ஆகுளி - வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் - 78

நூல் : ஆகுளி
ஆசிரியர்: கீதா பிரகாஷ்
வெளியீடு : அகநி வெளியீடு
பக்கங்கள்: 64
விலை : ₹ 70
வகை : கவிதைகள்

ஆகுளி - புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நானும் அதை அறிந்து கொள்ளும் ஆவலில் தான் நூலைத் தேர்ந்தெடுத்தது. ஆகுளி என்பதற்கான அர்த்தம் எதுவும் நூலின் கவிதைகளில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால், கவிதைகள் ஒவ்வொன்றும் ஆகுளியாக முழங்குகின்றன. இன்னும் ஆகுளி என்பதன் அர்த்தம் நான் கூறவில்லையல்லவா? பொறுமையாக வாசித்துக் கொண்டே வாருங்கள் இவ்வாசிப்பு அனுபவத்தின் இறுதியில் அதன் அர்த்தம் கூறுகிறேன்.

"நாம் படிக்கும் புத்தகம் முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்க செய்யாத பட்சத்தில் நாம் அதை ஏன் வாசிக்க வேண்டும். நமக்குள் படிந்திருக்கும் பனிப் பாறையை கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்." இந்நூலை வாசிக்கையில் பிரான்ஸ் காஃப்காவின் இவ்வரிகள் தான் என் நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு கவிதை வரியிலும் அத்தனை வீரியம். சில கவிதைகள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன. சில கண்ணீர் சொரியச் செய்கின்றன. சிலவோ நம் காதலின் வேர் தேடிச் செல்கின்றன. சில கவிதைகளோ நம் தேசத்தின் வேசம் போடும் அரசியல்வாதிகளின் ஆணிவேரையே அசைக்கின்றன.

நூலின் முதல் கவிதையிலேயே தன் வார்த்தை சாட்டையை சுழற்றுகிறார் நூலாசிரியர்.....
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான பொதுத் தேர்வை எதிர்க்கும் வகையிலமைந்த அக்கவிதையில் ஒரு வரி இப்படி வருகிறது.

//காடு அழித்து கிராமமாகவும்
கிராமம் அழித்து சிட்டியாகவும்
மாறிய அடுக்கு மாடிக் குடியிருப்பில்...//

பொதுவாய் நாம் கிராமம் அழிந்து உருவான நகரத்தையே வசைபாடிக் கொண்டிருக்கையில், அக்கிராமமே காட்டை அழித்து உருவானதுதானே என கன்னத்தில் அறைகிறார் நூலாசிரியர்.

பேருந்து நிலையத்தில் ஆடை கிழிந்த ஒரு பைத்தியக்காரனின் பைத்தியக்காரத்தனங்களை ஒவ்வொன்றாய் விவரித்து வரும் கீதாபிரகாஷ் அக்கவிதையின் கடைசி வரிகளை இவ்வாறு முடிக்கிறார்:

//அவிழும் நிலையில் இருக்கும்
தன் துண்டை
ஒரு கையில் இறுகப் பற்றியிருக்கிறான்
முன்னொரு ஜென்மத்தில்
நடுஜாமத்தில் யசோதையை
விட்டுச்சென்ற
மனம் பிறழ்ந்த புத்தன்//

உண்மையில் இனி எங்கு புத்தனின் சிலையையோ, உருவத்தையோக் கண்டாலும் இக்கவியும், புத்தன் ஒரு பைத்தியம் என்பதாகவும் தான் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுத்தில் அத்தனை வீரியம். இத்தொகுப்பில் நான் மிக ரசித்த கவிதையிது.

பெண்களின் நிலை பேசும் - அவர்களின் துயரம் உணர்த்தும் இந்நூலிலுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் நிச்சயம் ஆண்களை வெட்கி தலைகுனியவேச் செய்யும்.

