சஞ்சாரம் - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம்:
நூல்:
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள்: 360
விலை : ₹340
முதல் பதிப்பு : பிப்ரவரி 2018
சஞ்சாரம்ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள்: 360
விலை : ₹340
முதல் பதிப்பு : பிப்ரவரி 2018
சஞ்சாரம் - கூகுளில் இதன் பொருள் தேடினால் பயணம், உலா என்பதான அர்த்தங்கள் கிடைக்கின்றன. இந்நாவல் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றிய - அதன் கலைஞர்கள் பற்றிய - அவர்கள் படும் துயரம், அவர்களின் பெருமையென பல்வேறு தரப்பட்ட தகவல்களை அலுப்பூட்டாமல் பல மனிதர்களின் கதைகளின் வழியே சைக்கிள் காரியரின் பின் அமர்ந்து செல்லுவதைப் போன்ற ஒரு மகிழ்வான பயணத்தைப் போல நமக்கு உணர்த்தி நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர்.
பொதுவாகவே, எஸ்.ரா.வின் எழுத்துகளில் உவமைகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வகையில் இந்நாவலின் முதல் பக்கத்திலேயே அவர் காட்டும் உவமை நம்மை சிலிர்க்க வைக்கிறது. அடுப்பு எரிவதை நாம் தினமும் பார்க்கிறோம் தான். ஆனால், பெரிதும் அதைப் பற்றி ஏதும் சிந்திப்பதில்லை. அதற்கு இவர் கூறும் உவமையைக் கொஞ்சம் கேளுங்களேன். "கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால்குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதும் அடுப்பை விட்டு தலையை வெளியே எட்டிப் பார்த்து அடங்குவதுமாக இருந்தது". என்னே ஒரு கற்பனை வளம்!
இனி நாவல் குறித்து.....
ரத்தினமும், பக்கிரியும் ஓதியூரைச் சார்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள். அவர்கள் மூதூரில் உள்ள கருப்பசாமி கோவிலின் வேட்டைத் திருவிழாவிற்கு நாதஸ்வரம் வாசிக்கையில் அவ்வூர் மக்களுக்குள் நிகழும் கைகலப்பில் பக்கிரியின் பிடறியில் அடி விழுவதில் தொடங்குகிறது நாவல்.
அதன்பின் தன்னை அடித்தவனை பக்கிரி திருப்பி அடித்து விட அவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள். இரவோடு இரவாய் கோவில் அருகிலுள்ள மண்டபத்தின் கீற்றுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து ரத்தினமும், பக்கிரியும் தப்பித்து, பக்கிரியின் அக்கா வீடு இருக்கும் கொடுமுடிக்கு வந்து விடுகின்றனர். அத்தீவிபத்தில் சிலர் இறந்து விட இவர்களைத் தேடும் போலீஸிடம் இவர்கள் சிக்கினார்களா இல்லையா என்பதே கதை.
கதையின் கரு என்னவோ சாதாரணமானது தான். ஆனால் அது எடுத்துக் கொண்ட களம் மிக பரந்துபட்டது.
சமூகத்தில் நாதஸ்வரக் கலைஞர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை கோவில் திருவிழா, திருமணம் என தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் படும் அவலத்தை உணர வைக்கிறார் ஆசிரியர்.
நாதஸ்வரக் கலையில் பலர் புகழ்பெற்றிருந்தாலும் எண்ணிக்கையிலடங்கா கலைஞர்கள் இன்றும் வறுமையிலேயே உழன்று வருவதை எண்ணுகையில் வருத்தமாக தான் உள்ளது.
மாலிக் கபூர் படையெடுப்பின் போது அவரையே ஆச்சரியப்படுத்திய நாதஸ்வரக் கலைஞர் லட்சையாவை அவர் தன்னுடன் அழைத்துச் சென்று கில்ஜியிடம் அன்பளிப்பாய் வழங்க தனது இசைத் திறனால் கில்ஜியையே வியப்பில் ஆழ்த்திய லட்சையாவை நினைக்கையில் பிரம்மிப்பே மிஞ்சுகிறது. வடக்கத்தி இசைக் கருவிகள் தென்னிந்தியாவில் பிரபலமான அளவிற்கு தமிழகத்தின் மங்கல இசையான நாதஸ்வரம் வடக்கில் இன்று வரை சரியாய் சென்றடையாததற்கு காரணத்தையும் லட்சைய்யாவின் கதை வழியாகவே புனைகிறார் ஆசிரியர்.
