வாசிப்பு அனுபவம் - 52:

நூல் : எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர் : ச. மாடசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 128
விலை : ₹. 100

*"யோசனைகளுக்குப் பஞ்சமில்லை. தினசரி உதித்தபடி இருக்கின்றன. யோசனைகளின் வடிகாலாக பேச்சு இருக்கிறது. ஏமாளிக் காதுகள் கிடைத்து விட்டால் நிற்காத பேச்சு! பேசிப் பேசியே பல யோசனைகளைக் கரைத்தாயிற்று.*

*யோசனைகள் பேச்சைத் தாண்டி செயல் வடிவம் பெறுவது என்னைப் பொறுத்தவரை அபூர்வமாக இருக்கிறது."*

என்ற அற்புதமான முன்னுரையுடன் ஆரம்பமாகிறது திரு. ச. மாடசாமி அய்யா அவர்களின் இந்த *"எனக்குரிய இடம் எங்கே?"* நூல்.

பள்ளி மாணவர்களின் சில செய்கைகளால் மனம் நோகும் தருணங்களில் இந்நூலை வாசிக்கும் ஆசிரிய பெருமக்கள் நிச்சயமாய் மாணவர்களின் உள்ளங்களை அறிந்து எளிதாய் வகுப்பினை வழிநடத்துவர் என்பது உறுதி.

அள்ள அள்ளக் குறையா அமுத சுரபியாய் இந்நூலில் நாம் கற்றுத் தெளிய ஏராளம் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

*"அட, போய்யா! வகுப்பறை என்ன நீங்க முதல் போட்டு நடத்துற பெட்டிக்கடையா? நீங்க நெனக்கிற படியே அதுவும் இருக்க! நீங்க போற வழியிலேயே மாணவர்களும் கண்ணக் கட்டிக்கிட்டு வரணுமா? அப்புறம்..... பையன் சிரிக்கிறது, வெளிய பாக்கிறது எல்லாத்தையும் உங்களுக்கு எதிரான விசயமா ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க? அவனைத் தண்டிக்கிறதா நெனச்சி உங்களத் தான் தண்டிச்சிக்கிறீங்க! கேட்டா 'ஒழுக்கம்'னு பேச ஆரம்பிச்சுருவீங்க! வகுப்பறைங்கறதே ஒரு கூட்டு முயற்சி சார்! கூட்டு முயற்சி தான் அடிப்படை தர்மம். அடிப்படை ஒழுக்கம்."*

இது ஏதோ அய்யப்பராஜ் என்ற ஒரு ஆசிரியருக்கு சக ஆசிரியரான சந்திரன் கூறும் அறிவுரையாக எனக்குத் தோன்றவில்லை. நம் ஆசிரிய சமுதாயம் அத்தனைக்குமான ஒரு பொது சாசனமாகவே இவ்வாக்கியங்கள் என்னுள் ஒலிக்கின்றன.

என்னதான் ஆசிரிய மையக் கல்வி என்பதை மாற்றி மாணவ மையக் கல்வி மாணவர் மையக் கல்வி என்று மார்தட்டினாலும் இன்றைக்கு வரையும் ஆசிரியர் சொல்வதைத் தானே மாணவர் கேட்க வேண்டிய நிலையில் உள்ளனர். நூலின் ஓரிடத்தில்,

*"உயிரோட்டமான வகுப்பறைன்னு சொல்றீங்களே! 'வகுப்பறையின் உயிர்'னு எதைச் சொல்றீங்க? ஆசிரியரின் திறமையையா?*
*இல்லை! மாணவரின் பங்கேற்பை! இளம் மூளைகள் சிந்திக்காமல், சிந்தித்ததைப் பேசாமல், பேசி விவாதிக்காமல் வகுப்பறையில் உயிர் தோன்றாது!*

அர்த்தம் பொதிந்த வரிகள்...

நம் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதை இவ்வரிகள் தெளிவாய் உரைக்கின்றன.
*"பூட்டிய வாய்களும் அவற்றின் உறைந்த மெளனமுமே வகுப்பறையின் இலக்கணமாகியுள்ளன. அர்த்தமுள்ள உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியரின் ஒற்றைக் குரலே வகுப்பறையின் சங்கீதமாக உள்ளது."*
இந்நிலை மாற வேண்டுமென்பதே நம்மில் பெரும்பாலானோரின் விருப்பம்.

