சுகவாசிகள் - வாசிப்பு அனுபவம் 97

வாசிப்பு அனுபவம் - 97

நூல் : சுகவாசிகள்
ஆசிரியர் : கரிச்சான்குஞ்சு
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 135
விலை : ₹  150
வகை : குறுநாவல்கள்

          நூலாசிரியரான கரிச்சான்குஞ்சு தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தவர்.  இவருடைய இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். 'கரிச்சான்' என்ற புனைப்பெயர் கொண்ட கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) மீது கொண்ட பற்றினால் இவர் "கரிச்சான்குஞ்சு" என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 

          "சுகவாசிகள்" (மற்றும்) "ஒரு மாதிரியான கூட்டம்" ஆகிய இரண்டு குறுநாவல்கள் இணைந்த நூல் இது. 

           முதல் நாவலான "சுகவாசிகள்"நாவல் குறித்து.......
            தனது மூத்த மகனான கோபாலன் தன்னை செருப்பால் அடித்து கொண்டிருக்கையில் சாலையில் குடிபோதையில் புரண்டு விழும் வீ.என்.எஸ். எனும் சீனுவை தெருவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், கோபாலனின் ஆசிரியர் "அடப்பாவி! நீயா இப்படி?! என்று அதிர்ச்சியோடு வந்து தாங்கி காப்பாற்றுகிறார்.

         அதன் பின் எதிர்வீட்டு ராமு கோபாலனின் ஆசிரியரிடம் கூறுவதுபோல் கதை தொடங்குகிறது. ராமு அவரிடம் கூறுவது போல் தொடங்கும் கதை அப்படியே நிகழ்காலத்தில் நடப்பது போலவே கதை நகர்வு மாறி விடுகிறது. அது அவ்வாறு மாறிய புள்ளி எது என்பதையே நாம் அறியாதவாறு விளக்கொளிக்கு மயங்கிய விட்டிலாய் கதைக்குள் ஈர்க்கப்பட்டு விடுகிறோம். இது ஒருவர் இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருக்கும் கதை என்ற பிரக்ஞையே நமக்கு அத்தோடு நாவலின் கடைசி பக்கத்தில் தான் தோன்றுகிறது. 

          நாகு அய்யர், நாகுவின் நான்காவது மனைவி, ஊர் பெரியவர் கோவாலி, நாகு அய்யரின் முந்தைய தாரத்து பிள்ளைகள், நாகு அய்யரின் நூறு வேலி நிலங்களைக் கவனித்துக் கொள்ளும் அவரின் காரியஸ்தர் சின்னசாமி அய்யர், ராசாளி, ...... என கதையில் பல பாத்திரங்கள் இடம் பெற்றாலும், சினிமா பாணியில் சொல்வதானால் ஒவ்வொரு பாத்திரமும் தனக்கான பங்களிப்பை மிகக் கச்சிதமாக நாவலில் செய்துள்ளனர். அவ்வாறு மிக நேர்த்தியாய் கதாபாத்திரங்களை வார்த்துள்ளார் நூலாசிரியர். 

            தனித்த ஒரு மனிதரின் காமம் நன்கு செழிப்போடு வளர்ந்த ஒரு தலைமுறையை எவ்வாறு சீரழிக்கிறது என்பதை நாவலில் இருந்து உணர முடிகிறது. மேலும், செல்வ செழிப்பு மிக்க கணவருக்கு வாழ்க்கைப்படும் ஓர் இளம் மனைவிக்கு காசு, பணத்தையும் தாண்டிய தனிப்பட்ட உடலியல் தேவைகளால் நிலை மீறிய காமத்தேடலால் தன் பிள்ளையே வெறுக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதையும், அத்தோடு குடியால் எவ்வளவு அதிக செல்வமும் ஒரே நாழிகையில் அழிந்து விடும் என்பதையும் உணர்த்துகிறார் நூலாசிரியர். 
            
            நாகு ஐயரின் கணக்குகளை கவனித்துக்கொள்ளும் கணக்கு பிள்ளையான சின்னசாமி ஐயர் தன்னளவில் நேர்மையாய் இருந்தாலும், "தேனை எடுத்தவன் புறங்கையை நக்க தான் செய்வான்" என்பதை போல நாகு அய்யரை தெரியாமல் சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றுகிறார். எனினும் அவரின் குடும்பம் கெட்டபின்னும் தன் முதலாள் விஸ்வாசத்தைக் கைவிடாத ஒரு உண்மை ஊழியனாய் மனதில் நிலைக்கிறார். 
            
            மொத்தத்தில், நாவலில் பொது நலனை எண்ணாமல் தன் சுயநலம் ஒன்றையே பெரிதாய் நினைக்கும் மனிதர்கள் முடிவில் எவ்வாறு அழிந்து போகிறார்கள் என்பதை கதை ஓட்டத்தோடு சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். நாற்பது, ஐம்பதுகளில் இந்தியாவில் மேலோங்கியிருந்த முதலாளித்துவ மனப்பான்மை, ஆண்டான்-அடிமை முரண்பாடுகளையும் நாவலில் தொட்டுச் செல்கிறார். 

          இரண்டாவது நாவலான, "ஒரு மாதிரியான கூட்டம்" நாவலும் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்ட நாவல் தான். வாசியுங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்....

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
15/05/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்