விலங்குப் பண்ணை - வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் - 51

நூல் : விலங்குப் பண்ணை
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில் : க.நா.சு.
வெளியீடு : நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் : 128
விலை : ₹ 125
வகை : நாவல்

விலங்குகளின் மூலமாக குழந்தைகளுக்கு நீதி நெறி, அறிவுரைக் கதைகள் கூறலாம். அரசியல் பேச முடியுமா? முடியும் என நிரூபிக்கிறது "விலங்குப் பண்ணை".

இது இங்கிலாந்தில் உள்ள ஏதோ ஒரு விலங்குப் பண்ணையில் நடக்கும் கதையல்ல. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் நாம் அறிந்தும் அறியாமல் கடந்து செல்லும் அரசியலின் கதை.

இங்கிலாந்திலுள்ள " பெரிய பண்ணையின்" சொந்தக்காரனான கொடுமைக்காரன் ஜோன்ஸ்க்கு எதிராக அவன் பண்ணையிலுள்ள விலங்குகள் எல்லாம் கிளர்ச்சி செய்து அவனை விரட்டி பண்ணையை முழுக்க தங்களின் - விலங்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன.

அதற்குப் பின் அவை எப்படி தங்களைத் தாங்களே ஆட்சி செய்கின்றன. அனைவரும் "சரிநிகர் சமம்"  என்று தொடங்கி வென்ற புரட்சி எப்படி மீண்டும் அதே ஆண்டான் - அடிமை பாதைக்கே இழுத்துச் செல்கிறது என்பதை கதை இயல்பாய் விவரிக்கிறது.

மரத்தில் காய் காய்ப்பதற்கும், சூரியனும் நிலவும் உதிப்பதற்கும் கூட  தங்கள் ஆட்சியின் மேன்மையே காரணமென்று  மக்கள் மன்றங்களிலெல்லாம் மார்தட்டிக் கொண்டு, காலில் விழும் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் நம் உள்ளூர் அரசியலைப் போன்றே இந்நூலிலும், ஒரு பெட்டைக் கோழி, "நமது தலைவர் தோழர் நெப்போலியன் வழிகாட்டியதால், நான் ஆறு நாட்களில் ஐந்து முட்டைகள் இட்டேன்" என்றும், ஒரு பசு, "தோழர் நெப்போலியன் தலைமையால் தான் இந்த குளத்தின் தண்ணீர் இவ்வளவு இனிக்கிறது" என்றும் ஜால்ரா போடும் கூட்டமும் சேர்ந்தே வளருகிறது விலங்கு பண்ணையில்....


தலையிலிருந்து மயிர் உதிர்ந்தாலும் அதற்கு பக்கத்து நாட்டின் சதியே காரணமென்று கூறும் நமது தேசிய  அரசியலைப் போன்றே பெரும் புயல் காற்றில் மரம் சாய்ந்ததற்கும், சரியான கட்டுமானம் இல்லாத விளக்கு கோபுரம் சரிந்ததற்கும் ஸ்நோபால் பன்றியே காரணமென குறை சொல்லியே காலம் கடத்துகிறது வஞ்சகமாய் விலங்குப் பண்ணையைக் கைப்பற்றிக் கொண்ட நெப்போலியன் பன்றி.

ஆளும் கட்சியின் கைப்பாவையாய், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களைக் கூட மடைமாற்றி திசை திருப்பும் வேலையை செவ்வனே செய்யும் ஊடகங்களையே நினைவுபடுத்துகிறது நாவலில் வரும் ஸ்கீவிலர் பன்றி.

மக்களை அறியாமை இருளில் ஆழ்த்தி மோட்சம், மறுபிறவி, மேலுலகம் என பித்தேறி உளறும் கயவர்களைப் போன்றே இருக்கிறது மோஸஸ் எனும் காகம்.

தலைவன் சொல்வதே வேத வாக்கு என நம்பும் அயராத உழைப்பாளி பாக்ஸர் குதிரை நூல் முழுதும் நம்மைக் கவர்கிறது.

நாவலின் அடிப்படை இது தான்:
புரட்சி என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான். எல்லா புரட்சிகளும் தலைமையேற்பவனுக்கு வேண்டுமானால் மிக லாபகரமாய் அமையலாமே ஒழிய அவர்களையே நம்பி இருக்கும் வெகுஜன மக்களுக்கு அதனால் கடுகளவும் நன்மையில்லை. தலைமை வேண்டுமானால் மாறலாமே தவிர, உழைக்கும் வர்க்கம் என்றைக்குமே உழைக்கவே வேண்டும். எளியோரை ஏய்த்து வாய்சவடாலால் வயிறு வளர்க்கும் வீணர்கள் கூட்டம் என்றைக்கும் தன்னிலை மாற்றிக் கொள்ளவே செய்யாது.

அரசியல் என்றால் என்ன? அரசியல் குறித்த உண்மையான அர்த்தம் புரிய அவசியம் வாசிக்க வேண்டிய நூல் : ஜார்ஜ் ஆர்வெல்லின் "விலங்குப் பண்ணை"

இது 1940 களில் எழுதப்பட்ட நூல் என்பதை இன்னும் என்னால் நம்ப இயலவில்லை. இன்றைய அரசியல் சூழலை அப்பட்டமாய் உணர்த்தும் இது எக்காலத்திற்கும் அரசியலின் அரிச்சுவடியை உணர்ந்து கொள்ள ஓர் அத்தியாவசியமான நூல் என்றே கூறலாம்.

ஒரு ஆகச் சிறந்த நூலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் இந்நூலை வாங்கி வாசியுங்கள். மொழிபெயர்ப்பும் அருமை.

~ *திவாகர். ஜெ* ~
16/02/2019

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்