வேடிக்கை பார்ப்பவன் - வாசிப்பு அனுபவம் 90

வாசிப்பு அனுபவம் - 90

நூல் : வேடிக்கை பார்ப்பவன்
ஆசிரியர் : நா. முத்துக்குமார்
வெளியீடு : விகடன் பிரசுரம்
பக்கங்கள் : 240
விலை : ரூ. 140

நா. முத்துக்குமார் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தோடு தொடங்குகிறது இந்நூலின் முதல்  அத்தியாயம். இரண்டாம் அத்தியாயம், இவ்வாறு ஆரம்பிக்கிறது: *"ஒரு மிகப்பெரிய பொருட்காட்சி சாலையாக இந்த பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும் இவன் அடிக்கடி கற்பனை செய்து கொள்வான்"* இது அவரது வாழ்க்கையை பற்றி கூறுவதற்காக அவர் தொடங்குகிறார். ஆனால் நமக்கோ இந்த நூலை வாசிக்கையில் இந்த நூலே நமக்கு ஒரு பெரிய பிரபஞ்சமாகவும் நாம் அதை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனுமாகவே மாறிப் போகிறோம். நூலில் அத்தனை தகவல்கள். இது ஏதோ ஒரு தனிப்பட்ட நா. முத்துக்குமார் என்ற ஒரு மனிதனுடைய - ஒரு கவிஞனுடைய - ஒரு பாடலாசியருடைய வாழ்க்கை நிகழ்வுகளாக மாத்திரம் நம்மால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. இதில் வரும் வரிகள் அத்தனையும் நம் வாழ்க்கையிலும் நாமும் ஏதோ ஒரு கணத்தில் நிச்சயம் கடந்து வந்த தருணங்களாகவே இருக்கும்.

தனது அம்மா இறந்த பொழுது அது கூட தெரியாத ஒரு சிறு குழந்தையாய் தான் இருந்ததையும், விளையாடச் சென்றதையும் ஆசிரியர் கூறும் பொழுது நம் விழி ஓரம் கண்ணீர் பெருகுகிறது.

தன் மகனிடம் வேண்டுமென்ற வேணு மிஸ் என்ற ஒரு பாத்திரத்தை தானே புனைந்து கூறி அவரை கொடூரமானவராய் சித்தரித்துக் கூறி வைக்க, ஒரு நாள் அதே வேணு மிஸ் வந்து நின்றதையும் நம்பமுடியாமல் பேய் அறைந்த பார்வையோடு இவர் அவரைப் பார்த்ததையும் எண்ணும் பொழுது நமக்கு சிரிப்பு வருகிறது. இறுதியாக, அவர் செல்லும் பொழுது, *"இனிமேலாவது உன் பையனுக்கு இந்த மாதிரி அபத்தமான கதைகளைச் சொல்லாதே;  கதைகள் பொய் தான்; ஆனால் அது சொல்லப்படும் போதும் மற்றவர்களால் கேட்கப்படும் போதும் கை கால் முளைச்சு நிஜமா மாறிடுது"* என்று கூறிவிட்டு செல்கிறார். இனி குழந்தைகளுக்கு கதைகள் கூறும் போது சற்று கவனமாக தான் கூற வேண்டும் என்பதை நான் உணரந்த நொடி அது.

தனது அப்பா ஒரு அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியர் என்றபோதும் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கு செலவிட்டதாய் கூறும் பொழுது உண்மையில் அப்படி ஒரு தந்தையை நினைத்து - சொல்லப்போனால் நூல் முழுக்கவுமே அவர் தன் தந்தையை பற்றி கூறும் பொழுதெல்லாம் ஆசிரியர் முத்துக்குமார் மீது பொறாமை தான் ஏற்படுகிறது.

