அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல - வாசிப்பு அனுபவம் 96

வாசிப்பு அனுபவம் - 96
நூல் : அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
ஆசிரியர் : ச. மாடசாமி
வெளியீடு: Books for children
பக்கங்கள் : 72
விலை : ரூ. 70
வகை : கட்டுரைகள்

"அன்பு என்பது ஒரு தந்திரமா?" என என்னைக் கேட்டால் ஆம் நிச்சயம் அது ஒரு தந்திரம் தான்..... 

கொரோனோ விடுமுறையிலும் பிள்ளைகளை நிம்மதியாய் இருக்க விடாமல் ஆன்லைன் வகுப்பு, சிறப்புத் தேர்வு என்றெல்லாம் பெற்றோரும், ஆசிரியர்களும் துன்புறுத்துகையில் இதெல்லாம் தேவையா? என்று அவர்களிடம் வினா எழுப்பினால் அதெல்லாம் அவர்கள் மீது நாங்கள் கொண்ட அளவு கடந்த அக்கரையினால் தானே என்று பின்னணியில் லாலா லாலாலா...... என்று விக்ரமன் பட ஸ்டைலில் உணர்ச்சிப்பூர்வமாய் கூறுமிடங்களில் அன்பு ஒரு தந்திரமாகத்தானே கையாளப்படுகிறது.

விரும்பியப் பெண்ணை/ ஆணைத் தான் திருமணம் செய்வேன் என தெளிவாய் - உறுதியாய் இருக்கையில், உன்னை பெத்தவங்களைக் கொஞ்சம் யோசிச்சு பாரு பத்து மாசம் சுமந்தவள், தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தவர், ........ என்றெல்லாம் உற்றார், உறவினர் பக்கம் பக்கமாய் நாட்டைத் திருத்தும் சங்கர் பட பாணியில் வசனம் பேசும் இடங்களிலெல்லாம் அன்பென்பது ஒரு தந்திரம் தானே? 

*"காரியம் நகர்த்தும் தந்திரங்களில் ஒன்றாக அன்பும் இருக்கிறது - இன்றும், என்றும்!"* என்று நூலாசிரியர் கூறுவது மிகப் பொருத்தமான வரிதான் அல்லவா?

முகநூலில் சில ஆசிரியர்களின் பதிவுகளைப் பார்க்கையில் நமக்குத் தோன்றுவதைப் போலவே ஆசிரியருக்கும் தோன்றியிருக்கும் போல. *"குடும்பத்துக்குள் இருக்கும் மிகவும் தனிப்பட்ட அன்பு முதல் - வகுப்பறை அன்பு வரை எல்லாம் 'தம்பட்டம்' ஆகி இருப்பதை சில முகநூல் பதிவுகளில் பார்க்க முடிகிறது"*
அதே நேரம் மாணவர்களுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் ஆசிரியர்களையும் அடையாளப்படுத்துகிறார்.  *"பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதை விட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தந்திர தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள். பள்ளிக்கு பெருமை 'ரிசல்ட்' அல்ல. அன்பின் மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள் தான் பள்ளிக்கு பெருமை"* என்று ஆசிரியர்களைப் புகழ்கிறார்.

அப்பாவித் தனமாய் இருப்பவர்களை, உலகம் 'முட்டாள்' என்று கேலி செய்வதை கழுதை வாங்கப்போகும் தங்கப்பன் கதை வாயிலாய் உணர்த்தி கேலி செய்வோரை சிந்திக்க வைக்கிறார் மாடசாமி அய்யா அவர்கள்.

*"இலக்கணக் கண்கள் காணாத சித்திரங்கள்"* என்ற அத்தியாயத்தில் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களைப் பற்றி அய்யா கூறும் தகவல்கள், உண்மையில் ஓர் ஆசிரியனாய் இத்தனை நாட்களில் எத்தனை மாணவர்களின் திறன்களை கண்டறியாமல் - வெளிக்கொணராமல் விட்டிருப்போம் என்று மனம் நோக யோசிக்கவும் வைக்கிறார்.

*"ஒரு புத்தகம்....  ஒரு கொலை - சிவாஜியார்?..."* என்ற கட்டுரை நமக்குள் பல்வேறு சிந்தனைகளை தூண்டி விடுகிறது. அரசியல், பண்பாடு, ஆட்சியைப் பிடிப்பதற்காக கட்சியினர் பயன்படுத்தும் மதம் சார்ந்த பொய்கள் என ஒரு சிறந்த அரசியல் கட்டுரையாக இது அமைந்துள்ளது. மராட்டிய மன்னன் மாவீரன் சத்ரபதி சிவாஜி குறித்த பொய்யான மத ரீதியான பரப்புரைகளை வரலாற்று ஆதாரங்களோடு மறுக்கின்றார் ஆசிரியர். *"ஒன்றோடு ஒன்று கலந்து கிடக்கும் வரலாற்றைச் செங்குத்தாகப் பிளந்து இந்து-முஸ்லிம் பகையாக மட்டும் காட்ட நினைக்கும் 'வரலாற்று விரோதிகளை' எதிர்கொள்ள வேண்டிய காலம் இது. வரலாற்றுப் பொய்யர்கள் ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் போது உண்மையான வரலாற்று ஆசிரியர்களின் பணி மிக கடினமாகிறது* என்ற உண்மையையும் உரத்துச் சொல்கிறார்.


நூலின் பிற கட்டுரைகளும் நம்மை ஆழமாய் சிந்திக்க தூண்டுவதோடு, அறிவு பூர்வமாய் உணரவும் வைக்கின்றன. பொதுவாகவே, மாடசாமி அய்யாவின் நூல்கள் அனைத்தும் கல்வியியல் சார்ந்தவை என்பதையும் தாண்டி நமக்கு வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுப்பதாக அமையும் அதற்கு எந்த நூலும் விதிவிலக்கல்ல. "புதிய தலைமுறை கல்வி இதழில்" வெளியான அய்யாவின் நேர்காணலும் இறுதி கட்டுரையாக இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மாடசாமி அய்யா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை நம்மாலும் அறிந்து கொள்ள இயலுகிறது. அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டிய நேர்காணல் அது.

இறுதியாக நூலில் இருந்து சில வரிகள்:

--> *"குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற தொழில்நுட்பம் மட்டும் போதாது. பாட புத்தகம் மட்டும் போதாது. உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்"*

--> *" ஐ.ஐ.டி. வளாகங்களில் உட்கார்ந்து இந்தியாவிற்கான கல்வி கொள்கையை வகுக்க முடியாது. ஏழை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் ஏறி இறங்க வேண்டும். அப்போதுதான் நியாயமான - சமூகநீதி சார்ந்த ஒரு கல்விக் கொள்கையை வகுக்க முடியும்."*

--> *"கல்வியின் தேவை எல்லோருக்கும் ஒரே மாதிரியா? சிலருக்கு சாப்பாட்டு ருசி; மிக பலருக்குத் தண்ணீருக்கான தாகம்."*

--> *"அறிவுக்கூர்மை பட்டும் ஆசிரியர் மாணவர் உறவு பலப்பட்டும் விளங்குகிற வகுப்பறையில் கண்டுபிடிப்புக்குப் பஞ்சமிராது. அறிவு, உறவு இரண்டுமின்றி 'சடங்குகளே' முதன்மைப்பட்ட உயிரற்ற வகுப்பறையில், கண்டுபிடிப்பு மலர்வதேது?"*

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
05/05/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்