அதிலும், தொடையிடுக்கில் குருதி வழியும் பெண்ணொருத்தியை வெறிகொண்ட மிருகம் ஒன்று துரத்துவதாய் உருவகப்படுத்திய கவிதையின் இறுதியில் நூலாசிரியர் கேட்கிறார்,

//வழிந்துபோகும் பெண் குருதியை
தீட்டெனச் சொன்ன
--------- மகன் யார்?//
என்று.....
பதிலுண்டா உங்களிடம்? காலம் காலமாய் வழியும் குருதியைக் காரணம் காட்டியே தீட்டென்று மூலையில் பெண்ணை அமர்த்தி வைக்கும் சமூகம் தன் முகத்தை முதுகுக்குப் பின் ஒளித்துக் கொள்ளுமோ என்னவோ இக்கவிதையைப் படித்தப்பின்.... இதை நாம் கேட்டால்,  சுத்தமாயிருக்கவும், ஓய்வெடுக்கவுமே நம் முன்னோர் இப்படிச் செய்தனரென்று சப்பைக்கட்டு வேறு கட்டுவர்.... அப்படியாயின் வீட்டின் பூசையறையிலன்றோ அந்நாட்களில் பெண்களை அமர்த்த வேண்டும்? உன் வீட்டு குப்பைக் கூட்டும் மூலையை விடவா அழுக்கு அதிகம் உந்தன் பூசையறையிலென்றே கேட்க தோன்றுகிறது... (கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டோமோ🤔)

கதையும் கவிதையும் காதல் வசப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தெரியாதா??? அடடா..... அப்படியாயின் உடனே இப்புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அது ஒரு பெரிய கதை. பெரிய கதை மட்டுமல்ல. சாதிப் பெருமை பேசும் பெருசுகளின்(?) உண்மை முகம் காட்டும் கதையும் கூட ....

நம் நாட்டில் அன்றாடம் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் காணும் கதை சொல்லிகளைப் பற்றியும் ஒரு கவிதை உண்டு. இக்கவிதையை வாசிக்கையில் பேருந்து என்ற நினைவுமின்றி நான் அப்படி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டேன். அதில் சில வரிகளை நீங்களும் கேளுங்களேன்......

//சேக்கிழார் எழுதிய கம்பராமாயணக்
கதையை அழகியலோடு
எடுத்துச் சொல்வார்கள்...

அடர்ந்த காட்டில் அமர்ந்து
 ஆமைக்கறி உண்டதாகவும்
 வீட்டில் செல்லப்பிராணியாக
 முதலைப் பிடித்து வளர்த்ததாகவும்
 ...................//
 என்று விரியும் இக்கவிதையை ஆள்வோர் படித்தால் இபுத்தகத்திற்கு தடை நிச்சயம். ஆமாம் தானே......

நிலமற்றுப் போன அப்பாவின் வலி சொல்லும் கவிதை தம் நிலமிழந்து வாடும் ஒவ்வொரு மனிதனின் மனவலியும் கூட....

இதற்கு மேல் எழுத உள்ளபடியே தெம்பில்லை எனக்கு. சமூகத்தின் மீதான - சமூகம் பெண் மீது நிகழ்த்தும் அத்தனை வன்முறைகளின் மீதுமான தன் கோபத்தை வார்த்தைகளில் வடித்துள்ள கவிஞர் கீதாபிரகாஷின் உணர்வுகளை என் எழுத்துகளில் பதிவு செய்வது அத்தனை பொருத்தமாயிருக்குமாவெனத் தெரியவில்லை.

ஆகுளி என்பதன் பொருள் கூறுவதாய் சொன்னேனல்லவா.... ஆகுளி என்பது ஒரு வகையான பறை. பொருத்தமான தலைப்பு. நிச்சயம் இந்நூல் சமூகத்தின் மன அழுக்கெனும் பனிப்பாறை உடைக்க ஒலிக்கும் ஆகுளி தான் என்பதில் ஐயமேதுமில்லை.

உலகைத் திறக்கும் சாவி வேண்டுமா வாசி.....
(சு)வாசிப்போம்.

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
29/01/2020

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்