கானகக்கன்னி - வாசிப்பு அனுபவம் 87

வாசிப்பு அனுபவம் - 87

நூல் : கானகக் கன்னி
ஆசிரியர் : கல்வி கோபாலகிருஷ்ணன்
வெளியீடு : சாகித்ய அகாதெமி
பக்கங்கள் : 78
விலை : ₹ 45

பல்வேறு மொழிகளிலும் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிறந்த  நூல்களை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடும் நிறுவனமான சாகித்ய அகாதெமி பதிப்பகம் நூல்கள் எப்பொழுதும் குறைந்த விலையில் கிடைக்குமென்பதால் ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் சாகித்ய அகாதெமி ஸ்டாலில் இருந்து சில பல நூல்களை அள்ளி வருவதுண்டு. அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 ரூபாய் விலையில் வாங்கி வந்த நூல் தான் *"கானகக் கன்னி"*

நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் இது ஏதோ மாயாஜால நூல் என்ற எண்ணத்தில் தான் நான் வாங்கியது. ஆனால் இன்று வாசிக்கையில் தான் தெரிந்தது இது நமக்குள் இயற்கை மீதான அன்பை, பற்றுதலை பன்மடங்கு மெருகேற்றச் செய்யும் மந்திரஜால நூல் தானென்று.

இனி கதைக்கு வருவோம்....

காட்டில் ஒரு பெரிய மரத்தை நோக்கி விறகு வெட்டி ஒருவர் கோடரியை வேகமாய் வீசும் போது, "அய்யோ..... அம்மா.....?" என்ற குரல் கேட்டு திடுக்கிறார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்று தெரிந்தவுடன் இது தன் மனபிரமையாய் இருக்குமென்றெண்ணி மீண்டும் கோடரியை ஓங்கி வெட்டும் போது மீண்டும் அதே "அய்யோ..... அம்மா.....!!" என்ற அலறல். மீண்டும் மீண்டும் அதே அலறல் கேட்க பயந்து ஓடவும், *"கொலைகாரா! நில்.... ஆக்கிப் படைப்பதே எம் தொழில்; அழிப்பதன்று! ஆகவே, அச்சமடையாதே!"* என்ற குரல் கேட்கவும் சற்று பயம் தெளிந்து நின்று கவனித்தால் எதிரில் பிரகாசமான கண் கூசும் ஒளியோடு கானகக்கன்னி என்று சொல்லக்கூடிய வனதேவதை நிற்கிறார்.

"தான் எப்படி கொலைகாரனாவேன்?" என்று விறகுவெட்டி கேட்கையில் "மரங்களுக்கும் உயிர் இருக்கிறது" என கானகக்கன்னி கூறுகிறார். "அப்படியா?" என விறகுவெட்டி வினவுகையில், தன் கையில் உள்ள நுண்ணோக்கி மூலமாய் தாவர விதை முதலிய தாவர பாகங்களைக் காண்பித்து ஒவ்வொன்றினைக் குறித்தும் கானகக்கன்னி விளக்குகிறார்.

*"அன்பே அறம். அன்பே ஒளி. அச்சம் தரும் இருளை ஒளி போக்குவதை போல, அச்சத்தை அன்பு அடியோடு அகற்றி விடுகிறது. விலங்கு, பறவை, தாவரம் ஆகிய அனைத்திடமும் நீ அன்பாக நடந்து கொண்டால் அவை யாவும் உன் நண்பர்கள் ஆகிவிடும். அன்பானது வற்றாத ஊற்றைப் போன்றது. நீ அன்பை அள்ளி வீச வீச அது ஊற்றைப் போல பன்மடங்காகப் பெருகி உன்னையே இறுதியில் வந்தடையும். அன்பு காட்ட காட்ட உன் வாழ்க்கை இன்பமயமாக விளங்கும்"* என்று அன்பின் பெருமையை விறகுவெட்டிக்கு உணர்த்துவதோடு இயற்கையின் மீது அன்பு செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நூல் முழுவதும் கானகக்கன்னி மூலமாய் நூலாசிரியர் விளக்குகிறார்.

நூலை வாசிக்க வாசிக்க தாவர உலகம் பற்றி நாம் அறியாத பல்வேறு தகவல்களும் நம்மை விழி அகலச் செய்கின்றன. உதாரணமாக, சாமந்திப்பூ செடியின் அருகில் முளைக்கும் பல சாமந்தி செடிகள் இந்த சாமந்தியின் பூவின் விதையிலிருந்து விழுந்து முளைத்ததாய் தான் நாம் நினைத்திருப்போம். ஆனால் அது அப்படியல்ல என்பதை நூலை வாசித்து என் குடும்பத்தினருடனும் பகிர்ந்தபோது அனைவருமே ஆச்சர்யப்பட்டுதான் போனோம்.

*"சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவையே இயற்கையில் வாழ முடியும்.  எனவே, சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாத உயிரினங்கள் அழிய வேண்டியதே ஒழிய வேறு வழி இல்லை. இதுவே இயற்கை அன்னையின் கடினமான கட்டளை!"* இந்த நியதி தாவரங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும் பொது நியதியன்றோ?

தாவரங்களுக்குத் திருமணப் பருவம் உண்டு. அவற்றிற்கும் திருமணம் ஆகும். தெரியுமா உங்களுக்கு? நூலைப் படிக்கையில் நீங்களும் அதைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

இறுதியாய், *"இயற்கை அன்னை கொடுத்துள்ள செல்வங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, உணவு தயாரித்து, உண்டு வாழ்வதோடு பிற உயிர்களுக்கும் உணவு அளிப்பதும் தாவரமே. அவற்றை அழிக்காமல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது உன் இனத்தாரின் கடமையாகும்"* என்று கானகக்கன்னி கூற கூற தாவரங்களின் பெருமையை உணரும் விறகுவெட்டி இதற்கு பின் தான் இனி மரங்களை வெட்டவே மாட்டேன் என்று கானக்கன்னியின் காலில் விழுந்து சத்தியம் செய்கிறான்.

இயற்கை மீது ஆர்வம் கொண்டோரும், தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விழைவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் - *"கானகக்கன்னி"*

வாசிப்பும், பகிர்வும்

திவாகர். ஜெ
31/03/2020

Comments

Post a Comment

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்