உயிரே உயிரே - வாசிப்பு அனுபவம் 94

வாசிப்பு அனுபவம் - 94

நூல் : உயிரே உயிரே
ஆசிரியர் : மாலன்
வெளியீடு : புதிய தலைமுறை
பக்கங்கள் : 168
விலை : ரூ. 160

வாழ்வெனும் பெருங்கடலில் சிக்கித் தவித்து ராட்சச அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு கரை தெரியாது கலங்கி நிற்கும் மானிடருக்கு கலங்கரை விளக்கமாய் விளங்குவது  - காதல்

சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடுகள் எல்லாம் கடந்து அனைவரும் தொழும் ஒரே கடவுள் ஏதாவது உண்டா என்று யாரேனும் கேட்பார்களெனில் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம் அந்த கடவுள் -  காதல் தானென்று.

உலகம் தோன்றிய நாள் முதலாய் உலகில் பல விஷயங்கள் காலமாற்றத்திற்கு உட்பட்டு மாறி  வந்திருக்கிறது. ஆனால் இந்த காதல் மட்டும், உலகில் தான் தோன்றிய நாள் முதலாய் மாறாதிருக்கும் கரப்பான் பூச்சியைப் போல் அனைவருக்குள்ளும் வெளிப்படையாயும்,  மறைந்தும் இன்று வரை நீடித்து உயிர் வாழ்ந்து வருகிறது.

வரலாற்றில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் இருக்கிறது.  அரசர்களின் புற வாழ்க்கை பேசப்பட்ட அளவிற்கு அவர்களின் அகம் பேசப்பட்டது இல்லை. ஒருவேளை அவர்களின் வாழ்க்கையை ஆராய்வோமானால் அதில் காதல் நிச்சயம் இருக்கும். இது அரசர்களுக்கு மாத்திரமல்ல எளிய மனிதர்களுக்கும் பொருந்தும்.

"உயிரே உயிரே" என்ற இந்நூல், *"ஆபிரகாம் - மேரியின்"* காதல் முதற்கொண்டு *"ராஜீவ் - சோனியா"* காதல் வரை 18 இணையரின் காதல் வாழ்வை பேசுகிறது.

எல்லா காதலும் இன்பமானதாய் மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லையே. துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்வையும் இந்நூல் பேசுகிறது. அதேபோல் காதல் என்பது ஒருவருக்கு ஒருவர் மீது மட்டுமே வரக்கூடியது என்ற ஒரு செடியில் ஒரு பூ என்ற சினிமாத்தனமான பிம்பத்தையும் உடைத்தெறிக்கிறது இந்நூல்.

காதலுக்காக சூரியன் மறையாத தேசத்தை ஆண்ட மன்னர் தனது அரச பதவியை துறந்த கதையை கேட்டிருக்கிறீர்களா நீங்கள்? அந்த அரசர் இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் அவரின் அன்பிற்கு பாத்திரமானவள் வாலிஸ்.

கண்டதும் காதல் என்பதில் உங்களுக்கெல்லாம் எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வரலாற்றின் பல காதல் பக்கங்கள் இந்த வார்த்தைகளினால் தான் நிரம்பியுள்ளன. அதைப்போல் சாதி, மதம் மாத்திரமல்ல பணத்தையும் கடந்தது தான் காதல். இதற்கு *"நெல்சன் மண்டேலா - பின்னியின்"* காதலும் விதிவிலக்கல்ல. வசதியான வீட்டுப் பெண்ணான பின்னி எந்த வசதியும் இல்லாத நெல்சனை கரம் பிடித்த காதல் கதையை கண்களில் மின்னல் மின்ன படிக்க இந்நூலை தேர்ந்தெடுத்து வாசியுங்கள்.

மார்க்ஸ் - ஜென்னி : வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காதல் இவர்களுடையது. மார்க்ஸோடு 38 ஆண்டுகள் வாழ்ந்தார் ஜென்னி. ஜென்னி மறைந்த அடுத்த 15 மாதங்களில் இறந்தார் மார்க்ஸ். அந்த 15 மாதங்களும் அவர் இருந்தார். அவ்வளவு தான். வாழ்ந்தார் என்று சொல்வதற்கில்லை. எத்தனை ஆழமான காதல் மார்க்ஸுக்கு ஜென்னி மீது.!