"பசி என்னும் பெருந்தீ" என்ற அத்தியாயம் உண்மையில் பசியின் கொடுமையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நீங்கள் இதைப் பற்றி ஏன் எழுதக்கூடாது? இதை எழுதினால் நன்றாக இருக்குமே என்று பார்க் ஒன்றில் பார்த்த ஒரு நபர் ஒருவர் தொடர்ந்து அறிவுரைக்கு மேல் அறிவுரைகளாய் வழங்கி கொண்டிருந்த பொழுது இவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ஒரு கவிதையை அவருக்கு மேற்கோள் காட்டியதையும் அத்தோடு அவர் கூற வந்த அறிவுரைகளை நிறுத்திக் கொண்டதையும் கேட்ட பொழுது நிச்சயம் இந்த கவிதையை நினைவுகளில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் பலபேரிடம் நாமும் கூறுவதற்கு பயன்படும் என்ற எண்ணமுமே மேலெழுந்தது.

பேருந்து அல்லது ரயிலில் செல்லும் பொழுது ஜன்னலோர இருக்கை கிடைக்க வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்படுவோம் நாம்.  கவிஞருக்கும் அத்தகைய ஆசை சிறுவயது முதலே இருந்திருக்கிறது. அதற்கான காரணமாய் அவர் கூறுவதும், அவரின் ரசனையுமே  நாம் கவனிக்கவேண்டியது. *"பார்ப்பதற்கும் நிறைய காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும், பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும் இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்கு சம்மதம்"* என்கிறார்.

சிறு வயது முதல், தான் என்னவெல்லாம் ஆக ஆசைப்பட்டான் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் முத்துக்குமார் கூறும் பொழுது நிச்சயம் நாமெல்லாமும் கூட இவற்றில் ஏதாவது ஒன்றாவது சிறுவயது முதல் இவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்பி இருப்போம். எனவே இந்த நூல் நா. முத்துக்குமார் என்ற ஒற்றை மனிதருடையது மாத்திரமல்ல இது நம் ஒவ்வொருவருடையதும் ஆனது என்று கூறினாலும் அது மிகையல்ல.

மேலும் நா. முத்துக்குமார் என்ற பாடலாசிரியர் எடுத்தவுடனேயே ஏதோ பெரிய கவிஞராக - சினிமா பாடலாசிரியராக வந்தவர் அல்ல. அவர் எத்தனை தடைகளையும், அவமானங்களையும் மீறி வந்துள்ளார் - மேலும் எடுத்த ஒவ்வொரு காரியத்திலும் எத்தனை தோல்விகளை அடைந்து அதையெல்லாம் கடந்து நம்பிக்கை தளராமல் மேலெழுந்து வந்துள்ளார் என்பதும் அவர் செய்த ஒவ்வொரு தொழிலிலும் அவர் அடைந்த நஷ்டங்களை படிக்கும் பொழுதெல்லாம் இவை அனைத்துமே நமக்கான ஒரு தன்னம்பிக்கை பாடமாய் தான் மிளிர்கிறது.

சினிமாவில் இணையும் ஆசையோடு சென்னைக்கு வந்தது, பச்சையப்பன் கல்லூரியில் பயின்றது, (பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்) ஸ்காலர்ஷிப் கிடைத்தது, சினிமாத்துறையில் தனக்கு உதவிய நண்பர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள் என தான் மேலெழ காரணமான அத்தனை பேரையும் நன்றியுடன் நா. முத்துக்குமார் குறிப்பிடும் பொழுது நமது மனமும் நம் முன்னேற்றத்தில் பங்கு கொண்டவர்களை நினைவு கூறுகிறது.

ஓரிடத்தில், *"வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்து கொண்டே இருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது"* என்று தன் வாழ்க்கையைப்பற்றி முத்துக்குமார் பதிவு செய்யும் பொழுது, எனது ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையோடு என்னை நான் பொருத்திப் பார்க்கிறேன். அதே வெயில் எனது தலையின் மீதும் சுட்டு எரித்த காலம் அது. எனக்கும் ஆறுதலாய் நிழல் தரும் மரங்களாக இருந்தவை புத்தகங்கள் மட்டுமே.

தனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்களைப் பற்றியும் முத்துக்குமார் ஆங்காங்கே விவரிக்கும் பொழுது 'ஒன்றாம் வகுப்பு கண்ணாடி டீச்சர், மகா டீச்சர், இரண்டாம் வகுப்பு செல்வி டீச்சர், நான்காம் வகுப்பு விஜயலட்சுமி டீச்சர் முதற்கொண்டு இறுதியாய் கல்லூரியில் படித்த பொழுது கற்பித்த ஷீலா மேம், தேவிகா மேம், ஷோபா மேம் என எனது காலமும் 5 முதல் 25 வயது வரையும் நில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தது.

