வித்தியாசம் தான் அழகு - வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் : 76

நூல் : வித்தியாசம்தான் அழகு
ஆசிரியர்: ச. மாடசாமி
வெளியீடு : அகரம் அறக்கட்டளை
பக்கங்கள்: 96
விலை : ₹ 100

வித்தியாசம் தான் அழகு - ஆம். வித்தியாசம் என்றைக்குமே அழகு தான். காடுபோல் மொத்தமாய் வளர்ந்திருக்கும் மயிர்க்கூட்டத்தின் நடுவில் ஒற்றை வெண்முடி வித்தியாசமான அழகு மட்டுமல்ல அது அனுபவத்தின் சாயமேறிய பேரறிவும் கூட தானே....

செம்மறியாட்டுக் கூட்டமாய் ஒன்றுபோல் சிந்தித்து சொன்னதற்கெல்லாம் ஆமாமென்று தலையாட்டிய கூட்டத்தின் மத்தியில் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்... என்றுரைத்த கைத்தடி பற்றிய தாடிக்கிழவன் வித்தியாசத்தின் அழகு தானே.....!

*"வித்தியாசம் தான் அழகு - குழந்தைகளுக்கான கதைகளும், பெரியவர்களுக்கான நீதிகளும்"* என்ற உப தலைப்போடு அய்யா திரு. ச. மாடசாமி அவர்கள் எழுதியுள்ள இந்நூல் அகரம் ஃபவுண்டேஷன் நடத்தும் 'யாதும்' இதழில் வெளியான 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும்.

ஒவ்வொரு கட்டுரையிலும் உலக அளவிலான சிறுவர் கதைகள் ஒன்றினைக் கூறி அதிலிருந்து பெரியவர்களுக்கான நீதியினையும் கூறியுள்ளார் பேராசிரியர் ச. மாடசாமி அய்யா அவர்கள். உண்மையில் சிறுவர் கதைகள் என்பவை அவர்களுக்கானவை மட்டுமல்ல. அவை பெரியவர்களுக்கானவை. நாம் அறியவும், உணரவுமான பல வாழ்க்கைப் பாடங்களை கொண்டவை அவை.

முதல் கதையான "The Happy Lion" என்ற கதையில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தினை ரசிக்கும் - அதற்கு ஹலோ சொல்லும் மனிதர்கள் அதே சிங்கம் கூண்டினை விட்டு அவர்களைத் தேடி வெளியே வரும்போது பயந்து ஓடவே செய்கின்றனர். இதனை மையப்படுத்தி,
*"கட்டுப்பாட்டில் வைத்து தான் நம்மால் அன்பு செலுத்த முடியும்; கட்டுப்பாடுச் சற்று விலகி சுதந்திரம் வந்து விட்டால் நாம் மிரண்டு அலறுவோம் என்றால் நாம் தோற்றுவிட்டோம் என்பதுதானே அர்த்தம்?"* என்று வினாத் தொடுக்கிறார் ஆசிரியர். சரியான வினா தானே....?

இவற்றில் என்னை மிகவும் கவர்ந்த கதை, "குரைத்துக் காட்டு ஜார்ஜ்" (Bark George). உண்மையில் மிக அற்புதமான கதை. நீதியும் கூட. ஏறத்தாழ இக்கதையை நான் இந்த ஒரு வாரத்தில் 20 க்கும் மேற்பட்ட முறை பலதரப்பட்ட நபர்களிடம் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை - கூறிவிட்டேன்...  அவ்வளவு கவர்ந்து விட்டது என்னை இக்கதை. நிச்சயம் உங்களையும் கவரும். ஏனெனில் இது நமக்கான - நமது கதை தான்.

