கனலி இணைய இதழ் - வாசிப்பு அனுபவம் 91

வாசிப்பு அனுபவம்  - 91

நூல் : கனலி இணைய இலக்கிய இதழ் மார்ச் 2020
ஆசிரியர் : கனலி ஆசிரியர் குழு
வெளியீடு : கனலி இணையதளம்
பக்கங்கள் :
விலை : இலவசம்

இதுவரையிலான எனது வாசிப்பு அனுபவக் கட்டுரைகளில் இது சற்றே வித்தியாசமான ஒரு கட்டுரை. இதுவரை நான் எழுதிய வாசிப்பு அனுபவங்கள் அனைத்தும் நூல்களை வாசித்து நான் ரசித்தவற்றை பதிவு செய்தவை.  ஆனால் இது ஓரு மாத இதழ் பற்றிய வாசிப்பு அனுபவம். அதுவும் இலக்கிய இணைய இதழ் பற்றிய வாசிப்பு அனுபவம்.

இலக்கிய உலகில் நாள்தோறும் பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் தற்காலச் சூழ்நிலையில் முன்னணியில் இருப்பது இலக்கிய இணைய இதழ்கள். அந்த வகையில் கனலி என்ற இணையதளம் பல்வேறு வகையான புதுமைகளையும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாதந்தோறும் ஓர் இணைய இதழாக தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.  அதில் நான் வாசித்த கனலி இலக்கிய இணைய இதழ் மார்ச்  2020 பற்றி தான் இந்த வாசிப்பு அனுபவத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

முதலில்,
*"சந்திரா தங்கராஜ்"* அவர்களின் கவிதைகளை பற்றி....

இவரின் மூன்று கவிதைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. அதில் முதல் கவிதையான, *"மலைக்கு திரும்புதல்"* என்ற கவிதையானது அழகான இயற்கை இயலோடு அமைந்துள்ளது. ஒரு குன்று ஆடு மேய்ப்பது போலவும், அந்த ஆடுகள் தொலைந்து அது தேடுவது போலவும் அமைந்த இந்த கவிதை உள்ளபடியே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

*"காடோடி"* என்ற மற்றொரு கவிதையில் "சாவதற்கு ஒரு நிலம் வேண்டும் மகனே" என்று நாடோடியாய் அலையும் ஒரு குடும்பத்தின் வாழ்வை கவிதையாய் தன் வார்த்தைகளில் வடித்துள்ளார்.

*"வாழ்வெனும் தேநீர்"* என்ற கவிதை என்னை இரு முறை வாசிக்க வைத்தது. வார்த்தைகளில் அத்தனை வல்லமை. உள்ளதைக் கூறும் தன்மை. அதில் கடைசி வரி இவ்வாறு முடிகிறது.
//
*"வாழ்வு ஒரு சுதந்திரமான தேநீர்*
*அது எப்போதும் தெரு முக்கில் தான்* *கிடைக்கிறது*
//

அடுத்து *"ரூஹின் யாத்திரை"* என்ற சிறுகதையை *"ஜிஃப்ரி ஹஸன்"* என்பவர் எழுதியுள்ளார்.
இது மரணத் தருவாயில் இருக்கும் ஒரு முஸ்லிம் பெரியவரை குறித்தான சிறுகதை. உண்மையில் இதில் வரும் பல வார்த்தைகளை இப்போதுதான் நான் முதல் முறையாய் கேட்கிறேன். உதாரணமாக மையத்து, பக்குல், ரூஹ், .... இந்த வார்த்தைகள். ஆயினும், சிறுகதை மனதைத் தொடுகிறது. மரணத் தருவாயில் இருக்கும் அந்த முதியவர் எப்படியும் நிச்சயம் இறந்து விடுவார் என்ற எண்ணத்தில் இறுதியாக அவர்களின் மத வழக்கப்படி வாசிக்கும் குர்ஆனை வாசிக்கிறார்கள். ஆனால் அவர் இறக்காமல் எழுந்து அமர, ஏமாற்றத்துடன் அனைவரும் திரும்புகின்றனர். அதன்பின் ஒரு சில தினங்களில் அவர் இறக்கிறார். முதியவர்கள் பழமையை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையொட்டி ஒரு வரி இது: *"மனிதர்களின் இன்றைய கஷ்டங்களும், துயரங்களும் மிக மோசமாக இருக்கின்றன  ஆனால் அவற்றுக்கான பரிகாரங்கள் மிக எளிமையானதாகவும்,  சிடுக்குகள் எதுவுமற்றதாக இருக்கின்றன "*
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலே அவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதாய் உறவினரும், சுற்றத்தாரும் வந்து பார்த்து அவரை மனதளவில் மேலும் வலுவிழக்கச் செய்வதையே இச்சிறுகதையில் இவர் நாசூக்காய் சாடுகிறார்.