இந்த கட்டுரைகள் அனைத்தும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தவை. வாசகர்களால் அதிகம் விரும்பி வாசிக்கப்பட்டவை. புத்தகமாக வந்த பிறகும் நிச்சயம் லட்சக்கணக்கான கரங்களை சென்றடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த புத்தகத்தை நாம் எந்த விதமாக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிஞனின் சுயசரிதையாகவோ, வாழ்வில் வளர துடிப்போருக்கான முன்னேற்ற நூலாகவோ, அவமானங்களே நம்மை மென்மேலும் செதுக்கும் உளிகள் என்ற வைராக்கியத்தை நம்முள் நூலாகவோ எப்படி வேண்டுமானாலும் இந்த நூலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அத்தனைக்கும் இந்நூல் உகந்ததாகவே உள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி நா. முத்துக்குமார் காஞ்சிபுரம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சார்ந்தவர். எத்தனையோ முறை அய்யம்பேட்டை செல்லும்போதெல்லாம் இந்த ஊரைத் தாண்டித்தான் சென்றுள்ளேன். ஒருமுறையாகிலும் இவர் வாழ்ந்த வீட்டைச் சென்று பார்க்க வேண்டுமென்பதே தற்போதைய என் ஆசை. காஞ்சிபுரத்தை சுற்றியுள்ளப் பகுதிகளை இவர் விவரிக்கும் போதெல்லாம், ஆம் இந்த பகுதிகள் எல்லாம் நாமும் சென்று வந்த பகுதிகள் தானே, இனி அந்த இடங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் நிச்சயம் முத்துக்குமார் அவர்களின் நினைவுகள் தான் உள்ளத்தில் மேலெழும்.

ஆகப் பெரும் வருத்தம் என்னவெனில் இத்தகு கவிஞனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டதே என்பதுதான்.  ஏனோ இயற்கையின் மீது அடக்கவியலா கோபம் எழுவதை இவ்விடத்தில் என்னால் தவிர்க்க இயலவில்லை.

இந்த நூலைப் பற்றி இன்னும் கூற வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தால் காலம் என்னை எனது பால்யத்திற்குள்ளும், கடந்த காலத்திற்குள்ளும் பின்னோக்கி இழுத்து, எனது தந்தையையும், எனது ஆசிரியர்களையும், என் முன்னேற்றத்திற்கு காரணமான பலரையுமே திரும்பத் திரும்ப நினைவு கூற வைக்கிறது. ஒருவேளை இந்நூலைப் பற்றி இன்னும் தொடர்ந்து எழுதுவேனாயின்,  நா. முத்துக்குமார் அவர்கள் கூறியதை விடவும் எனது வாழ்க்கையை பற்றி நிறைய எழுத வேண்டி இருந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், அத்தனை நினைவுகளையும் கிளறி விட கூடியதாய் இந்நூல் அமைந்துவிட்டது.

இறுதியாக, நூலிலிருந்து சில வரிகள்:

--> *"காலம், மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றி விடுகிறது"*

--> *"கல்லூரி என்பது ஒரு மாணவனை கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்க விடும் பருவம்"*

--> *"இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கும். சக மனிதர்கள் மீதான மனிதநேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்த பாடம் சொல்லிக் கொடுக்கும்?"*

--> *"தினமும் புதுசு புதுசா ஏதாவது படைச்சுக்கிட்டே இரு. அதுதாப் உன்னைத் தக்க வைக்கும்"*

நூலின் கடைசி அத்தியாயத்தின் கடைசி பத்தியை சொல்லி முடிப்பதே எனது வாசிப்பு அனுபவத்திற்கு சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். 

*"பனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகி விடும் என்பது சூரியனுக்கு தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளியிக்கும் தெரியும். ஆனாலும் சூரியனை சிறைபிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை"*

கவிஞரின் வாழ்வும் பனித்துளி போல் முடிந்திருக்க வேண்டாம். மிகுந்த மன வருத்தத்துடனே இவ்வாசிப்பினை முடிக்கிறேன்....

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
09/04/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்