*"மின்னும் நட்சத்திரங்களைக் காணவும் கொண்டாடவும் வழக்கமான பார்வை போதும். மறைந்து மங்கி ஒளிந்திருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க அக்கறையுள்ள கண்கள் வேண்டும்; அன்பில் மலர்ந்த பார்வை வேண்டும்"* என்ற தனக்கே உரித்தான ஆழமான முன்னுரையோடு தொடங்கும் "இது கண்களின் காலம்" எனும் கட்டுரையில் வரும் Donkey donkey என்ற கதை மூலமாய் நாம் நாமாய் இருப்பதே அழகு என்பதை அழுத்தமாய் உணர்த்துகிறார்.

பயணத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய நட்பு குறித்தும், மக்களின் நம்பிக்கை குறித்தும் கூறும்,  Pancho Rabbit and the Coyote (முயலும், குள்ளநரியும்) கதையும் கூட இத்தொகுப்பில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கதை.

இத்தொகுப்பில் மிகவும் மனதை நெருடிய - அதிகாரத்தின் உண்மை முகத்தினை திரை விலக்கி காட்டும் ஒரு கதை - The butterfly.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மனியின் நாஜிப் படையினருக்கு அஞ்சி இடம் பெயரும் ஒரு குடும்பத்தின் - அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஒரு பெண்மணி மற்றும் அவரது குழந்தையினைப் பற்றிய கதையிது. இக்கதையின் இறுதியில் அய்யா இவ்வாறு குறிப்பிடுகிறார்: *"அதிகாரத்தின் காலில் மிதிபடுபவை பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல; தனி மனித சுதந்திரம், உரிமைகள் மட்டுமல்ல; அருமையான சித்தாந்தங்களும் அதிகாரத்தின் காலடியில்தான்!"* என்றைக்கும் பொருந்தும் அதிகாரத்தின் வரிகளன்றோ இவை.

இந்நூலிலுள்ள ஒவ்வொரு கதை பற்றியுமே ஏராளமாய் கூற வேண்டுமென்று மனம் துடிக்கிறது. ஆயினும் நீங்கள் நூல் வாங்கி வாசிக்கவும் நான் கொஞ்சம் மிச்சம் வைக்க வேண்டுமல்லவா?

ஒரே மூச்சில் உட்கார்ந்தால் ஒரு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்து விடக்கூடிய புத்தகம் தான் இது. ஆனால், இதை வாசித்து முடிக்க எனக்கு சரியாய் 10 நாட்களாயின.  காரணம் ஒவ்வொரு கதையும் வெறும் கதைகள் மட்டுமல்ல நமக்கான நம் வாழ்க்கைக்கான நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கான போதனைகளும் கூட. உணர்ந்து, மகிழ்ந்து வாசித்ததை மற்றவர்களோடும் பகிர்ந்து இந்நூலை முடிக்க இத்தனை நாட்களாயிற்று எனக்கு...

இறுதியாய், நூலிலிருந்து சில வரிகள்....

*"முழுங்குவது என்பது தெரிந்து கொள்வது தான். தினசரி எதையாவது முழுங்குகிறோம். நாம் முழுங்குவது சரியா? தப்பா? என்று முடிவு செய்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது"*

*"குழந்தைகளுக்கு கற்பனை வெளி அவசியம். கற்பனை வாழ்வும் கைகூடாதவர்கள் தவறான முடிவுகளுக்கே போகிறார்கள் "*

*" தடுமாறும் குரல்கள் மேலும் தடுமாறுவது குற்றம் கண்டுபிடிக்கும் பார்வைகளால் தான். வீடுகளுக்கும் வகுப்பறைகளுக்கும் எவ்வளவு அவசரம்? ஒரு சிறு தேநீர்க் கோப்பைக்குள்ளிருந்து நீர்வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றன"*

*"குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும் என்பது சரி; கதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பது எப்படி சரி?"*

போதும்.... விட்டால், இன்னும் நான் ரசித்த அத்தனையையும் சொல்லிக் கொண்டே இருப்பேன். வாங்கி வாசியுங்கள். நீங்களும் இதைவிட அதிகமாய் ரசித்து மகிழ்வீர்கள்.

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
23/01/20

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்