும் இல்லாமல் உள்ளாட்சி அரசியலில் நின்று - தோற்று சேமித்த பணத்தையெல்லாம் இழந்து வாடும் கிராமத்து மனிதர்களுக்கு சிறந்த அரசியல் பாடம்."*  

        மேலும், இது வெறும் இரண்டு பேருக்கு இடையிலான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான நாவல் என்பதாக மட்டும் இல்லாமல் சமூகத்தின் அடித்தட்டு மக்களாக கருதப்படும் ஆதிதிராவிடர், வண்ணார், நாவிதர், அருந்ததியர் முதலிய மக்களெல்லாம், தங்களை பெரிய ஆட்களாக கருதிக்கொள்ளும் ஊர் மக்களால் எத்தகைய இன்னலுக்கு ஆளாகின்றனர் என்பதையும், அவர்கள் படும் அவமானங்களையும், இன்னல்களையும் நாவல் முழுக்கக் கூறிச்சென்றிருக்கிறார் ஆசிரியர்.

        தேர்தலுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களோடு அந்நியோன்யமாக - அவர்களின் வாக்குகளுக்காக பழகும் மேல்தட்டு மக்கள் தேர்தல் முடிந்த மறு நொடியே அவர்களை கண்டுகொள்ளாமல் கழற்றிவிடும் கதைகளையெல்லாம் ஊர்களில் நாம் பார்த்ததுதான். அதே தான் இந்த நாவலிலும் நடக்கிறது. "ஐயா, சாமி" என்று அவர்களின் கால்களில் விழும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்து பதவிக்கு வந்ததும் அவர்களை எச்சில் இலைக்கும் கீழாய் மிதித்து தள்ளுவதை நாவலில் ஆங்காங்கே அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கவிப்பித்தன். 

        ஊரைச் சேர்ந்த ரேவதி நாவிதரின் மகனான ரவிசங்கரை விரும்பி இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதால் எவ்வித கேள்வியும் கேட்க இயலாத அப்பாவிகளான நாவிதர் குடும்பங்கள் அத்தனையையும் ஊர்க்காரர்கள் அழித்து விடுவதையும், அவர்களைப்படுத்தும் இம்சைகளையும் படிக்கும்போது இப்படியெல்லாமா இன்னும் மக்கள் இருக்கிறார்கள் என்று அவர்களின் அறியாமையை நினைத்து நொந்து போகிறோம் நாம். 

        அதேபோல் தேர்தல் வேலைகளில் மனோகர் பரபரப்பாய் இருக்கும் பொழுதும், தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் நடைபெறும் பொழுது மனோகரின் பரபரப்பு, இவையெல்லாவற்றையும் விட வாக்கு எண்ணிக்கையின் போது கீதா மற்றும் மனோகரன் ஆகிய இருவரின் உள்ளத்து உணர்ச்சிகளையும் ஆசிரியர் எழுத்துக்களின் வழியே நம்முள்ளும் கடத்தி விடுகிறார். 

        அந்த ஒவ்வொரு நொடியும் என்ன ஆகுமோ என்ற மனநிலையில்தான் நூலை நானும் வாசித்தேன். உண்மையில் ஒரு நிகழ்வை எழுத்துக்களில் கொண்டுவருவது என்பது வேறு. அதை அப்படியே வாசகனின் மண்டைக்குள் கடத்துவது என்பது வேறு. இதை ஆசிரியர் கவிப்பித்தன் மிக அருமையாக செய்துள்ளார். 

        நாவல் தங்குதடையின்றி மிக வேகமாக பயணிக்கிறது. இந்த முந்நூற்று சொச்சம் பக்கங்களை படிப்பதற்கு அதிகப்படியாய் இரண்டு, மூன்று மணிநேரங்கள் இருந்தால் போதும் உங்களுக்கு. அத்தனை விருவிருப்பு இந்த நாவலில். வாங்கி வாசியுங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். 
 