நூல் முழுக்க ஒரு கல்லூரி ஆசிரியரின் அனுபவமாக இருந்தாலும் கூட, இது பள்ளி ஆசிரியர்களுக்கும் 100% பொருந்தக் கூடிய நூலாகவே அமைந்துள்ளது. ஆம். எல்லா நிலையிலும் ஆசிரியர்கள் தாங்கள் தான் உயர்ந்தோர் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.... அப்படியாயின் இது நம் அனைவருக்குமான நூல் தான்.

என்னதான் பல நேரங்களில் மாணவரை மையப்படுத்திய பல செயல்பாடுகளோடு புத்துணர்வாய் வகுப்பறையில் நுழைந்தாலும் ஒரு சில மாணவர்களின் குறும்புத்தனத்தால் என் ஒட்டு மொத்த பொறுமையும் எல்லை கடந்து,  நம் அணுகுமுறை தவறோ என்று விரக்தியின் நுனியில் பலமுறை நின்றதுண்டு. இனி அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயம் இந்நூலிலுள்ள கீழ்கண்ட வரிகள் நினைவில் வரும்.

*" லட்சியத்தின் குறி தப்புவது அடிக்கடி நிகழக்கூடிய காரியம் தான். அது தோல்வியல்ல. குறி தப்பியதும் சோர்வடைந்து இலக்கைக் கைவிட்டால் அதுதான் தோல்வி. செய்து முடித்த காரியத்தைத் திரும்பத் திரும்ப பொறுமையாக பரிசீலித்துப் பார்ப்பதுதான் லட்சிய வாதிக்கு அழகு"*

ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான வரிகள் அல்லவா இவை?

ஆசிரியர் என்றாலே எல்லாம் அறிந்தவரா என்ன? இந்த வரிகளை கவனியுங்களேன்....

*"புத்தகங்களில் எத்தனைக் கற்ற ஆசிரியரிடமும் மாணவரிடம் கற்க வேண்டிய அனுபவம் எப்போதும் பாக்கி இருக்கிறது, தீராதக் கடன் போல!"*

உணர்வோமாக.....

*"நம்முடைய பணியில் எத்தனையோ மனக்குறைகள் நமக்கு உண்டு. எவ்வித அதிகாரமும் இல்லாத வேலை! வீட்டுக்கு வந்தாலும் தொடரும் வேலை! பெரிய பள்ளிகளில் (கல்லூரிகளில்) கூட ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடையாது.*
*எவ்வளவோ இல்லை. ஆனால் நம்மிடம் வகுப்பறை இருக்கிறது. அங்கு நம் நரைத்த முடியையும் கறுப்பாக்கக்கூடிய துடிப்பான இளம் சந்ததியோடு உரையாட ஒரு வாய்ப்பு! இளம் சந்ததிக்கு வடிவம் கொடுத்து உருவாக்க ஒரு வாய்ப்பு!*
*இது என்ன சாதாரண வாய்ப்பா? உருவாக்குவது என்றால் லேசான காரியமா? பணிகளில் உயர்ந்த பணி அது. படைப்புக்கு இணையான பணி.*
*அதைப் போகிற போக்கில் முயற்சியும் அக்கறையும் இல்லாமல் செய்து விட முடியாது."*

மனதில் நிறுத்தி நிதமும் உருபோட வேண்டிய உன்னத வரிகள்.....

ஆசிரிய நண்பர்களே!
மாணவர்களால் நீங்கள் மிகுந்த மன வருத்தமடைவதாய் எப்போதேனும் வேதனைப்பட்டிருக்கிறீர்களா? அப்படியாயின் இது கட்டாயம் உங்களுக்கான நூல் தான்....
அவசியம் வாசியுங்கள். உங்களுக்குள்ளே புதிதாய் ஒரு பிரகாசம் மிளிர்வதை உணர்வீர்கள்....

~ *ஜெ. திவாகர்* ~
22/02/2019

Comments

Popular posts from this blog

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

கதவு - வாசிப்பு அனுபவம்