அடுத்ததாக வே. பிரசாந்த் அவர்கள் எழுதிய *"வலசை தொலைத்த யானை"* என்ற சிறுகதையைப் பற்றி....
யானைகள் பயிற்சி முகாமில் இருந்து தப்பி வந்த ஒரு கும்கி யானை வலசை போக நினைத்து காடுகளுக்குள் செல்கிறது. ஆனால் காட்டுயானைகள் அதனை தங்களோடு சேர்த்துக் கொள்ளவில்லை. நாட்டுக்குள் புகுந்த அது மனிதர்களால் விரட்டப்படுகிறது. சுற்றியலைந்து உணவேதும் சரியாய் கிடைக்காமல் பின்னர் வேறு வழியின்றி மீண்டும் தனது பயிற்சி முகாமுக்கு திரும்வதாய் கதை முடிகிறது. அந்த யானையே கூறுவது போல் அமைந்த இக்கதையில் காடுகளை அழித்து நகரங்களாக மாற்றபட்டதையும், பயிற்சி முகாம்களில் யானைகள் படும் பாடுகளையும் நூலாசிரியர் ஆவணமாக பதிவு செய்கிறார்.
கதையின் ஓரிடத்தில், யானை *"தோட்டத்த அழிச்சிட்டேன்னு என் மேல கோபப்படுறவங்க கிட்ட,  என் காட்ட அழிச்சி தா தோட்டம் போட்டிருக்கீங்கன்னு எப்படி சொல்றது.....?"* என்று அந்த யானை எண்ணுவது மனிதர்கள் அத்தனை பேரின் முகத்திலும் அறையும் உண்மை. அருமையானதொரு சிறுகதை இது.

லி. பார்த்தசாரதி அவர்கள் எழுதியுள்ள *"துர்ஷினியின் பிரவேசம்"* என்ற சிறுகதை *"இப்படி எல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்"* என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது.  கதையை வாசிக்கையில் நம்மாலும் நம்ப இயலவில்லை ஆனாலும் வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் நம்பித்தான் ஆகவேண்டிய கால சூழ்நிலையில் இருக்கிறோம்.

ராஜலட்சுமி அவர்கள் எழுதியுள்ள *"கரும்பு தோட்டமும் கரியும்"* என்ற கதை உழைப்புக்கேற்ற ஊதியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, தனக்கு கிடைத்ததை தன்னை சார்ந்தவர்களுக்கும் பகிர்ந்து உண்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சிறுவர்களுக்கு அழகான ஒரு யானை கதையின் மூலம் விளக்கியுள்ளார்.

*உணர்வு* என்ற தலைப்பிலான வெண்பா கீதாயனின் சிறுகதை பலவித உணர்வுகளை என்னுள்ளே ஏற்படுத்தியது. வள்ளிக்கும், மாரியப்பனுக்குமான உறவினை *"அப்போதும் பாட்டியின் குரல் இடைஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தது"* என்ற இறுதி ஒற்றை வரியில் உணர வைத்தமை சிறுகதை முடிவின் உச்சம் எனலாம்....

தம்பி அபிலேஷ் இன் ஓவியங்கள் கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவர்கின்றன. அதிலும், "குழந்தையை அணைத்திருக்கும் தாய்" ஓவியத்தில் அத்தனையொரு இயற்கைத்தனம். மிக இயல்பாய் உனக்கு ஓவியம் கைவருகிறது அபிலேஷ்.... தொடர்ந்து இன்னும் நிறைய வரையுங்கள். வாழ்த்துகள்...

பெட்டகம் பகுதியில் எழுத்தாளர் மிலன் குந்தேரா பற்றிய கட்டுரையை எழுதியுள்ளார் எஸ். வாசுதேவன். இதுவரை கேள்விப்படாத ஒரு பெயர். ஆனால், அவருடைய வரலாற்றை வாசிக்கையில் இவ்வளவு சிறந்த எழுத்தாளரின் பெயரை இவ்வளவு நாட்கள் எப்படி அறியாமல் போனோம் என்ற வருத்தமே மிஞ்சுகிறது. தமிழில் மிலன் குந்தேராவின் நூல்கள் ஏதேனும் கிடைக்குமாவென தெரியவில்லை. கிடைக்குமெனில் நிச்சயம் வாசிக்க வேண்டும்.

அசோகமித்திரனின் - கரைந்த நிழல்கள், நாஞ்சில் நாடனின் - எட்டுதிக்கும் மதயானை ஆகிய இரு நூல்கள் குறித்த விமர்சனங்களும் இதழில் இடம்பெற்றுள்ளன. அருமையான நூல் விமர்சனங்கள்.

செந்தில் ஜெகந்நாதனின் *"முத்தத்துக்கு*" என்ற சிறுகதை 39 வயதில் காதல் வயப்படும் ஒருவன் தன் காதலிக்கு வாழ்வில் முதல் முறையாய் முத்தம் கொடுக்க எவ்வளவு பதற்றமும், பயமும் கொள்கிறான் என்பதை தன் எழுத்துகளின் வழியே நம்மை சீட்டு நுனி சினிமா பார்வையாளனைப் போல் அமர்த்தி கதையை மின்னல் வேகத்தில் நகர்த்தி செல்கிறார்.

இன்னும் நிறைய சிறுகதைகள், கவிதைகள், எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்டோரின் கட்டுரைகள், நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள், துப்பறியும் பென்சில், இராவணத் தீவு முதலான தொடர்கள், புகைப்படங்கள், மொழிபெயர்ப்பு படைப்புகள் என ஒரு பல்துறை கலைக்களஞ்சியமாக மிளிர்கிறது மார்ச் 2020 கனலி இலக்கிய இணைய இதழ்.

போட்டிகள் நிறைந்த உலகில் பல்வேறு வித சிரமங்களுக்கிடையிலும் தொடர்ந்து இத்தகையதானதொரு இல்க்கியப் பணியில் தங்களை ஈடுபடுத்தி தமிழிலக்கிய உலகை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தோழர்கள் *திரு. விக்னேஷ்வரன் மற்றும் திரு. சந்தோஷ்குமார்* அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென்பதே ஒரு வாசிப்பாளனாய் எனது எண்ணம்.

கனலி இணைய இதழை வாசிக்க விரும்புவோருக்கான இணைப்புச் சுட்டி இதோ:

கலை இலக்கிய இணையதளம் http://kanali.in/

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ*~
10/04/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்