        நாவலில் உறுத்தியது ஒன்றே ஒன்றுதான்.  ரவிசங்கரைப் பிரிந்து, தனது குழந்தையையும் விட்டுவிட்டு பெற்றோர்கள் கூறியதற்காக மீண்டும் வீட்டிற்கு வரும் ரேவதி தனது பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட இறுதிவரை வராமலே போய்விட்டது எப்படி? உண்மையில் இப்படி கூட இருப்பார்களா? என்பது தெரியவில்லை. நூலாசிரியர் அந்த இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

        மற்றபடி நாவல் முழுக்க ஒரு நேரடியான உள்ளாட்சித் தேர்தலில் நீங்களே நின்று ஜெயிப்போமா? மாட்டோமா? என்ற மனநிலையில் ஊசலாடுவது போன்று கொண்டு சென்றுள்ள விதம் அருமை. 

        அதேபோல் இறுதியில் ரவிசங்கர் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கையில் சாதி என்ற இடத்தில் தனது சாதிப் பெயரைப் போடுவதா அல்லது குழந்தையின் தாயான ரேவதியின் சாதியைப் போடுவதா என்பது கலப்பு மணம் புரிந்த அனைவருக்குமே எழக்கூடிய பொதுவான குழப்பம். அதை ரவிசங்கரின் பார்வையில் நூலாசிரியர் விவரித்துள்ள விதம் மக்களிடம் நாவிதர் என்ற ஓர் இனம் படும் மனரீதியான அவஸ்தைகளின் ஒட்டுமொத்த சாட்சியமாக அமைந்துள்ளது. 

        நூலாசிரியர் கவிப்பித்தன் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். தனது நிலப்பரப்பையே நாவலின் கதைக்களமாகவும் எடுத்துள்ளார். மேலும் இந்நூல் *சிறந்த நாவலுக்கான விகடன் விருதையும் பெற்றுள்ளது* குறிப்பிடத்தக்கது. 

        நாவலின் முன்னுரையில் கவிப்பித்தன் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் இவை:
        *"நமது தேர்தல்களும், அரசியலும் மாயங்கள் நிறைந்ததாகவும், பல நேரங்களில் அது பல நூறு மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் தேசமுமாகவே இருக்கிறது. மனிதனாக வாழ்வதற்கும், வாக்காளராக வாழ்வதற்கும், அரசியல்வாதியாக வாழ்வதற்குமான வேறுபாடுகள் மிக மிக அதிகம்.  நமது தேர்தல்களிலேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மிகவும் விசித்திரமானவை.  இந்தத் தேர்தல்களில் வாழ்ந்தவர்களை விட வாழ்க்கையை தொலைத்துவிட்டு வீழ்ந்தவர்களே அதிகம். தொப்புள்கொடி உறவுகளையும், இடுக்கண் களையும் நட்புகளையும் ஒருசேர வழித்து தூர வீசிவிட்டு ஜென்ம விரோதிகளாக மாற்றிவிடுகின்றன இந்த தேர்தல் பிசாசுகள்"*
         100 % உண்மையான வரிகள். 

        இது ஏதோ கவிப்பித்தன் என்ற ஒரு நாவலாசிரியர் எழுதிய கதை மட்டும் அல்ல. இந்த நாவலை வாசிக்கையில் உங்களையும், உங்களைச் சுற்றியுள்ள உங்கள் உறவுக்காரர்களையோ, ஊர்காரர்களையோ நிச்சயம் இந்த நாவல் உங்களுக்கு நினைவுபடுத்துமாயின் இது உங்களின் நாவலே.

        நாவலின் பெயரான *மடவளிகள் என்பது வண்ணார், நாவிதர் போன்ற ஊர் சேவகம் புரிவோரைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல்.*

        ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஒரு சிறந்த நூலைப் படித்த திருப்தியை என்னுள் ஏற்படித்திய நூல் - மடவளி.... உங்களுக்கும் அதுபோன்ற அனுபவமே நிச்சயம் இந்நூலை வாசிக்கையில் கிடைக்கும். வாசியுங்கள். பகிருங்கள்.

வாசிப்பும், பகிர்வும்....

திவாகர். ஜெ 
17/05/2020

Comments

  1. Super Anna... வாசிப்பு அனுபவமே புத்தகத்தை படித்து பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது....

    ReplyDelete
  2. மிக்க நன்றி மா..... தொடர்ந்து வாசியுங்கள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்