அதேபோல், இந்த நூல் வெறும் காதல் சமாச்சாரங்களை மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். இதிலிருந்து பல்வேறுபட்ட பாட புத்தகங்களில் நாம் வாசிக்காத பல அரிய தகவல்களும் நமக்கு காணக் கிடைக்கின்றது.
ஐன்ஸ்டீன் எப்பேர்பட்ட அறிவியல் மேதை என்பதை நாம் அறிவோம். ஐன்ஸ்டீன் இல்லையேல் இன்றைக்கு இயற்பியல் என்ற துறையே இல்லை என்று கூட அடித்துச் சொல்லலாம். ஆனால் அவர் காதலி மிவாவின் எண்ணங்களைக் கொள்ளையடித்து  தான் அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்தார் என்று வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்திருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதற்கு உதாரணமாக அவர்கள் கூறுவது மிவா இறந்தபின் உலகம் போற்றும் எந்த ஒரு கண்டுபிடிப்பையும் ஐன்ஸ்டீன் செய்யவில்லை என்பதை தான்.

இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி என்பதாக மட்டுமே இத்தனை நாட்களாக தெரியும். ஆனால் அவரும் இந்திராவும் ஒரே வீட்டில் இறுதிவரை வசிக்கவில்லை என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

அதேபோல் இளமையில் மலரும் காதல் இறுதி வரை அப்படியே நீடிக்கும் என்றும் சொல்வதற்கில்லை. இதற்கும் பல உதாரணங்கள் வரலாற்றின் பக்கங்களிலேயே இருக்கிறது. இளமைத் துடிப்பில் கசிந்துருகும் காதல் வேலைப்பளுவின் காரணமாகவும் தவிர்க்க இயலா அரசியல் காரணங்களாலும், சரியான புரிதலின்மையாலும் கரைந்து விடுவதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. உதாரணம் ஜின்னா - ரூட்டி காதல்.

எது எப்படியோ, வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில் காதலால் மனதளவிலும், உடலளவிலும் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக அன்றைக்கும், இன்றைக்கும் பெண்களே இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நூலில் வரும் ஒரு பத்தி இது:
*"இருபதில் எழுகிற காதலுக்கும் முப்பதில் முளைக்கிற காதலுக்கும் இடையே ஒரு நுட்பமான வித்தியாசமுண்டு. முதல் காதல் ஒரு மின்னலைப் போல. ஒளி பொருந்தியது; வலி பொருந்தியது; ஆனால் ஏதோ ஒரு கணம் மறைந்துபோகும். நடுவயது காதல் நதியை போல. மெல்ல ஓர் ஊற்றாக துவங்கும், ஓடையாக ஊர்ந்து, அருவியாக சரிந்து, வேகமெடுத்து விரைந்து பாயும்."*

ஏனோ காந்தி - கஸ்தூரிபா காதல் வாழ்க்கையை வாசிக்கையில் காந்தி மீது ஓர் இனம் புரியாத கோபம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

காதலைப் பற்றிய பல்வேறு வசனங்களை நூலாசிரியர் ஆங்காங்கே தூவி சென்றிருக்கிறார்.
*"வாள் வாளாக நீட்டிக்கொண்டிருக்கும் கற்றாழைகளுக்கு நடுவே பூத்த கருஞ்சிவப்பு மலர் போல வாழ்வில் வந்த முதல் வசந்தம் அது"* என்று ஓரிடத்தில் விவரிக்கிறார்.

*"அட்லாண்டிக் கடல் காற்று சில்லென்று இருந்தது. உறவுகளைப் போல ஊசியாக குத்தவில்லை. நட்பைப் போல இதமாக இருந்தது"* நூலில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை.

நூலின் கடைசி அத்தியாயம் "ராஜீவ்- சோனியா" காதலைப் பற்றியது. இந்திரா தனது மகன் ராஜீவிடம் கேட்ட அதே கேள்வியை, சோனியா தனது மகன் ராகுலிடம் கேட்கும் அதே கேள்வியோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.
அந்த கேள்வி : *"மகனே! எனக்கு உதவி செய்வாயா?"*
இந்த வரியை படித்து முடிக்கையில் உடம்பு தானே சிலிர்க்கிறது. (முழு அத்தியாயத்தையும் வாசிக்கையில் உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்)

பலதரப்பட்ட உலக தகவல்களையும், கசிந்துருகும் காதலையும் ஒரே இடத்தில் ஆர்வத்தோடு வாசிக்கவும், தெரிந்து கொள்ளவும் விரும்புவோர் நிச்சயம் இந்த நூலை வாசிக்கலாம். மிகுந்த விருப்பத்தோடும் ரசனையோடும் வாசிக்க ஏற்ற நூல் மாலனின் "உயிரே உயிரே"

வாசியுங்கள்..... வாசிப்பே சுவாசமாகட்டும்.

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
24/04/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்