முனியம்ரம் - வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் : 74
நூல் : முனிய மரம்
ஆசிரியர் : பாலா
வெளியீடு : புதிய தரிசனம் பதிப்பகம்
விலை : ₹ 80
பக்கங்கள் : 80
வகை : கவிதைகள்

வாசிக்கும் போதே இதைப் பற்றி நிறைய பேரிடம் பேச வேண்டும், நிறைய நண்பர்களுக்கு இந்நூலினை - இதன் சாராம்சத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் சில நூல்களை வாசிக்கையில் தான் தோன்றும்.... அப்படித் தோன்றக் கூடிய ஒரு நூல் தான் - *"முனியமரம்"*

இந்நூலின் தலைப்பும், அதன் மேல் அட்டையுமே ஒரு பயம் கலந்த ஆர்வத்தோடு நூலினை வாங்கத் தூண்டியது.

 பொதுவாய், நூலாசிரியர்கள் நூலின் முன்னுரையில் தன்னைச் சார்ந்தோருக்கும், உதவியோருக்கும் நன்றி கூறுவர். இங்கு, திரு. பாலாவும் அதைத்தான் செய்துள்ளார். ஆனால் சற்றே வித்தியாசமாக. ....

// *"என் அம்மா மூலம்தான்*
*நீ எனக்கு அறிமுகமானாய்...."*
.............
.............
*உனக்காய் என்ன செய்தேன்?*
*இதோ இந்தக்*
*கவிதைகளை வைத்துக்கொள்"//*

என்று தமிழுக்கு அர்ப்பணிப்பதோடு அதையே ஒரு இரு பக்க கவிதையாய் தீட்டி நம்மை காந்தப் பரப்பில் சிக்கிய சிறு இரும்பாய் சட்டென நூலுக்குள் இழுத்து விடுகிறார்....

*"மாற்று முகங்கள்"* என்ற கவிதையில்,

*"ஒவ்வொருவரிடமும் பேசும்போது*
*ஒரு முகத்தை மாட்டிக்கொள்ள நேரிடுகிறது"* என்கிறார்.

உண்மை தானே....

பல தருணங்களில் இதைத்தானே செய்கிறோம் நாம்...
ஒரு கட்டத்தில் நம் உண்மையான முகம் என்னவென்பதையே கூட மறந்தும் விடுகிறோம் அல்லவா?

தொடர்ந்து, அக்கவிதையிலேயே,

*"பொய்மைகளின் நாற்றம் தாங்காமல்*
*அழத் தொடங்கி விடுகின்றன முகத்தின் திசுக்கள்"*
என்று முடிக்கிறார்.

இப்படித்தான் பல நேரங்களில் நேர்ந்துவிடும் போலும்....

உங்களை வெறுப்பவர்களை நீங்கள் என்ன செய்வீர்கள்? இதோ அதையும் *"கசியும் இரணங்கள்"* என்ற தலைப்பிட்ட கவிதையில் பாலாவே நமக்கு கூறுகிறார்.

*"நிராகரிப்பவர்களை*
*நிராகரிப்பதைத் தவிர*
*வேறெதுவும் செய்ய முடிவதில்லை*
*அவர்களுக்கு எதிராக"*

அவ்வளவுதான்.... மிக எளிய வழிதானே....

இப்புத்தகத்திலிருந்து நான் மிகவும் ரசித்த கவிதை இது:

(இதைச் சற்று சத்தமின்றி மெல்லிய குரலில் வாசியுங்கள்.  ஒருவேளை நீங்கள் வாசிப்பது என் இல்லத்தரசியின் காதில் விழுந்து, ஓஹோ உனக்கு அவ்வளவு ஆகிவிட்டதா? என்று நாளை முதல் எனக்கு சோறு போடாமல் விட்டால் அந்த பாவம் உங்களைச் சும்மா விடாது)

// *"அதே அளவு உப்பு*
*அதே அளவு புளிப்பு*
*அதே அளவு காரம்*

*அம்மாவின் சமையலை*
*அப்படியே ஆக்கி வைத்தாள்*
*மனைவி.*

*ஆனால்,*
*கடைசிவரை தேடியும்*
*கிடைக்கவேயில்லை அதில்*
*அம்மாவின் வாசனை"*//

எத்தனை அருமையான, ஆழமான வரிகள் இவை........
இவ்வரிகளை என் அம்மாவிடமும் வாசிக்க சொல்லி கொடுத்தபின் அவர்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே..... அட்டா....!!!
நன்றி திரு. பாலா...