கரிசல் கிராமங்களைப் பற்றி அறியாதவர்களுக்குக் கூட அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை பல்வேறு இடங்களில் நாவலினூடே படம் பிடித்து காட்டுகிறார்.
கதையை வாசித்து முடித்த வெகு நேரத்திற்கு பிறகும் கண் தெரியாத இசைஞன் "தன்னாசி" உங்கள் நினைவிலிருந்து அகலாமல் உடன் பயணிப்பார்.
பல இடங்களில் நாதஸ்வர கலைஞர்கள் வாசிப்பதை எஸ்.ரா. விவரிக்கையில் ஏதோ அவர்கள் நம் காது மடல்களுக்கு அருகில் அமர்ந்து தேனிசையை நம் காதுக்குள் செலுத்துவதாய் ஒரு தோற்றம் உண்டாக்குவது நூலாசிரியரின் எழுத்து செய்யும் மாயமின்றி வேறென்ன?
நாதஸ்வர இசையைக் கேட்டு அதில் மயங்கி இந்தியாவிற்கே வந்து நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் வெள்ளைக்கார ஹாக்கின்ஸ், கடும் மத எதிர்ப்பையும் மீறி நாதஸ்வரம் பயிலும் போலியோவால் தனது காலினை இழந்த முகமதிய சிறுவன் அபு, சமையல் வேலையைக் கூட விட்டுவிட்டு நாதஸ்வர இசை கேட்க சென்றுவிடும் வாய் பேச இயலாத ஊமை ஐயர் போன்றோர் நாவலில் நம் மனம் கவர் நாயகர்களாகி விடுகிறார்கள்.
நாதஸ்வர கலைஞர்கள் மட்டுமின்றி கரகாட்ட கலைஞர்களும் எவ்வளவு துன்பத்தில் சிக்குண்டு மக்களை மகிழ்விக்கின்றனர் என்பதை கரகாட்ட பெண்கள் வாயிலாய் உணர்த்துகிறது நாவல்.
என்னதான் கடவுளே ரசித்துக் கேட்கும் இசை என பெருமைப்பட்டுக் கொண்டாலும் மக்கள் மத்தியில் என்னமோ நாதஸ்வரத்திற்கு இரண்டாம் தர இடமாய் தான் இருக்கிறது.
அத்தோடு கோவில், திருமணம் முதலான நிகழ்ச்சிகளில் வாசிக்கும் இவர்களை பெரிய அளவில் நாம் கண்டு கொளவதுமில்லை. இதுவரை குறைந்தபட்சம் ஒரு இரண்டு நிமிட நேரம் கூட நின்று அவர்களின் வாசிப்பை கவனித்து உரிய பாராட்டுதலை அவர்களுக்கு வழங்கியதில்லை என எண்ணினால் நமக்கே சற்று தலைகுனிவாகத் தான் இருக்கிறது.
இனியாகிலும் இதுபோன்ற இடங்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் இசையை காது கொடுத்து ரசிக்க வேண்டும்.....
இறுதியாக நாவலிலிருந்து சில வரிகள்:
*"ஆண்களைத் திருவிழா மூர்க்கமாக்கி விடுவதைப் போல பெண்களை பேரழகிகள் ஆக்கிவிடுகின்றன"*
*"மனுசனுக்கு கொடுக்கிற தண்டனையிலேயே எது பெரிசு தெரியுமா? பிடிக்காதவங்க கொடுக்கிற சோற்றை திங்குறது தான்"*
*"ஊரோடு உள்ள உறவை அறுத்துக் கொள்வது எளிது ஒட்டவைப்பது எளிதானதில்லை"*
*"சிறுவயதில் எப்போது பெரியவன் ஆவோம் என ஏங்கிக் கொண்டிருந்தோம். பெரியவன் ஆன பிறகோ திரும்ப அந்த சிறுவயது கிடைக்காதா என ஏக்கமாக இருக்கிறது."*
நூலில் உள்ள சிறு சிறு அச்சுப் பிழைகள் மற்றும் நிறுத்தற்குறி பிழைகள் வாசிப்பதில் தடங்கலை ஏற்படுத்துவதாய் உள்ளன. தேசாந்திரி பதிப்பகம் இவ்விசயத்தில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் சிறப்பாய் இருக்கும்...
தமிழின் தொன்மையான நாதஸ்வர இசை குறித்தும் அதனை வாழ்க்கையாய் கொண்டோரினைப் பற்றியும் அறிய ஓர் அரிய நூல் - சஞ்சாரம்....
~ *ஜெ. திவாகர்* ~
05/11/2018
05/11/2018

Nice to read
ReplyDeleteமிக்க நன்றி...🙏
Delete