மதில்கள் - வாசிப்பு அனுபவம் 95

வாசிப்பு அனுபவம் - 95


நூல் : மதில்கள்
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 71
விலை : ரூ. 90

       பொதுவாகவே வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துக்களை வாசிப்பதென்பது வெல்லப் பானைக்குள் கைவிடுவதைப் போன்றது. வெல்லத்தில் கை தொட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகும் கை இனிப்பதை போன்றே, பஷீரின் எழுத்துக்களை வாசித்த பிறகும் நிரந்தரமாய் ஒரு மகிழ்ச்சி உள்ளத்தில் தங்கிவிடும்.
     
       மலையாள புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாக திகழ்ந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்.  அவர் எழுதிய ஒரு மகத்தான காதல் சித்திரம்தான் *"மதில்கள்"* இதை காதல் காவியம் என்று கூறுவதா; வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல் என்பதா; அல்லது ஒரு சிறைவாசியின் சிறையனுபவம் என்று எடுத்துக் கொள்வதா? எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அனைத்திற்கும் இந்த நாவல் பொருத்தமானதாகவே இருக்கிறது.
     
        ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாய் சிறைக்கு வரும் பஷீர் அங்கு நடக்கும் தனது அனுபவங்களைக் கூறுவதாய் அமைந்தது இந்நாவல். சிறை என்றால் சினிமாவில் காட்டப்படுவது போல பயங்கரமான குற்றவாளிகள் மட்டுமே நிரம்பியிருக்கும் இடம் மட்டுமல்ல; அங்கு இருப்பவர்களும் மனிதர்கள் தானே; அவர்களுக்கும் அன்பு, பாசம், காதல், காமம் முதலிய உணர்ச்சிகள் அனைத்தும் இருக்கத்தானே செய்யும்? இவை அனைத்தையும் இந்த சிறிய நாவலில் ஒருங்கே காட்டுகிறார் பஷீர்.
       
     "பட்டாம்பூச்சி, ஊழல், உளவு, அரசியல்,......" போன்ற பல நூல்களில் ஏற்கனவே சிறை என்றால் எப்படி இருக்கும்; அங்கு புழங்கும் மனிதர்களுக்கு இடையிலான உறவு எப்படிப்பட்டது; என்பதையெல்லாம் ஓரளவுக்கு வாசித்து அறிந்திருந்தாலும் பஷீரின் ஹாஸ்யம் கலந்த வார்த்தைகளில் அதை வாசிக்கும் பொழுது சிறை பற்றிய வேறொரு புதிய பிம்பம் நமக்கு அறிமுகமாகிறது.
   
       பஷீரை அடைத்து வைத்திருக்கும் ஆண்கள் சிறைக்கும், அடுத்துள்ள பெண்கள் சிறைக்கும் இடையில் ஒரே ஒரு மதில் மட்டுமே இடைவெளி. அரசியல் கைதியாக சிறை உள்ளே வந்த ஒராண்டில் பஷீரைத் தவிர்த்து அவரின் பிற அரசியல் கைதி நண்பர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட பஷீர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. அந்த கோபத்தில் ஜெயிலிலிருந்து தப்பிக்க உண்டான ஆயத்தங்களை செய்கிறார் பஷீர். அப்படி தப்பிக்க நினைத்து கொண்டிருக்கும் வேளையில்தான் மதிலுக்கு அந்த பக்கம் இருக்கும் பெண்கள் சிறையிலிருந்து ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் "நாராயணி". இருவரின் காதலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது. நடுவில் மதில். ஒருவரின் முகம் மற்றவர் பார்க்காமலே அவர்களுக்கு இடையிலான காதல் பரிமாற்றங்கள் அரங்கேறுகின்றன.  இவ்விடங்களில் தான் ஒரு சராசரி மனிதனின் காதல், காமம் முதலிய இயல்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஆசிரியர்.
     
       ஒருகட்டத்தில் ஆண்களின் சிறையிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு நாராயணி வியாழக்கிழமை வருவதாகக் கூறுகிறார். அவளை முதன்முதலாய் பார்க்கப்போகும் ஆவலோடு காத்திருக்கிறார் பஷீர்.  ஆனால் விதி...... புதன்கிழமையே பஷீர் விடுதலை செய்யப்பட்டு விடுகிறார். இருவரும் இறுதி வரை பார்க்கவேயில்லை. *"ஜெயிலின் பெரிய கதவு பயங்கர ஓசையுடன் பஷீருக்கு பின்னால் மூடுப்படுவதுடன்"* நாவல் முடிகிறது.
     
        கதையை கேட்கையில், இதில் ஏதும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லையே என்று எண்ணம் எழலாம். ஆனால் நாராயணிக்கும், பஷீருக்கும் இடையிலான அந்த உரையாடல்கள் நம்மை சிலிர்க்க வைப்பவை. ஒரு மனிதனின் உள் மனதை உணர வைப்பவை. ஒரு பெண்ணின் மீதான காதல் ஒரு மனிதனின் மனதை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதை புரியவைப்பவை.
       
       பொதுவாகவே, பஷீரின் நாவல்களில் எதார்த்தமாக ஆங்காங்கே நகைப்பு இழையோடும். இந்த நாவலிலும் அப்படித்தான். மறுநாள் விடுதலை என்று அறிவிக்கப்பட்டவுடன் சக கைதிகள் அனைவரும் தங்கள் துணியை இஸ்திரி போட்டு, முடி வெட்டி கொண்டும்,  சவரம் செய்து கொண்டும் தங்களை அழகாக்கி கொள்ளும் பொழுது தானும் அவ்வாறு செய்ததை பற்றி இவ்வாறு எழுதுகிறார் பஷீர்.
       *"கூட்டத்தோடு கூட்டமாக நானும் வழுக்கைத் தலையில் எளிமையாக தெரிகிற முடியை வெட்டி, முகத்தையும் மழித்துக் கொண்டேன்; மீசையை ஒழுங்குபடுத்திக் கொண்டேன்; அழகனாகி விட்டேன் என்ற நம்பிக்கையுடன் சந்தோஷப்பட்டேன்"*  மிக எளிமையான வரிகள் தான்.  ஆனால் வாசிக்கும் பொழுது உதட்டின் கடைக்கோடியில் புன்னகை அரும்புவதை உணர முடியும்.

சிறையில் தான் அமைக்கும் ரோஜா தோட்டம் பற்றியும், தாவரங்களுக்கும் தனக்கும் இடையேயான நட்பை பற்றியும் பஷீர் விவரிக்கும் இடங்களெல்லாம் வசீகரிக்கின்றன.

நாவலிலிருந்து எனைக் கவர்ந்த வரிகள் இவை:

*" சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை நான் ஒருபோதும் வீணாக்கியதில்லை. மானுட குலத்துக்கான கடவுளின் பிரத்தியேக வரம் இந்த சிரிப்பு"*

மகிழ்வோடு வாசிப்போம்; மங்காத புகழோடு வாழ்வோம்.....

வாசிப்பும், பகிர்வும்...

~ *திவாகர். ஜெ* ~
25/04/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்