நெஞ்சைத் தொட்ட மற்றொரு கவிதை - *மூன்றாம் சாதி*

அக்கவிதையில்,

// *"ஆண் என்றால் - விலை பேசலாம்*
*பெண் என்றால் - விற்றுவிடலாம்*
*வியாபாரத்திற்கு ஆகமாட்டோம் என்றே*
*வீட்டைவிட்டு விரட்டப்பட்டவர்கள் நாங்கள்*
................
................
*எங்கள் அலங்காரம்* *அதிகமாய் தெரியும்*
*அளவிற்கு*
*எங்கள் அவலங்கள் தெரியுமா உங்களுக்கு? "*//

நிச்சயம் இக்கவிதையினை வாசித்தபின் பொது இடங்களில் நீங்கள் காணும் மூன்றாம் பாலினத்தாரின் மீது உங்களுக்கு ஒரு மரியாதை தோன்றும் என்பது என் எண்ணம்.

இந்த தேர்தல் சமயத்திற்கு பொருத்தமான ஒரு கவிதை - *எச்சில் பருக்கை*

// *" மனிதனாய் மதிக்கப்படாதவர்கள்*
*இருகரம் கூப்பி*
*தெய்வமாய்த் தொழப்படலாம்"*//
எனத் தொடங்கும் அக்கவிதை
// *"கடைசியில்*
*அவர்கள் தின்ற*
*எச்சில் பருக்கைகள்*
*உங்கள் மீது துப்பப்படலாம்*

*நீங்கள் தின்றாலும்*
*இல்லையென்றாலும்*
*அவர்கள் வீசும்*
*வலைக்குள்தான்* *வாழ்க்கை*
*அடுத்த ஐந்தாண்டுகள்"* //

சிந்திக்கத் தூண்டும் வரிகள்....

மதுவிற்கு அடிமையானோரை நூலாசிரியர் இவ்வாறு சாடுகிறார்...

// *"எப்போதாவது என்று தொடங்கி*
*எப்போதும் என்று ஆகிப்போன*
*ஆல்ககால் அருந்தும்*
*ஆறறிவு அஃறிணைகள்"*//

இந்நூலினை வெறும் கவிதைகளால் ஆன காகிதங்கள் என்று புறந்தள்ள இயலா அளவிற்கு பல தளங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் சுமந்து நம்மை அட.... போட வைப்பதோடு அழகான படிப்பினைகளையும் அள்ளித்தூவிச் சென்றிருக்கிறார் நூலாசிரியர் திரு. பாலா அவர்கள்.

இந்த வரியைக் கொஞ்சம் கவனியுங்களேன்....

// *"ஆசைப்பட்டதை*
*அடைந்தவன் - உழைப்பு என்கிறான்*
*தோற்றவன் - என் நேரம் என்கிறான்"*//

எவ்வளவு ஆழமான வரிகள். எதார்த்தமாய் தன் போக்கில் கூறிவிட்டிச் செல்கிறார் ஆசிரியர்.

நூலின் தலைப்பிலான *"முனியமரம்"* என்ற கவிதையை கட்டாயம் வாசித்துப் பாருங்கள். அது உங்களது பால்யகால நினைவுகளெனும் ஓடையில் உங்களை கரையேறச் செய்யாது நீந்த வைக்கும்.

இறுதியாய், கவிஞரின் வார்த்தைகளிலிருந்தே சில வரிகளைச் சொல்லி நிறைவு செய்தால் சிறப்பாய் இருக்குமென கருதுகிறேன்....

// *"கவனித்துப் பாருங்கள்*
*எல்லாம் அழகாய் தெரியும்*
*மனசுக்கு"*//

நூல்கள் அறியாமை இருளால் பூட்டப்பட்ட நம் மனத்தினை திறக்கும் அறிவு சாவிகள் மட்டுமல்ல. ஆழ் மனத்தில் சிறு கறையும் படியவிடாது காக்கும் மாசு நீக்கிகளும் அவையே..... வாசிப்போம். வளம் பெறுவோம்....

வாசிப்பும், பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
12/12/2019

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்