125-பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
வாசிப்பு அனுபவம் - 125
நூல் : பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
ஆசிரியர் : சத்யஜித்ரே
வெளியீடு : Books for Children
பக்கங்கள் : 120
விலை : ரூ. 80
சத்யஜித்ரே - TNPSC தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்த தருணத்தில் பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்காக படித்த பெயர் இது. அவருடைய முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி பல விருதுகளைப் பெற்றது என்ற வகையில் தான் சத்யஜித்ரே என்ற பெயரைத் தெரியும். ஆனால், ”பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்” என்ற இந்நூலின் முன்னுரையை வாசிக்கையில் தான், அவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, ஓவியர், எழுத்தாளர், மிகச் சிறந்த துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் வித்தகர் என்பதையெல்லாம் அறிய முடிந்தது.
பொதுவாகவே சத்யஜித்ரே-வின் துப்பறியும் கதைகளின் நாயகன் - ஃபெலுடா. ஆனால், நாவல் முழுவதும் ஃபெலுடாவின் ஒன்றுவிட்ட சகோதரனான தபேஷ் சொல்வது போல தான் எழுதியிருப்பார். இந்நாவலும் ஃபெலுடாவின் துப்பறியும் நாவல் வகையைச் சார்ந்தது தான்.
ஃபெலுடா , தபேஷ் மற்றும் துப்பறியும் நாவல் எழுதுபவரான ஜடாயு என்கிற லால்மோகன் பாபு மூவரும் துர்கா பூஜையைக் காண்பதற்காக வாரணாசிக்கு செல்கின்றனர். அங்கே தந்தை மகனான அம்பிகா கோஷல் மற்றும் உமாநாத் கோஷல் அவர்களின் பாரம்பரிய குடும்பச் சொத்தான சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போய்விட்டது என்ற வழக்கானது ஃபெலுடாவிடம் வருகிறது. அவர் அது குறித்த தனது விசாரணையினைத் தொடங்குகிறார். அச்சமயத்தில் வில்லனான, மகன்லால் ஃபெலுடா இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது என்று கொடூரமான முறையில் மிரட்டி அனுப்புகிறார். அதன் பின், ஃபெலுடா அவ்வழக்கின் சிக்கலை எப்படி தீர்த்தார்? என்பது தான் மீதிக்கதை.
உமாநாத் கோஷலின் மகனான ருக்கு நிறைய துப்பறியும் நாவல்களை வாசித்து விட்டு தன்னையும் அதில் வரும் கதாநாயகப் பாத்திரங்களாக - கேப்டன் ஸ்பார்க் என தன்னை சித்தரித்துக் கொண்டு, செய்யும் செயல்கள் வயதுக்கு மீறிய செயல்களாக - சாகசங்களாக நமக்கு தோன்றினாலும், சிறுவர்கள் பார்க்கும் - கேட்கும் விசயங்கள் அவர்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.
இதற்கிடையில் வாரணாசிக்கு வரும் மீன் சாமியாருக்கும் பிள்ளையார் சிலை திருட்டுக்கும் இருக்கும் தொடர்பு, உமாநாத்தின் உடனிருந்தே சிலையை அபகரிக்க முயற்சித்து நல்லவன் போல் நடிக்கும் விகாஸ் பாபுவை ஃபெலுடா கண்டுபிடிக்கும் சாதுர்யம் என நாவல் முழுவதும் நம்மை வசீகரிக்கும் நிகழ்வுகள் பலவுண்டு.
ஒரு சிறந்த துப்பறியும் நாவலை வாசிக்க வேண்டுமென்ற விருப்பமிருப்போர் தாராளமாக சத்யஜித்ரேவின் ஃபெலுடா கதை வரிசைகளை வாங்கி வாசிக்கலாம் என்ற நம்பிக்கையினை இந்நூல் ஏற்படுத்துகிறது.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ
20.12.2020

Comments
Post a Comment