குட்டி இளவரசன் - வாசிப்பு அனுபவம் 80

வாசிப்பு அனுபவம் - 80

நூல் : குட்டி இளவரசன்
ஆசிரியர் : அந்த்வான் து செந்த் எக்சுபெரி (ப்ரெஞ்சு மொழியில்)
(தமிழில்) வெ.ஸ்ரீராம், ச.மதனகல்யாணி
வெளியீடு : க்ரியா
பக்கங்கள் : 118
விலை :₹ 125
வகை : சிறார் நாவல்

தப்பு தப்பு. இந்த குட்டி இளவரசன் நூலின் வகை என்னவென்று கூறினேன்? சிறார் நாவல் என்றா கூறினேன்? இல்லை. அதை அழித்து விடுங்கள். இது சிறார்காளுக்காக எழுதப்பட்ட நாவல் தான். ஆனால் சிறார்களுக்கு மட்டுமேயானது அல்ல. பெரிதும் பெரியவர்களுக்கானது தான் இது.

அந்தவான் து செந்த் எக்சுபெரி - ஒரு விமானியாக பணியாற்றியவர். அவர் தானே கூறுவது போல் அமைந்த நாவலிது. 

தனக்கு ஆறு வயதாக இருந்தபோது தான் படித்த ஒரு கதையைக் கொண்டு பாம்பு யானையை விழுங்குவதைப் போன்று ஒரு படம் வரைகிறார் எக்சுபெரி. ஆனால் அதைக் காணும் பெரியவர்கள் அதனை தொப்பி போல் உள்ளதாகக் கூறி கிண்டல் செய்வதுடன் உனக்கு ஓவியமெல்லாம் வராது வேறு உருப்படியாக ஏதும் செய் என்ற தொனியில் அறிவுரையும் வழங்க அன்றோடு தன் ஓவியம் வரையும் ஆர்வத்திற்கு முழுக்கு போடுகிறார்.

*"பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது"*

இவ்விடத்தில், ஒட்டுமொத்த உலகக் குழந்தைகளின் குரலாக ஆறு வயது எக்சுபெரியின் குரல் ஒலிக்கிறது.

அதன் பின்னர், படித்து ஒரு விமானியாகும் அவர் விமானத்தில் செல்கையில் அவரது விமானம் ஒரு நடுக்காட்டில் பழுதடைந்து விழ அங்கு தனியாளாய் எட்டு நாட்களுக்கு வெறும் குடிக்க நீர் மட்டுமே கைவசம் உண்டு என்ற நிலையில் சிக்கிக் கொண்டு பழுதடைந்த விமானத்தை சரிசெய்து கொண்டிருக்கையில் அவருக்கு, *"தயவுசெய்து எனக்கு ஒரு ஆடு வரைந்து கொடு"* என்று ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தால் ஒரு சிறிய பையன் நிற்கிறான். அதுதான் நம் *"குட்டி இளவரசன்"*

குட்டி இளவரசன் ஒவ்வொரு நாளும் தன் கிரகத்தைப் பற்றிய புதுப்புது தகவல்களைக் கூறுகிறான். அதிலிருந்து, அவனது கிரகத்தில் அவன் மட்டுமே உண்டு. அவனோடு அவன் முட்டியளவே உள்ள மூன்று குட்டி எரிமலைகள், அவன் விரும்பும் மூன்று இதழ்களுடைய ரோஜா ஆகியவை மட்டுமே உண்டு என்பதை அறிகிறார்.

மேலும், குட்டி இளவரசன் பூமிக்கு வருவதற்கு முன்பு ,
-->அரசன் ஒருவன் மட்டுமே வாழும் ஒரு கிரகம்,
-->தற்பெருமைக்காரன் ஒருவன் வசிக்கும் கிரகம்,
-->குடிகாரன் ஒருவன் வாழ்ந்து வரும் கிரகம்,
-->பிஸினஸ்மேன் வாழும் கிரகம்,
-->தெருவிளக்கேற்றுபவன் ஒருவன் மட்டுமே வாழும் கிரகம்,
-->புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கும் புவியியலாளன் வசிக்கும் கிரகம்
என ஆறு கிரகங்களைக் கடந்து ஏழாவதாக பூமிக்கு வருகிறான்.

ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு புதுவித அனுபவம். ஆயினும் அனைத்து கிரகங்களிலும் அவன் அறியும் உண்மை ஒன்றே ஒன்று தான். அது: *" பெரியவர்கள் முற்றிலும் விசித்திரமானவர்கள்"*

அரசனை சந்திக்குமிடத்தில் அரசன் கூறும் ஒரு வாக்கியம் மிகவும் சிந்தனைக்குரியது. *"நீயே உனக்கு நீதி வழங்கிக்கொள். அதுதான் மிகக் கடினம். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும் தனக்குத்தானே நீதி வழங்கிக் கொள்வது மிகக் கடினம். நீயே உனக்குச் சரியானபடி நீதி வழங்கிக் கொள்வதில் வெற்றி கண்டால், நீ ஒரு உண்மையான ஞானி"*
நம்மில் எத்தனை பேர் ஞானியாய் இருப்போம்???

குட்டி இளவரசன் தனது கிரகத்தில் தான் கண்ட ஒரே ஒரு விசித்திரமான பூ (ரோஜா) மீது காதல் கொள்கிறான்.  பூமியில் ஒரே தோட்டத்தில் ஐயாயிரம் ரோஜாக்களை வளர்க்கிறார்கள். ஆனால் அவற்றிடம் அவர்கள் தேடுவது கிடைக்கவில்லை என்பதை அறிந்து வருந்துகிறான். எதையும் கண்களால் அல்ல. இதயத்தால் தேட வேண்டும் என்பதையும் எக்சுபெரிக்கு உணர்த்துகிறான். மேலும் குட்டி இளவரசனிடம் பழக்கப்படுத்துதல் குறித்து நரி கூறும் போது அது உரைக்கும் இவ்வார்த்தைகள் நம் அத்தனை பேருக்குமானது. *"மனிதர்களுக்கு இப்போதெல்லாம் எதையும் தெரிந்துகொள்ள நேரம் இருப்பதில்லை. தயார்செய்த பொருட்களையே கடைகளில் வாங்குகிறார்கள். ஆனால் கடைக்காரர்கள் நண்பர்களாக இல்லாததால் மனிதர்களுக்கு நண்பர்களே இல்லை."*

நூல் முழுதும் பெரியவர்களைப் போட்டு புரட்டி எடுக்கிறார் நூலாசிரியர். உண்மையில் குழந்தைகள் மனநிலையிலிருந்து என்றைக்குமே பெரியவர்கள் யோசிப்பதே இல்லை என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தானே..... புத்தகத்தின் 22 ஆம் பக்கத்தில் வரும் ஒரு பத்தி போதும் உள்ளபடியே பெரியவர்கள் அத்தனை பேரின் எண்ணமும் எப்படி உள்ளது என்பதை படம்பிடித்துக் காட்டி விடுகிறார் அந்த்வான் து செந்த் எக்சுபெரி.

முதலிலேயே ஒன்று சொல்ல நினைத்தேன்... மறந்துவிட்டேன் பாருங்கள். இந்நூலை நீங்கள் வாசிக்க வேண்டுமென விரும்பினால் முதலில் உங்களுக்குள்ளிருக்கும் பெரிய மனிதத் தன்மையை சற்றே ஓரங்கட்டி வைத்துவிட்டு உங்களின் குழந்தைப்பருவத்திற்கு மாறி படிக்கத் தொடங்குங்கள். நிச்சயம் ஒரு சிறந்த உலக சிறார் நாவலை வாசித்த திருப்தி உங்களுக்குள் பரவுவதை உணர்வீர்கள்.

என்ன குழந்தையாய் மாற தயாராகிவிட்டீர்கள் தானே?

வாசிப்பும் பகிர்வும்

~ *திவாகர். ஜெ* ~
10/02/20

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்